

சமூகத்தில் நிலவும் கட்டுக்கதைகளில் முக்கியமானவை, தடுப்பூசிகள் தேவையற்றவை என்பதும் அவற்றால் தீங்கு நேரும் என்கிற பீதியும்தான். அதை மக்களும் நம்பி முக்கியமான தடுப்பூசிகளைக்கூடத் தங்களின் பிள்ளைகளுக்குத் தவிர்க்கும் போக்கைக் காண முடிகிறது.
இதைத் ‘தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயக்கம்’ (Vaccine Hesitancy) என்கிறோம். இந்தத் தயக்கம் அதிகரிப்பது காலப்போக்கில் நாட்டின் பொதுச் சுகாதாரத்துக்குப் பெருத்த ஊறுவிளைவிக்கும். நோய்கள் இரண்டு வகைப்படும்.
ஒன்று, மனிதரிடமிருந்து மனிதருக்குத் தொற்றும் நோய்கள். இன்னொன்று, மனிதரிடம் இருந்து மனிதருக்குத் தொற்ற இயலாத நோய்கள். ஏறத்தாழ மனித இனம் தோன்றிய காலந்தொட்டு 20ஆம் நூற்றாண்டுவரை மனிதகுலம் தொடர்ந்து பல தொற்றுநோய்களுக்கு ஆட்பட்டு இன்னல்களைச் சந்தித்துள்ளது.
தற்போது தொற்றுநோய்களால் ஏற்படும் சிக்கல்கள் குறைந்திருப்பினும் முற்றிலும் நீங்கியபாடில்லை. பெரியம்மை, காலரா, காசநோய், ரணஜன்னி, கக்குவான் இருமல், சீதபேதி, தொண்டை அடைப்பான் என்கிற தொற்றுநோய்கள் பல்வேறு வடிவமெடுத்து உயிரை எடுத்துவந்தன.
தடுப்பூசிகளின் அவசியம்
வைரஸ்கள், பாக்டீரியா, பூஞ்சைகள், புரோடோசோவாக்கள் எனும் ஒரு செல் உயிரிகளால் தொற்று நோய்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இவற்றுக்கு எதிராக மனிதர்களைக் குறிப்பாகக் குழந்தைகளைக் காக்கும் கேடயங்களாகச் செயல்படக் கூடியவை தடுப்பூசிகள்தான்.
பிறக்கும் குழந்தைகளுக்கும் சரி, அவர்கள் வளரும் போதும் சரி, அதுவரை அவர்களது எதிர்ப்பு சக்தி சந்தித்திராத புதிய கிருமியை எதிர்கொள்ளும் போது மூன்று விஷயங்கள் நிகழ் வதற்குச் சாத்தியம் உள்ளது.
முதல் சாத்தியம், அந்தக் கிருமிக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தால் கடுமையான போராட் டத்தின் விளைவாக அந்தக் கிருமி வென்று மனித உயிரிழப்பு ஏற்படுவது. இரண்டாவது சாத்தியம், அந்தக் கிருமிக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற்றாலும் அதற்குத் தந்த விலையாக முக்கிய உறுப்புகள் செயலிழப்பு, உடலின் செயல்பாட்டில் முடக்கம் ஆகியவை ஏற்படலாம்.
மூன்றாவது சாத்தியம், அந்தக் கிருமியுடன் திறம்படச் செயல்பட்டு எதிர்ப்பு சக்தியின் விளைவால் உடல் வெற்றிபெறுவது. மேற்கூறிய மூன்று விஷயங்களில் மூன்றாவது சாத்தியம் நிகழ மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு மட்டுமே உண்டு. முதல், இரண்டாம் விஷயங்கள் நிகழ மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்பு உள்ளது என்பதால் தடுப்பூசிகள் மூலம் நாம் தொற்றுநோய்களுக்குப் பாதுகாப்பு தேடுவது சிறந்த வழி.
தடுப்பூசிகள் செயல்படும் முறை
குழந்தைகளின் உயிர், உடலுக்கு ஊறுவிளைவிக்கும் என்று அடையாளம் காணப்பட்ட கிருமிகளுக்கு எதிராகத் தடுப்பூசிகள் உருவாக்கப் படுகின்றன. தடுப்பூசிகளால் தடுக்கச்சாத்தியமுள்ள நோய்கள், ‘தடுப்பூசி தடுக்கக்கூடிய நோய்கள்’ (VaccinePreventable Diseases) என்று வரையறுக் கப்பட்டுள்ளன.