

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஜூன் 28 அன்று நடைபெற்ற தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் கோப்பையை தமிழ்நாடு அணி வென்றது. 2017-18இல் நடைபெற்ற சீசனை வென்ற தமிழ்நாடு அணி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் கோப்பையைத் தட்டியது. சவாலான நேரத்தில் கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தவர் கால்பந்து வீராங்கனை இந்துமதி கதிரேசன்.
கடலூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் மகள் இந்துமதி. விளையாட்டுப் பின்னணி இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவர், இன்று தேசிய அளவில் கவனிக்கப்படும் முன்னணி கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். தமிழ்நாடு அணிக்காகவும் இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாடி தனது பெயரை அழுத்தமாகப் பதிவுசெய்தவர். மகளிர் கால்பந்து விளையாட்டில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியவர். நட்சத்திர வீராங் கனையான அவர் கடந்து வந்த பாதை சவால்கள் நிறைந்தது.
‘முதல்’ வீராங்கனை
“பள்ளிப் படிப்பின்போது எங்கள் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மாரியப்பன் சாரின் உந்துதலால் கால்பந்து விளையாட்டைத் தேர்வு செய்து பயிற்சி எடுத்துக்கொண்டேன். அவர் தந்த உத்வேகத்தால் சிறப்பாக விளையாடி மாநில, தேசிய அணிகளுக்காகவும், சர்வதேச அளவிலும் கால்பந்துப் போட்டிகளில் பங்கேற்றுவருகிறேன். ஆரம்பத்தில் விளையாட்டுத் துறையைத் தேர்வு செய்தபோது குடும்பத்தில் எதிர்ப்புகள் கிளம்பின. தடைகளைத் தாண்டிப் போராடி என்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் கால்பந்து வீராங்கனைகளுக்கு வேலைவாய்ப்பு கிடையாது. விளையாட்டு ஒரு பக்கம், தேர்வுகள் மறு பக்கம் என்று என் சொந்த முயற்சியில்தான் காவல் துறை பணி எனக்குக் கிடைத்தது” என்கிறார் இந்துமதி.
முக்கியமான வெற்றி
2017-18ஆம் ஆண்டு நடைபெற்ற சீசனில் அப்போது நடப்பு சாம்பியனான மணிப்பூரை வீழ்த்தி தமிழ்நாடு வரலாறு படைத்தது. அந்தத் தொடரின் ‘சிறந்த வீராங்கனை’யாக இந்துமதி தேர்வுசெய்யப்பட்டார். எனினும் அந்த வெற்றிக்கான உரிய அங்கீகாரம் இந்துமதிக்கோ தமிழ்நாட்டு வீராங்கனைகளுக்கோ இன்னும் கிடைக்கவில்லை. ஊக்கத்தொகையோ வேலை வாய்ப்போ வழங்கப்படாதபோது மீண்டும் ஒரு வரலாற்று வெற்றியின்மூலம் தங்களது இருப்பைப் பதிவுசெய்திருப்பதாக சொல்கிறார் அவர். “இந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் தமிழ்நாடு அணி சார்பாக நாங்கள் நான்கு சீனியர்களும் ஜூனியர்களுடன் இணைந்து களம் இறங்கினோம். கடுமையாகப் பயிற்சி செய்து, முக்கியமான சில வெற்றிகளைப் பதிவு செய்தே இறுதிப் போட்டிக்குள் நுழைந்தோம். ஆனால், இறுதிப்போட்டி வரை சென்று தோற்றிருந்தால் இந்த அணியை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். திறமையான வீராங்கனைகளை அடையாளப்படுத்த, எங்களது கோரிக்கைகளைப் பதிவு செய்ய இந்த வெற்றி மிகவும் தேவையாக இருந்தது. வெற்றி பெற்றால்தான் கவனிக்கப்படுவோம், இல்லையெனில் எங்களைக் கடந்து சென்றிருப்பார்கள். அடுத்த தலைமுறை வீராங்கனைகளின் நலனைக் கருத்தில்கொண்டு இறுதிப்போட்டியை நிச்சயமாக வெல்ல வேண்டும் எனப் போராடினோம். அது நடந்துவிட்டது. திறமை இருந்தும் மாநில, தேசிய அணிகளுக்காக விளையாடியும் வீராங்கனை களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை. வேலை இல்லாததால் இந்த விளையாட்டை விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால், பல வீராங்கனைகளை நாம் இழந்திருக்கிறோம். இந்த நிலை தொடரக் கூடாது. வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை வீரர்களுடன் ஒப்பிடும்போது வீராங்கனைகளுக்குக் காட்டப்படும் பாரபட்சம் மாற வேண்டும். உரிய வேலைவாய்ப்பு கிடைத்தால் விளையாட்டுத் துறையைப் பல பெண்கள் தேர்வு செய்வார்கள்” என்று அரசு முன்னெடுக்க வேண்டியவற்றைக் கவனப்படுத்தினார்.
எதிர்காலம் நம் கையில்
கோப்பையை வென்று சென்னை திரும்பிய தமிழ்நாடு அணி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராட்டுகளோடும் கொண்டாட்டத்துடனும் இந்த வெற்றியை மறந்துவிட கூடாது எனச் சொல்கிறார் இந்துமதி. “வெற்றியோடு இந்தப் பயணம் முடிந்துவிடக் கூடாது. இது தொடக்கம்தான். முன்பு இருந்ததைவிட இப்போது வீராங்கனைகளுக்குப் பயிற்சி, உணவு போன்றவற்றில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. கால்பந்து விளையாட்டைத் தேர்வு செய்தால் வாழ்வாதாரத்துக்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை மாறினால் நிச்சயம் பல பெண்கள் இத்துறைக்கு வருவார்கள். நல்ல எதிர்காலத்துக்காகக் காத்திருக்கிறோம்” என்கிறார் இந்துமதி.
கால்பந்து விளையாட்டோ, குத்துச் சண்டையோ அடுத்த தலைமுறை வீராங்கனை களுக்காக வெற்றிகளை குவிப்பதும், களத்தில் போராடுவதும் இந்தத் தலைமுறை வீராங்கனைகளாகத்தான் இருக்கின்றனர். அவர்களது வெற்றியைக் கொண்டாடும் வேளையில் அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றி உரிய அங்கீகாரம் கிடைக்கச் செய்வதும் முக்கியம்.