கவலை போக்கும் கலை

கவலை போக்கும் கலை
Updated on
2 min read

வரவேற்கப் புன்சிரிப்பு, வசீகரிக்க அலமாரிகளில் வண்ண வண்ண ஓவியங்கள், ஆவலைத் தூண்டும் அழகிய கைவினைப் பொருட்கள், மேஜை மீது அடுக்கி வைத்திருக்கும் டிரெண்டி காகித நகைகள் என ஓய்வுபெற்ற ஆசிரியர் ராணி தேவராஜின் வீடு பார்க்கப் பார்க்க நிறைவாக இருக்கிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் அவருடைய வீட்டை அலங்கரிப்பவை எல்லாமே அவர் கைவண்ணத்தில் உருவானவை என்பது சுவாரசியம் கூட்டுகிறது.

அரசு உதவி பெறும் ஒரு பள்ளியில் 35 ஆண்டுகள் கல்விச் சேவை, லயன்ஸ் கிளப்பின் நல்லாசிரியர் விருது, பணிபுரிந்த காலத்தில் ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காத அர்ப்பணிப்பு, இத்தனைக்கும் மேலாகத் தனது மூன்று பிள்ளைகளையும் டாக்டர், இன்ஜினீயர் என நல்ல நிலையை அடைய வைத்தது என ஒரு பூரண வாழ்க்கையை வாழ்ந்துவிட்டதாக நினைத்த ராணிக்குப் பேரிடியாக வந்தது அந்த நிகழ்வு. 2011-ல் அவருடைய மகன் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவத்தால் நிலைகுலைந்து போனார் ராணி.

பேரிழப்பு தந்த வெறுமை அவரை வெகுவாகப் புரட்டிப்போட்டது. மீளாத்துயர்தான், ஆனாலும் அவரை மீட்டெடுக்க வேண்டும் என்பதிலேயே அவரது குடும்பத்தினர் கவனம் இருந்தது.

மகள் தாய்க்கு ஆற்றிய உதவியாக, ராணியின் மகள் ஜோதி (பல் மருத்துவர்) இணையத்தில் பேப்பர் ஜுவல்லரி செய்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டு தன் தாய்க்கும் அதைப் பயிற்றுவித்திருக்கிறார்.

மீண்ட சொர்க்கம்

ஆரம்பத்தில் பெரிதாக விருப்பம் காட்டாத ராணிக்கு வண்ணக் காகிதகங்களில் கலை வண்ணம் படைப்பது ஒரு வித ஆறுதலைத் தந்தது. ஆர்வத்துடன் பேப்பர் ஜுவல்லரி செய்வதில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார். மகள்களின் தோழிகள், அக்கம் பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் ராணியின் கைவண்ணத்துக்கு அங்கீகாரம் தர, அதுவே அவருக்கு உந்து சக்தியானது.

அடுத்த சில மாதங்களில் டெரகோட்டா ஜூவல்லரி, கிளாஸ் பெயின்டிங், மியூரல் பெயின்டிங் என நிறைய கற்றுக்கொண்டார். அவரது கற்பனைத் திறன் கலைப்பொருட்களால் வீட்டை நிரப்பியது.

சோகத்தின் பிடியில் இருந்து மெல்ல, மெல்ல ராணி மீள்வதைக் கண்ட அவரது கணவர் தேவராஜ் (யோகா பயிற்றுனர்), “யோகா தரும் ஒருவித ஹீலிங்கைத் தான் இந்தக் கைவினைக் கலை என் மனைவிக்குத் தந்தது” என்கிறார்.

ஆசிரியராக இருந்ததால் எப்போதும் குழந்தைகளுடன் இருப்பது ராணிக்கு மிகவும் பிடித்த விஷயம். எனவே, பள்ளி விடுமுறை நாட்களில் அண்டை வீட்டுக் குழந்தைகள் ராணியின் வீட்டில் குவிகிறார்கள். அவர்களுக்கும் கைவினைக் கலைகளைக் கற்றுத் தருகிறார்.

அர்த்தமுள்ள வாழ்வு

இவற்றின் மூலம் பணம் பண்ண வேண்டும் என்பது ராணியின் இலக்காக இல்லாவிட்டாலும், தனக்குத் தெரிந்த சுய உதவிக்குழுவில் இருக்கும் பெண்களுக்கு, இவற்றின் மூலம் எப்படி லாபம் ஈட்டலாம் எனச் சொல்லிக் கொடுக்கிறார்.

ராணியிடம் பயிற்சி பெற்ற பலரும் இப்போது டெரகோட்டா ஜூவல்லரி செய்து சம்பாதித்து வருகிறார்கள்.

இது தவிர வடலூர் வள்ளலார் சத்ய சன்மார்க சபை நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் இலவசமாகப் பயிற்சி அளிக்கிறார். இவருடைய கணவர் தேவராஜ், இலவசமாக யோகா பயிற்றுவிக்கிறார்.

“நான் கற்றுக்கொண்ட கலை எனக்கு மிகப் பெரிய ஆத்ம திருப்தியையும், மன அமைதியையும் தந்திருக்கிறது. நிலையற்ற உலகில் நீங்காத் துயர் நிறைய உண்டு. ஆனால் தன் துயரை வென்று பிறருக்குப் பயனுள்ளதாக இருப்பது ஒரு தவம். அதைத்தான் நானும், என் கணவரும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். என்னைப் போல் துயர் கண்டோர் நிச்சயம் பலர் இருப்பார்கள். அத்தகையோர் மீள இது நல்ல வழி. கலை சோறு போடும் என்பார்கள், கலை கவலையையும் அகற்றும்” எனப் புன்னகை பூக்கிறார் ராணி தேவராஜ்.

நீங்களும் பங்கேற்கலாம்

பார்த்ததுமே உங்களுக்குள் இருக்கும் கலை உணர்வு மெல்லத் தலைகாட்டுகிறதா? உடனே அதை வெளிப்படுத்துங்கள். அது புகைப்படமோ, ஓவியமோ, ஆடைகளில் வரையும் அலங்கார டிசைனோ எதுவாக இருந்தாலும் உங்கள் படைப்புகளை அனுப்புங்கள், உலகறியச் செய்கிறோம்.

உங்கள் படைப்புகளை - பெண் இன்று, தி இந்து, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002 என்ற முகவரிக்கோ அல்லது penindru@thehindutamil.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in