

இத்தாலியில் ஜூன் 2 அன்று நடைபெற்ற தடகளப் போட்டியில் 1,500 மீட்டர் தூரத்தை 3:49:11 நேரத்தில் கடந்து உலக சாதனை படைத்தார் கென்ய நாட்டு வீராங்கனை ஃபெயித் கெப்யெகன். பந்தய தூரத்தை அவர் கடந்தபோது பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் களத்திலேயே ஃபெயித்தின் சாதனையைக் கொண்டாடினர். சில நொடிகள் வித்தியாசத்தில் பதக்கத்தைத் தவறவிடும் இதுபோன்ற தடகள விளையாட்டில் போட்டியும் பொறாமையும் இன்றி வீராங்கனைகள் நடந்துகொண்டது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
ஃபெயித் (29), கென்யாவின் கெரிங்கெட் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் நாள்தோறும் நான்கு கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்குச் செல்வார். அந்த வயதிலேயே அவருக்குத் தடகளத்தின்மீது ஆர்வம் ஏற்பட்டு விட்டது. விளையாட்டுப் பின்னணி கொண்ட தந்தையின் வழிகாட்டுதல்படி பயிற்சி பெற்ற அவர், ஜூனியர் தொடர்களில் பங்கேற்கத் தொடங்கினார். 1,500 மீட்டர் ஓட்டத்தைத் தேர்வுசெய்து பயிற்சி மேற்கொண்டுப் பதக்கங்களைக் குவித்தார்.
2012 பீஜிங் ஒலிம்பிக் தொடரின்போது அவருக்கு 18 வயது. அதுவே அவரது முதல் ஒலிம்பிக் போட்டி. அதில் பந்தயத் தொலைவை 16ஆவது இடத்தில் நிறைவுசெய்த அவர் பயிற்சியைத் தீவிரப்படுத்தினார். அப்போது விட்டதை அடுத்த ஒலிம்பிக்கில் பிடித்தார் ஃபெயித். 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். 2017இல் உலக சாம்பியனும் ஆனார். விளையாட்டின் உச்சத்தில் இருந்தபோது குழந்தைப் பிறப்புக்காக ஓய்வெடுத்தார். 21 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களத்துக்கு வந்த ஃபெயித், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.
ஓயாத ஓட்டம்
குழந்தைப் பிறப்புக்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கை அந்தக் குழந்தையையும் குடும்பத்தையும் சுற்றியே சுருங்கிவிடுகிறது. சமரசம் செய்துகொள்ளாத பெண்களால் மட்டுமே சாதிக்க முடிகிறது. அந்த அசாத்திய சாதனையை ஃபெயித் செய்து காட்டியிருக்கிறார். குழந்தைப் பிறப்புக்குப் பிறகு அவரது வேகம் குறையவில்லை, இருந்த வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ளவும் இல்லை. மாறாக அதிகப்படுத்தியிருக்கிறார். 1,500 மீட்டர் தூரத்தை முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாகக் கடந்திருக்கிறார். 2021இல் 3:53:91 நேரத்தில் கடந்த அவர், அடுத்து நடைபெற்ற போட்டிகளில் தன்னை மெருகேற்றிக்கொண்டே வந்தார். இந்த ஆண்டு உலக சாதனையையும் படைத்துவிட்டார். “குழந்தைப் பிறப்புக்குப் பிறகு மீண்டும் களத்துக்கு வருவது எளிதான காரியமல்ல. நான் எடை கூடியிருந்தேன். எனது கட்டுக்கோப்பான உடல், மாற்றம் கண்டிருந்தது. எப்போதும் சோர்வாகவே இருந்தேன். ஆனால், விடாமல் முயன்றேன். முயன்றால் முடியாதது எதுவுமில்லை. பழையபடி திரும்பி வருவதற்கு அதிக காலம் எடுக்கும். எனினும் நம்பிக்கையை இழக்காமல் இலக்கை நோக்கிப் பயணித்தால் ஒரு நாள் கனவு மெய்ப்படும்” என்கிறார் ஃபெயித்.