

பொதுவாக மலட்டுத்தன்மைக்குப் பெண்கள் மட்டுமே காரணம் என்கிற எண்ணம் சமூகத்தில் வேரூன்றி இருக்கிறது. ஒரு தம்பதிக்கு இயற்கையாக மகப்பேறு உண்டாகாமல் போனால், அந்தத் தம்பதியில் பெண் மட்டுமே பரிசோதனைக்கும் சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுவதைக் காணமுடிகிறது.
‘எங்கள் வீட்டு ஆண்களுக்குப் பிரச்சினை யில்லை’ என்று கணவர் வீட்டார் சிகிச்சைக்கு வர மாட்டார்கள். இது தவறான போக்கு. மகப்பேறின்மை குறித்து அறிவது மிகவும் அவசியம். ஒரு தம்பதி ஓராண்டு காலம் தொடர்ந்து ஒரே இடத்தில் வசித்து, வாரத்தில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாள்கள் இணைசேர்ந்தும் குழந்தை பிறக்காவிட்டால் அது குழந்தையின்மை என்று வகைப்படுத்தப்படும்.
சிலர் திருமணமாகி மூன்று ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை என்பார்கள். தீர ஆராய்ந்தால், மூன்று ஆண்டுகளில் மொத்தமாக மூன்று மாதங்கள்கூட ஒன்றாக இருந்திருக்க மாட்டார்கள். கணவர் வெளிநாடு சென்றிருப்பார்.
தொழில்/வேலை நிமித்தமாக கணவன், மனைவி வெவ்வேறு ஊர்களில் இருப்பார்கள். மாதம் இரண்டு நாள் மட்டுமே சேர்ந்திருப்பார்கள். இவர்கள் மகப்பேறின்மை என்கிற வரையறைக்குள் வர மாட்டார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை 10-14% தம்பதியருக்கு மகப்பேறின்மை பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, கோடிக் கணக்கான தம்பதியர். மகப்பேறின்மைக்கான மூன்று காரணங்கள் உண்டு. 1. ஆண் சார்ந்த காரணங்கள், 2. பெண் சார்ந்த காரணங்கள், 3. காரணம் கண்டறிய இயலாத மகப்பேறின்மை.
ஆண் சார்ந்த மகப்பேறின்மை
கண்டறியப்படுபவையில் 40-50 சதவீதம் ஆண்கள் சார்ந்த மகப்பேறின்மைதான் என்பது கவனிக்கத்தக்கது. எனினும் சமூக அழுத்தம், அருவருப்பு, ஆணாதிக்கத்தால் பெண்களை மட்டுமே குற்றவாளிகள் போலச் சித்தரிக்கும் போக்கு நிலவுகிறது.
விந்தணுக்கள் குறைவாக இருப்பது (ஆலிகோஸ்பெர்மியா), விந்தணுக்களே முற்றிலும் இல்லாதிருப்பது (ஏசூஸ்பெர்மியா), விந்தணுக்கள் மந்தமாக முன்னோக்கி நகர்வது (அஸ்தினோஸ்பெர்மியா), விந்தணுக்களின் அங்கங்களில் குறைபாடு (டெரட்டோஸ்பெர்மியா) என்று பல வகைகளில் விந்தணுக்கள் உற்பத்தி, எண்ணிக்கை, அவற்றின் தரம் சார்ந்து ஆண் மலட்டுத்தன்மை வகைப்படுத்தப்படுகிறது.
விதைப்பையில் உள்ள சிரைகள் வீக்கத்தை ‘வெரிக்கோசீல்’ என்கிறோம். இதனால் விதைப்பையில் தேவைக்கு மீறி அதிக வெப்பம் உண்டாகி, விந்தணு உற்பத்தி பாதிக்கப்படுகிறது. வெரிகோசீல் பிரச்சினையைச் சிறிய அறுவைசிகிச்சை மூலம் சீராக்கலாம்.
ஆண்களிடையே அதிகரித்துவரும் புகைப் பழக்கம், புகையிலை நுகர்வு, மதுப் பழக்கம், உடல் பருமன், நீரிழிவு ஆகியவற்றாலும் பணி செய்யும் இடத்தில் அதிக வெப்பத்தில் இருப்பதாலும் ஆண் மலட்டுத்தன்மை அதிகரித்துவருகிறது.