

தீபாவளிப் பண்டிகையில் பட்டாசுகளுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. குறிப்பாக, பட்டாசு வெடிப்பது குழந்தைகளுக்குக் குதூகலத்தைத் தரும்.
ஆனால், பட்டாசு வெடிக்கும்போது கவனமாக வெடிக்க வேண்டும். அஜாக்கிரதையாக வெடித்தால் உடலில் தீக்காயம் ஏற்படும் அபாயம் உண்டு. ஒரு வேளை தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது?
முதலுதவிக் குறிப்புகள்
* பட்டாசால் தீக்காயம் ஏற்பட்டால், உடனடியாக காயம் ஏற்பட்ட இடத்தைத் தண்ணீரில் நனைக்க வேண்டும். அதனால் எரிச்சல் அடங்கி, வலியும் குறையும். தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றிலும் உள்ள திசுக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறையவும் வாய்ப்பு உண்டு. பின்னர் ஒரு சுத்தமான துணியினால் தீக்காயம் பட்ட இடத்தைச் சுற்றி, காயமடைந்தவரை அருகில் உள்ள மருத்துவரிடம் உடனே அழைத்துச்செல்ல வேண்டும்.
* வெடி விபத்தால் முகத்தில், கண்ணில் காயம் ஏற்பட்டால், முகத்தையும் கண்ணையும் தண்ணீர் விட்டுக் கழுவக் கூடாது. சுத்தமான துணியைக் கொண்டு முகத்தை லேசாக மூடி உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
* தீக்காயம் கண்ணைச் சுற்றி ஏற்பட்டால் மஞ்சள் தூள், பர்னால், பேனா மை, ஜெர்ஷியன் வைலட், ஏதேனும் ஆயின்மென்ட் ஆகியவற்றைத் தடவக் கூடாது. இதனால் எந்த அளவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது என்பது சரியாகத் தெரியாமல் போய்விடும். சுத்தம் செய்வதிலும் சிரமம் ஏற்படும்.