

சூரரைப் போற்று, ஜெய் பீம், மாமன்னன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப் படங்களுக்கும், மூன்று வலைத் தொடர் களுக்கும் தனது குழுவுடன் ‘சப்டைட்டில்’ எழுதியிருக்கிறார் நந்தினி கார்க்கி. 2000 ஆண்டுகள் தொன்மையான தமிழ்ச் சங்க இலக்கியப் பாடல்களுக்கு ஆங்கிலத்தில் பொருள் விளக்கி ‘பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியையும் வழங்கிவருகிறார். பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கியின் இணையரான இவர், தமிழ் - ஆங்கிலம் மொழிகள் சார்ந்த மொழிபெயர்ப்புப் பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறார்.
கடல் கடக்கும் தமிழ் சினிமா
தமிழ்மொழியை அறியாதவர்களும் தமிழ்த் திரைப்படங்களைப் பார்க்க உதவியாக இருப்பது ‘சப்டைட்டில்’. செவித்திறன் குறைபாடு உடையோரும் திரைப்படங்களைப் புரிந்து கொள்ள இது பயன்படுகிறது. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட சப்டைட்டிலால் நாடு கடந்தும் தமிழ் சினிமா பயணப்படுகிறது. இந்தியாவிலேயே முதல் முறையாக சப்டைட்டிலுக்கான பயிலரங்கு நடத்தும் ‘சுபமி’ நிறுவனத்தைத் தொடங்கியதைப் பற்றிப் பேசிய நந்தினி, “மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த நான் மொழியின்மீது ஏற்பட்ட ஆர்வத்தால் தமிழ் - ஆங்கிலம் மொழியாக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபடத் தொடங்கினேன். ‘தங்கமீன்கள்’, ‘ஐ’ உள்பட சில தமிழ்த் திரைப்படங் களுக்கு சப் டைட்டில் எழுதிய அனுபவத்துடன் 2016ஆம் ஆண்டு ‘சுபமி’ என்கிற சப்டைட்டில் நிறுவனத்தைத் தொடங்கினேன். சப்டைட்டில் பயிலரங்கு நடத்தி அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சிலர் இப்போது இந்நிறுவனத்தில் பணியாற்றிவருகின்றனர். முழு நேரமாக சப்டைட்டில் எழுதிவருகிறோம்” என்கிறார்.
சப்டைட்டில் என்பது ஒரு வகை மொழியாக்கம் தான் என்றாலும் வழக்கமான மொழியாக்கப் பணிகளிலிருந்து சற்றே வேறுபடும் என்கிறார் அவர். “ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கும், ஒலி வடிவத்திலிருந்து எழுத்து வடிவத்துக்கும் மாற்றுவதுதான் சப்டைட்டில். திருக்குறளைப் போல இரண்டு வரிகளுக்கு மிகாமல் ஒவ்வொரு சப்டைட்டிலையும் எழுத வேண்டும். இப்பணிகளுக்கென சில மென்பொருள்கள் இருப்பதால் அவற்றைப் பயன்படுத்தி வசனங்களைச் சரியாகத் திரையில் காட்சிப்படுத்த வேண்டும். தமிழ் மொழியில் வெளிப்படும் உணர்வுகளைப் பொருள் மாறாமல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டும். சில வார்த்தைகளால் பொருள் மாறினாலும் பார்ப்பவர்களுக்கு அந்த உணர்வைக் கடத்த முடியாது. பெரும் பிழையாகிவிடும். இதனால், ஒவ்வொரு விஷயத்தையும் கவனமாக மொழி பெயர்க்க வேண்டும். குறிப்பாக நகைச்சுவை வசனங்களை, பாடல் வரிகளை மொழிபெயர்க்க நிறைய மெனக்கெட வேண்டும். அதிக நேரமெடுக்கக்கூடிய சவாலான பணிதான் இது” என்கிறார் நந்தினி.
தகுதிப்படுத்துதல்
இந்தியத் திரைத்துறையின் சப்டைட்டில் பணிகளில் பெரும்பாலும் பெண்களைப் பார்க்க முடிகிறது. இது பெண்களுக்கான வேலை என்று ஒதுக்கிவிட முடியாது, ஆர்வமிருந்தால் யார் வேண்டுமானாலும் பணியாற்றலாம் எனச் சொல்லும் அவர், “எந்தத் துறையைச் சேர்ந்தவரும் சப்டைட்டில் எழுதலாம். ஆனால், சப்டைட்டில் எழுத குறைந்தது இரண்டு மொழிகளில் புலமை இருக்க வேண்டியது அவசியம். ஒரு மொழியை முழுமையாகப் புரிந்து கொள்ளும் அளவுக்கும், சப்டைட்டில் எழுதும் இன்னொரு மொழியைத் திறம்பட எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதிக புத்தக வாசிப்பு, சப்டைட்டிலுடன் கூடிய வேறு மொழி திரைப்படங்களைக் காணுதல், தொடர் பயிற்சி போன்றவற்றால் இத்திறனை மெருகேற்றிக் கொள்ள முடியும். இத்துடன் சப்டைட்டிலை பதிவிடத் தேவையான மென்பொருளையும் கற்றுக்கொண்டால் இப்பணியைத் திறம்படச் செய்யலாம். சுபமியில் இணைய வழி சப்டைட்டில் பயிலரங்கும் நடத்தப்படுகிறது” என்கிறார்.
இணையமும் தமிழும்
‘சங்கம் லிட்’ என்கிற பிரபல ‘பாட்காஸ்ட்’ நிகழ்ச்சியின் ஆயிரமாவது எபிசோடை நெருங்கியிருக்கிறார் நந்தினி. நற்றிணை, குறுந்தொகை பாடல்களை அடுத்து புறநானூறு பாடல்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்து ஒலி வடிவில் இவர் பதிவேற்றிவருகிறார். இணையத்தில் தமிழ் மொழியின் பரவல் குறித்துப் பேசிய அவர், “காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும் தமிழ் மொழி இணையப் புரட்சியிலும் தனது இருப்பைப் பதிவு செய்திருக்கிறது. காப்புரிமை துறக்கப்பட்ட தமிழ் இலக்கியங்கள் இணையத்தில் இருக்கின்றன. மெத்தப் படித்தவர்களுக்கானது மட்டும் என்றல்லாமல் விருப்பமுள்ள யாவரும் தமிழ் மொழியைப் படிக்கலாம் என்பதே இதன் சிறப்பு. ஒலி வடிவம் தொடங்கி பின்னர் எழுத்து வடிவம் வந்தது. ஒலி வடிவத்தில் தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில்தான் சங்க இலக்கியப் பாடல்களைப் பதிவுசெய்து வருகிறேன். தலைமுறைகள் கடந்து தமிழ் வளரும்!” என்கிறார் நம்பிக்கையோடு.