முகங்கள்: இதுவும் பெண்கள் ஏரியா

முகங்கள்: இதுவும் பெண்கள் ஏரியா
Updated on
2 min read

இந்தியாவின் முதல் பெண் தொழில்முறை கட்டிடக் கலைஞர் என்கிற பெருமையை 1936இல் பெற்றார் பெரின் ஜாம்ஷெட்ஜி மிஸ்த்ரி. பல ஆண்டுகள் கடந்து இன்றும் கட்டிடக் கலைத் துறையில் தொழில்முறைப் பணியில் தடம் பதிக்கப் பெண்கள் போராடுகின்றனர். கட்டிடக் கலை என்பது ஆண்களுக்கானது என்று பலரும் நினைக்கும் சூழலில், இத்துறையில் புதுமைகளைப் புகுத்திவருகிறார் சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ சந்திரசேகரன்.

நவீன கட்டிடக் கலை முறையில் மணல், செங்கல், சிமென்ட்டைக் குழைத்துக் கட்டுவதற்கு அதிக பொருள்செலவும், மனித வளமும் தேவை. இதற்கு மாற்றாக இயற்கைக்கு உகந்த கட்டிடங்கள் கட்டுவதை ஊக்குவிக்கிறார் ஜெயஸ்ரீ. களிமண் போன்று உள்ளூரில் கிடைக்கக்கூடிய பொருள்கள் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களை வைத்துத் தொழில்நுட்ப உதவியுடன் பசுமைக் கட்டிடங்களைக் கட்டலாம் எனச் சொல்கிறார்.

“சர்வதேச அளவில் பசுமைக் கட்டிடங்கள் குறித்த விழிப்புணர்வு பரவலாக இருப்பதுபோல் இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் இல்லை. கரோனாவுக்குப் பிறகு சில மாற்றங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. பெருகிவரும் தொழில்நுட்பமய சூழலுக்கு எதிராக இயற்கைக்கு நெருக்கமாகச் செல்ல வேண்டுமென்கிற எண்ணம் மக்களிடம் துளிர்த்திருக்கிறது. இந்த மாற்றம் கட்டிடத் துறையிலும் தொடங்கியிருக்கிறது. கட்டிடக் கலை படிப்பு முடித்து வெவ்வேறு திட்டங்களில் பணியாற்றிய அனுபவத்தில் நானும் என் தோழி நிவேதிதா மெஹ்ரோத்ராவும் ‘மிட்டி லேப்’ என்கிற நிறுவனத்தைத் தொடங்கினோம். பசுமைக் கட்டிடங்கள் கட்டுவது, இன்டீரியர் எனப்படும் கட்டிடத்தின் உள்புற அழகியல் வேலைப்பாடு போன்றவற்றைச் செய்துவருகிறோம். கட்டிட வேலைகளில் சிமென்ட் பயன்பாட்டை முற்றிலுமாகக் குறைக்க முடியாது. ஆனால், அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மணலுக்கான தேவையைத் தவிர்க்க முடியும். இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியும். மாற்றத்தை நோக்கிய முதல்படியாகத் தொடங்கி இப்போது சில புராஜெக்ட்களை நிர்வகித்துவருகிறோம்” என்றார் ஜெயஸ்ரீ.

புதுமைகள்

சென்னையில் கட்டப்பட்டுவரும் ‘கேளிர்’ உணவகத்தின் உள்புற வேலைப்பாடுகளைக் கவனித்துவரும் இவரது குழு அப்பளம் விளக்குகள், காய்ந்த வாழை விளக்குகள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளது. கண்ணைக் கவரும் இந்த விளக்குகள் இயந்திர உதவியுடன் உருவாக்கப்படவில்லை என்கிறார்கள்.

“வெங்காயத் தோல், காய்கறி பழக் கழிவு, காபிக் கழிவு போன்று இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருள்களையும் காகிதங்கள், இயற்கைப் பசை போன்றவற்றையும் பயன்படுத்தி ‘Papier mache’ எனப்படும் முறையில் கையால் குழைத்து உருவாக்கிய கலவையைப் பயன்படுத்தி விளக்குகளை உருவாக்கினோம். இவை பார்ப்பதற்கு இயந்திரத்தில் வடிவமைக்கப்பட்டதைப் போன்றே அழகாக இருக்கும். நவீன கட்டிட வேலைப்பாடுகளில் இருந்து விலகி நிற்கும்போது நிறைய புதுமைகளைப் புகுத்த முடியும். ஒருவேளை பசுமை முறையில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கிறோம் என்றால் பெரிய சேதாரம் இருக்காது. இந்தக் கட்டிடத்தைக் கலைத்து இதில் உபயோகித்த பொருள்களை ‘ஜீரோ வேஸ்டேஜ்’ முறையில் மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தலாம். சிமென்ட் கட்டிடத்தை இடித்தால் அதிலிருந்து கிடைக்கும் எந்தப் பொருளையும் மறுசுழற்சி செய்ய முடியாது” என்கிறார் அவர்.

கட்டிடக் கலையில் பெண்கள்

மருத்துவம், தொழில்நுட்பத் துறை, ஃபேஷன் டிசைனிங் போல கட்டிடக் கலை சார்ந்த படிப்புகளைப் பெண்கள் அதிக அளவில் தேர்வுசெய்வதாகச் சொல்லும் ஜெயஸ்ரீ, மற்ற துறைகளைப் போல இதிலும் சில சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன என்கிறார். “மற்ற துறைகளைப் போல இதிலும் டெஸ்க் வொர்க் எனப்படும் எட்டு மணி நேர கணினி வேலை மட்டும் பெண்களுக்கு ஒதுக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், கட்டிடம் கட்டப்படும் இடத்துக்குச் செல்வது, பொருள்களைக் கையாள்வது, ஒரு குழுவை வழிநடத்துவது போன்றவற்றையும் பெண்கள் செய்துவருகின்றனர். பசுமைக் கட்டிடங்களின் கட்டுமான முறையில் உடலுழைப்புக்கான தேவை அதிகம். பெண்கள் இதைச் சிறப்பாகச் செய்துவருகிறார்கள். பல நூறு பேரைப் பெண்கள் வழிநடத்திச் செல்வது என்பது முடியாத காரியமா என்ன? கண்டிப்பாக முடியும், திறம்படச் செய்ய முடியும்” என உறுதியாகச் சொல்கிறார் ஜெயஸ்ரீ.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in