மாநகரின் வண்ணத் தேவதைகள்!

மாநகரின் வண்ணத் தேவதைகள்!
Updated on
2 min read

மெட்ரோ, பறக்கும் ரயில் நிலையங்கள், அரசுப் பள்ளிகள், கண்ணகி நகர் குடியிருப்பு என சென்னையின் முக்கியக் கட்டிடங்கள் சுவரோவியங்களால் புதுப்பொலிவு பெற்றிருக்கின்றன. இப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு குழுக்களில் ஒன்று ‘அரவாணி ஆர்ட் புராஜெக்ட்’. பெங்களூருவை மையமாகக் கொண்ட இக்குழுவைப் பெண்கள், திருநங்கைகள் நிர்வகித்துவருகின்றனர்.

புதிய பாதை

கடந்த 2016ஆம் ஆண்டு ஓவியர் பூர்ணிமா சுகுமார் என்பவரால் தொடங்கப்பட்ட ‘அரவாணி ஆர்ட் புராஜெக்ட்’ குழுவில் இன்று 20க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பணியாற்றிவருகின்றனர். டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை என நாட்டின் முக்கிய நகரங்களில் திருநங்கைகளை ஒருங்கிணைத்து இக்குழு இயங்கிவருகிறது. சென்னைப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் நந்தினி. இவருடன் திருநங்கைகள் காஞ்சனா, வர்ஷா, ஸ்மிதா ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்களின் கவனம் ஈர்த்த திருவான்மியூர் பறக்கும் ரயில் சுவரோவியங்களை வரைந்தது இவர்கள்தான்.

வர்ஷா
வர்ஷா

“ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள திருநங்கைகளுக்கு முறையான பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுப்பது அரவாணி ஆர்ட் புராஜெக்ட்டின் முக்கியப் பணி. திருநங்கைகள் மட்டுமின்றிப் பால் புதுமை யினரும் விருப்பமுள்ள யாரும் இக்குழுவில் சேர்ந்து பணியாற்றலாம். இதுவரை திருவான்மியூர், மந்தைவெளி, தரமணி பறக்கும் ரயில் நிலையங்கள், சென்ட்ரல், ஆலந்தூர் மெட்ரோ நிலையங்கள், 200க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிக்கூடச் சுவர்கள் ஆகியவற்றுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறோம். இதில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் அவர்களுக் குப் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. வாழ்வாதாரம் உறுதிப்பெற்றிருக்கிறது. ஓவியங்கள் வரைவது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் காஞ்சனா.

நந்தினி
நந்தினி

மாற்றம் ஆரம்பம்

சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் மற்ற பகுதி களைச் சேர்ந்த திருநங்கைகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை இக்குழு மேற்கொண்டுள்ளது. “தமிழ்நாடு அரசின் ‘புதுமைப் பெண்' திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் திருநங்கை ஓவியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இது போன்ற சில திட்டங்களில் பணியாற்ற நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். சென்னையைச் சேர்ந்த திருநங்கை ஓவியர்கள் இந்தத் திட்டங்களில் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள்.எனினும் நகரத்தைப் போல மற்ற ஊர்களைச் சேர்ந்த திருநங்கைகள் தங்களது திறமைகளை வெளிக்காட்ட அதிக அளவில் முன்வருவதில்லை. அவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. அதை உடைக்க வேண்டும். ஓவியங்கள் வரைவது மட்டுமின்றிப் பல ஊர்களுக்குச் சென்று ஓவியப் பயிலரங்குகளும் நடத்திவருகிறோம். திறமையான திருநங்கையருக்கு இது ஒரு தளமாக அமையும் என நம்புகிறோம். திருநங்கைச் சமூகத்தினரால் இது சாத்தியமா, அவர்களால் ஓவியங்கள் வரைய முடியுமா என்பது போன்ற கேள்விகளைப் பல முறை எதிர்கொண்டிருக்கிறோம். திருநங்கைகளின் கைவண்ணத்தில் உருவாகியிருக்கும் சுவரோவியங்களே அதற்குச் சாட்சி” என்று நம்பிக்கையை விதைக்கிறார் நந்தினி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in