

“ஒவ்வொரு பெண்ணும் மன உளைச்சலற்ற வாழ்வு வாழ வேண்டும். இது சாத்தியமா?” என்கிற கேள்வியோடு பேசத் தொடங்கினார் கோவையைச் சேர்ந்த ஸ்வர்ணலதா. இவர் ‘Multi ple Sclerosis’ எனப்படும் தண்டுவட மரப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். இதனால் கழுத்துக்குக் கீழுள்ள உறுப்புகள் இயங்காமல் போனாலும் அவர் முடங்கிப் போகவில்லை. மீண்டு எழுந்தார். இது போன்று பாதிப்புக்கு ஆளாகிறவர்களிடம் இவர் நம்பிக்கையைப் பாய்ச்சிவருகிறார்.
29 வயது வரை சாதாரணமாக இருந்த ஸ்வர்ணலதாவுக்கு நரம்புப் பிரச்சினைக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கின. இடைவிடாத காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரது உடல் திடீரென முடங்கிப்போனது. கணவன், இரண்டு வயது மகனுடன் வாழ்ந்துவந்தவரது வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது இந்தத் தண்டுவட மரப்பு நோய். நொறுங்கிப் போன ஸ்வர்ணலதா மீண்டு வர சில காலம் தேவைப்பட்டது.
மீண்டு எழவைத்த நம்பிக்கை
“படுத்த படுக்கையானபோது உலகமே நின்றுவிட்டதுபோல இருந்தது. இனி பிறரைப் போல இயல்பான வாழ்க்கையை வாழ முடியாதா, எழுந்து நடக்க முடி யாதா என்பது போன்ற கேள்விகள் என்னைக் கொன்றன. தற்கொலை செய்துகொள்ளலாம் என்றுகூடச் சில முறை நினைத்திருக்கிறேன். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு மெல்ல இந்த எண்ணங்களிலிருந்து விடுபட முயன்றேன். சவாலாக இருந்தது. இந்த நரம்புப் பிரச்சினைக்குத் தீர்வு கிடையாது. மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் அறிகுறிகள் தென்படாமல் இருக்கவும் சிகிச்சை எடுத்து கொள்ளலாம். எனவே சிகிச்சை எடுத்துக்கொண்டே நானும் முயன்று படுக்கையிலிருந்து சக்கர நாற்காலியில் உட்காரும் அளவுக்கு உடல் தேறினேன். வாழ்வதற்கு அர்த்தம் தேவைதானே? பாடல் பாடுவது, கதைகள் எழுதுவது என எனக்குப் பிடித்தவற்றைச் செய்ய முயன்றேன். பிறருக்கு நம்பிக்கை தர வேண்டுமெனப் பேசத் துணிந்தேன். இன்று ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக 300க்கும் மேற்பட்ட இடங்களில் பேசியிருக்கிறேன். ‘ஸ்வர்கா’ என்கிற தொண்டு நிறுவனத்தையும் நிர்வகித்துவருகிறேன்” என்றார் ஸ்வர்ணலதா உற்சாகமாக.
பெண்களைத் தாக்கும் நரம்புப் பிரச்சினை
பெரும்பாலும் 20 முதல் 40 வயதுடைய பெண்களுக்கு இந்த நரம்புப் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல் கின்றனர். உடல் பருமனானவர், புகையிலை அல்லது மதுப் பழக்கம் உடையவர் ஆகியோருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் எனவும் சொல்லப்படுகிறது. இது குறித்துப் பேசிய ஸ்வர்ணலதா, “மன உளைச்சலற்ற வாழ்க்கை ஒவ்வொரு பெண்ணுக்கும் வேண்டும். எப்போதும் குடும்பம், குழந்தை என ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் தங்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. தங்களுக்குப் பிடித்த படிப்பை, வேலையை எல்லாம் விட்டுக்கொடுத்துப் பழகிவிட்ட பெண் சமூகம், உடல்நலம் மீதும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இந்நிலை மாறவேண்டும். தன்னை முன்னிலைப்படுத்திக் கவனித்துக் கொள்ள வேண்டும். யாரையும் சார்ந்திருக்காமல் சுயமாக வாழ வேண்டும். குடும்பம், வேலை, சமூகச் சிக்கல் என எண்ணற்ற பிரச்சினைகளைப் பெண்கள் எதிர்கொள்வதால்தான் அவர்களது மனநிலை பாதிக்கப் படுகிறது. நிம்மதியற்ற மனநிலையால் உடல்நலமும் பாதிக்கப்படுகிறது. இதனால் தான் பெரும்பாலான இளம் பெண்களுக்கு நரம்புப் பிரச்சினை கள் ஏற்படுகின்றன. இது குறித்துப் போதுமான விழிப்புணர்வும் இல்லை. பார்வைக் குறைபாடு, பேசுவதில் சிக்கல், நடக்கும்போது தடுமாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் மருத்து வரை அணுக வேண்டும்” என்கிறார் ஸ்வர்ணலதா.
மறுவாழ்வு குறித்துத் தொடர்ந்து பேசிவரும் ஸ்வர்ணலதாவைப் பற்றி ‘ஐ எம் லிமிடட் எடிஷன்’ என்கிற பெயரில் சுரேஷ் மேனன் இயக்கிய ஆவணப்படம், கடந்த மே 30ஆம் தேதி ‘தண்டுவட மரப்பு நோய் விழிப்புணர்வு’ நாளன்று சென்னையில் திரையிடப்பட்டது. உடல் முன்னேற்றத்துக்காகத் தொடர்ந்து முயன்றுவரும் ஸ்வர்ணலதாவுக்கு எழுந்து நடக்க வேண்டுமென்பதுதான் ஒரே குறிக்கோள். “மகனை அடுத்து மகள் பிறந்தாள். என் இரண்டு குழந்தைகளும் கணவரும் எனக்குப் பக்கபலமாக என்னுடைய உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துவருகின்றனர். என் குழந்தை கள் மிகவும் பொறுப்புடன் எனக்கு உதவிகளைச் செய்வார்கள். மீண்டும் எழுந்து நடக்க முடியுமானால், என் குழந்தைகளுடன் சேர்ந்து நடனமாட வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்று நம்பிக்கையோடு சொல்கிறார் ஸ்வர்ணலதா.