

பிள்ளைக்குப் பிறந்தநாள் என்றாலும் சரி, பிள்ளையாருக்குப் பிறந்தநாள் என்றாலும் சரி ‘இனிப்பு எடு கொண்டாடு’ என்றுதான் வரலாறு நமக்குச் சொல்கிறது. இனிப்பின் மீதான பரவச நிலையை இப்போதைய சாக்லெட் நிறுவனங்கள் கற்றுத் தரவில்லை.
ரொம்ப முன்னதாகவே அது நமக்குப் பிடித்த ஒன்றுதான். வாலில்லாக் குரங்கு-பொது மூதாதைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து, ஹோமோ சேப்பியன்ஸாக மாறி, ஆப்ரிக்கக் கண்டத்திலிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் அலாஸ்காவுக்கும் நம் பெரிய தாத்தாக்கள் நடந்தபோதே இது நடந்திருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன.
நெருப்பு கண்டறியப்படாத காலத்தில், பசிக்குக் கஷ்டப்பட்டு வேட்டையாடிச் சாப்பிட்ட காலத்தில், கூட்டமாகப் பசியோடு நடந்தபோது, வழியில் தென்பட்ட தேனடையையோ பழங்களையோ சுவைத்த கணத்தில் அது கொடுத்த கூட்டுச் சர்க்கரையால் குதூகலமும் ஆற்றலும் கிடைத்தபொழுதில் ஆதிமனிதர்களின் முகத்தில் புன்னகையும் பூத்தது.
சில நொடியில் உடனடி ஆற்றல் கிடைத்த அந்தக் கணத்தில் ஆதிமனிதர்கள் மகிழ்ந்த அனுபவம்தான், இன்றைக்கும் இனிப்பைப் பார்த்ததும் மனம் அலாதிக் குதூகலம் அடைவதற்குக் காரணம் என்கின்றனர் மானுடவியலாளர்கள்.
இனிப்பு என்ன செய்யும்?
இனிப்பு உடலை வளர்க்கும் என்கின்றன சித்தமும் ஆயுர்வேதமும். ஏன் நவீனமும் அப்படித்தான் வலியுறுத்துக்கிறது. கலோரியைக் கொட்டி உடனடி ஆற்றலைக் கொடுப்பது சர்க்கரையின் வேலை.
கொஞ்சம் விலை குறைவாகவும், துரித உணவில் சேர்க்கும்போது சுவையைத் தாண்டி உணவைப் பாதுகாக்கும் தன்மையையும் கொண்டிருப்பதால் தீவிரப் பதப்படுத்த உணவு (UPF – Ultra processed foods) நிறுவனத்துக்கும் சர்க்கரை ஒரு வரப்பிரசாதம். 300 மி.லி. கோகோ கோலாவில் கிட்டத்தட்ட 31-32 கிராம் சர்க்கரை உள்ளது.