

ஊசி, மாத்திரை மூலமாக எடுத்துக்கொண்ட மருந்து, நம் உடலில் நோயுற்ற உறுப்பு மட்டுமல்லாமல் மற்ற உறுப்புகளுக்கும் செல்கிறது. இப்படிச் செல்வதற்கு அந்த மருந்தின் அளவில் நூறில் ஒரு பங்கு போதுமானது.
அந்த மருந்து எந்தெந்த உறுப்புகளுக்குச் சென்றது என்பதைக் கண்டறிய முடியாது. ஆனால், தெரனாஸ்டிக்ஸ் சிகிச்சையில் சில மூலக்கூறுகள் மூலமாக, அது உடலில் எங்குச் செல்கிறது; நோய் பாதிப்பு எத்தகையது என மதிப்பிட முடியும். உரிய சிகிச்சையை அளித்து நோயுற்ற அணுக்களை அகற்றவும் முடியும்.
மருந்து எங்கே செல்கிறது? -
“சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நோய் கண்டறிதல் (diagnosis), குணப்படுத்துதல் (therapy) இரண்டும் ஒன்றிணைந்ததுதான் தெரனாஸ்டிக்ஸ். இது புதிய பிரிவு கிடையாது” என்கிறார் சென்னை ஓமந்தூரார் அரசுப் பன்னோக்கு மருத்துவமனையின் மேம்பட்ட அணுக்கரு மருத்துவ ஆய்வுத் துறை தலைவரான டாக்டர் இ.பிரபு. “1936லேயே தைராய்டு புற்றுநோய் சிகிச்சையில் கதிரியக்கத்தன்மை கொண்ட அயோடின் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
அதிலிருந்து வெளி யாகும் காமா கதிர்வீச்சு அது எங்குச் செல்கிறது எனக் காட்டியது; பீட்டா கதிர்வீச்சு புற்றுநோய் செல்களைக் குணப்படுத்தியது. ஆனால், தைராய்டு பாதிப்புக்கு உள்ளான பகுதிக்கு மட்டுமல்லாமல் உடலெங்கும் கதிரியக்க அயோடின் சென்றது. தற்போது இருக்கிற தொழில்நுட்ப முன்னேற்றத்தால், பாதிப்புக்கு உள்ளான பகுதிக்கு மட்டும் செல்லச் சில வேதிப்பொருள்கள் வாகனங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
காமா கதிர்வீச்சு கொண்ட ரேடியோ ஐசோ டோப்புகள் உடன் குறிப்பிட்ட மூலக்கூறுகளைக் கலந்து உடலில் செலுத்தும்போது, அது செல்லும் பாதையைக் கண்டறியலாம். அது, நோயுற்ற செல்லை மட்டும் செயலிழக்க வைக்கும்.
அருகிலுள்ள செல்களுக்குக்கூடக் கதிரியக்கப் பாதிப்பு வராது. இந்தியாவில் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகளில் இது செயல் படுத்தப்படுகிறது. நம்மூரில் இதனைச் செயல்படுத்தப் போதுமான விழிப் புணர்வு இல்லை” என்கிறார் டாக்டர் பிரபு.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை:
மோனோகுளோனல் ஆண்டி பாடிகள் (monoclonal antibodies) என்பவை நோயெதிர்ப்புத் தன்மை கொண்ட புரதங்கள். புற்றுநோய்க்கு எதிரான ஆண்டிபாடிகளை உடலில் செலுத்தும்போது, பாதிப்புக்குள்ளான செல்களின் மீது அவை ஒட்டிக் கொள்ளும்.