

‘லொக்.. லொக்..’ என்று தொடர்ந்து இருமல் இருந்தால், உடனே பக்கத்தில் உள்ள மருந்தகத்துக்குச் சென்று ஒரு சிரப் வாங்கிக் குடிப்பது இயல்பாகிவிட்டது. ஆனால், இனி இப்படி மருந்துகத்துக்குச் சென்று நாமாகவே இருமல் மருந்தை வாங்க முடியாது.
மத்திய அரசு அதற்குத் தடை விதித்துவிட்டது. இருமல் மருந்து வேண்டுமென்றால், மருத்துவரைப் பார்த்து, அவர் அளிக்கும் பரிந்துரைச் சீட்டை மருந்தகத்துக்கு எடுத்துச்சென்றாக வேண்டும்.
இதன் பின்னணியில் உயிரிழப்புச் சம்பவங்கள் உள்ளன. 2025இல் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் கலப்பட இருமல் மருந்து உட்கொண்ட 24 குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதேபோல 2022இல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்ட ஆப்பிரிக்கா, மத்திய ஆசியப் பகுதிகளைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர்.
இதனால், இந்தியாவில் இருமல் மருந்துகளின் விற்பனைக்குக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மருந்து விதிகள் 2026 திருத்தத்தின்படி வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களின் வரிசையில் இடம்பெற்றிருந்த ‘சிரப்’ என்கிற சொல் தற்போது நீக்கப்பட்டுவிட்டது. இதனால், பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் இனி இருமல் மருந்தை வாங்க முடியாது.