ஆகஸ்ட் 1-7: உலகத் தாய்ப்பால் வாரம் | இது தானமல்ல, உயிர்க்கொடை

ஆகஸ்ட் 1-7: உலகத் தாய்ப்பால் வாரம் | இது தானமல்ல, உயிர்க்கொடை
Updated on
2 min read

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1 முதல் 7ஆம் தேதி வரை ‘உலகத் தாய்ப்பால் வாரம்’ கடைபிடிக்கப் படுகிறது. பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதை ஊக்குவிக்கவும், நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்கவும் உலகச் சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டுக்கான ‘உலகத் தாய்ப்பால் வாரத்தின்’ கருப்பொருளாக உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்துவது: ‘வேலைக்குச் செல்லும் பெண்களும் தாய்ப்பால் அளிப்பதற்கான இடத்தை உருவாக்க வேண்டும்’ என்பதே. பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால் குழந்தைக்குத் தாய்ப்பால் அளிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையை மாற்ற, தாய்மார், குழந்தைகளுக்குத் தாய்ப்பால் அளிப்பதற்கான வசதிகளை பணியிடங்களில் அமைத்துத் தருவதை அனைத்து நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும்.

பயன் தரும் தாய்ப்பால்

கோவையைச் சேர்ந்த சிந்து மோனிகா என்பவர் இதுவரை நூறு லிட்டருக்கும் அதிகமான தாய்ப்பாலை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்குத் தானமாக அளித்துள்ளார்.

பொறியியல் பட்டதாரியான சிந்து மோனிகாவுக்கு மகேஷ்வரன் என்பவருடன் திருமணமாகி ஐந்தாண்டு களுக்குப் பிறகு குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த இரண்டு மாதங்களிலிருந்து சிந்து தாய்ப்பாலைத் தானமாக அளித்துவருகிறார். இரண்டு ஆண்டுகள் ஆனபோதும் இப்போதும் தொடர்ந்து சிந்து தாய்ப்பால் தானம் வழங்கிவருகிறார். இது குறித்து விரிவாகப் பேசிய அவர், “கோவையில் இயங்கி வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான அமிர்தம் தாய்ப்பால் குழு மூலம் தாய்ப்பால் தானம் பற்றி எனக்குத் தெரிய வந்தது. ஊட்டச்சத்துக் குறைபாட்டுடன், குறைந்த எடையுடனும் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கட்டாயம் தேவைப்படுகிறது. உடல்நலப் பாதிப்புகளால் சில தாய்மார்களுக்குத் தேவையான அளவு பால் சுரப்பதில்லை. அவர்களுக்கு உதவும் வகையில் என்னுடைய குழந்தைக்கு ஊட்டும் தாய்ப்பால் போக மீதமிருக்கும் பாலைத் தானம் வழங்கி வருகிறேன். இதனால் பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். அந்தக் குழந்தைகள் குணமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியேறும்போது மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கும்” என்று மகிழ்ச்சியாகச் சொன்னார்.

சிந்து மோனிகா
சிந்து மோனிகா

அமைதியான மனநிலை

சிந்துவின் தாய்ப்பால் கோவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு புகட்டப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் வழங்கியுள்ள நூறு லிட்டருக்கும் அதிகமான பாலால் ஆயிரத்துக்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இந்தச் சேவையைப் பாராட்டி ‘ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’, ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ’ஆகிய அமைப்புகள் அவரை பாராட்டிள்ளன. தனது சேவைக்குப் பக்கபலமாக இருந்து தன்னைக் கவனித்துக் கொள்வது கணவர்தான் என்று சிந்து பெருமிதத்துடன் கூறினார். “குடும்பத்தினரின் ஆதரவு இருப்பது கூடுதல் பலம். என்னுடைய விருப்பத்துக்கு மதிப்பு அளித்தும் என்னால் முடியும் என்பதால் என்னை ஊக்கப்படுத்தியும் வருகின்றனர். தாய்ப்பால் தானம் தரும் நேரங்களிலும் வழக்கமான உணவு களையே எடுத்துக்கொள்வேன். கூடுதலாக வாரம் மூன்று முறை முருங்கைக்கீரை சூப் எடுத்துக்கொள்வேன். வழக்கமான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வேன். நம் உடலிலிருந்து பால் வெளியேற மீண்டும் சுரக்கும். குழந்தை பிறந்த காலகட்டத்தில் பால் சுரந்த அளவு இப்போது சுரப்பதில்லை என்றாலும் தானம் வழங்கும் அளவுக்கு அதிகமாகவே சுரக்கிறது. மனநிலையை அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதை உறுதிப்படுத்தினாலேயே பால் சுரப்பது எளிதாகும்” என்றார் அவர்.

கற்பிதங்கள் களையட்டும்

தாய்ப்பால் தானம் பற்றிய போதுமான விழிப்புணர்வு தாய்மாரிடத்தில் இல்லை எனச் சொல்லும் சிந்து, அதனால் அது குறித்த கற்பிதங்களைக் களைய வேண்டும் என்று வலியுறுத்தினார். “தானம் வழங்குவதால் தன்னுடைய குழந்தைக்குப் போதுமான பால் சுரக்காத நிலை ஏற்படுமோ என்கிற அச்சம் இருக்கிறது. தாய்மாரின் உடலிலிருந்து பால் எடுக்க எடுக்க மீண்டும் அவை சுரக்கும். இதனால் அச்சம்கொள்ள வேண்டியதில்லை. தன்னிச்சையாகத் தாய்ப்பால் தானம் கொடுக்க வந்தாலும், ‘குடும்பச் சூழல் காரணமாக விற்பனை செய்கிறாயா?’ என்பது போன்ற விமர்சனத்தையும் எதிர்கொண்டிருக்கிறேன். தாய்ப்பால் தானம் வழங்கல் முறையைச் சரியாகக் கடைபிடிக்கும் தொண்டு நிறுவனங்கள் பல உள்ளன. சரியான அமைப்பைத் தேர்வுசெய்து, உதவி தேவைப்படுவோர்க்குத் தானம் வழங்கத் தயக்கம் காட்டத் தேவையில்லை. ரத்த தானம், உறுப்பு தானம் போன்றவற்றை எந்த வயதிலும் வழங்கலாம். ஆனால், தாய்ப்பால் தானம் என்பது இளம் தாய்மார்கள் மட்டுமே வழங்க முடியும். அதுவும் குழந்தை பிறந்து அதிகபட்சம் இரண்டு ஆண்டுகளுக்குத்தான் வழங்க முடியும். இந்த நேரத்தில் தன்னுடைய குழந்தைக்கு மட்டும் அல்லாமல் பல பச்சிளம் குழந்தைகளின் உடல்நலத்தை மீட்டெடுக்கும் முக்கியமான விஷயமாகத் தாய்ப்பால் உள்ளது. உடல் தோற்றம், அழகு போன்ற வற்றுக்கு முக்கியத்துவம் அளித்து இந்தத் தலைமுறை தாய்மார், தாய்ப்பால் கொடுக்கத் தயங்குகிறார்கள். தாய்ப்பால் கொடுக்கலாமா, வேண்டாமா என்பது தேர்வாக இருக்கக் கூடாது, கடமையாக இருக்க வேண்டும்” என்றார் சிந்து.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in