

இவான் கோல்ட்பர்க் என்னும் மனநல மருத்துவர் 1995இல் விளையாட்டுக்காக இணையதள அடிமை நோய் என்கிற ஒன்றை எழுத, பின்னர் அதுவே நிஜமாக ஆனது என்பதைப் பற்றிப் பார்த்தோம் அல்லவா? விளையாட்டுக்கே அடிமை ஆகும் பாதிப்பு ஒன்று வரும் என அவர் நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.
2022இல் உலக சுகாதார நிறுவனம் இணையதள விளையாட்டுக்கு அடிமையாவது ஒரு பாதிப்பு (Online gaming disorder) என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இணையதளங்களின் வருகைக்கு முன்பே வீடியோ கேம்களுக்கு அடிமையாவது இருந்துவருகிறது.
எழுபதுகள், எண்பதுகளில் டிவியுடன் சேர்ந்து விளையாடுவது அல்லது தனியாக விளையாட்டுக் கருவிகள் அல்லது இதற்கென இருக்கும் மையங்களில் விளையாடுவது என இருந்தது.
மேலும் இதற்கெனத் தனியாகப் பணம் செலுத்த வேண்டியிருந்தது. ‘Space invaders’, ‘Nintendo’ போன்ற விளையாட்டுகள் மிகப் பிரபலமாக இருந்தன. குறிப்பாக ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் ஸ்பேஸ் இன்வேடர்ஸ் என்னும் விளையாட்டை விளையாட 100 யென் நாணயம் தேவையாக இருந்ததாம்.
அதாவது, நம் ஊரில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு எடை பார்க்கும் கருவிகள்போல, அங்கு நாணயங்களைப் போட்டு வீடியோ கேம் விளையாடும் கருவிகள், நிலையங்கள் இருந்தன.
என்னென்ன பாதிப்புகள்?
எழுபது, எண்பதுகளில் இந்த வீடியோ கேம்கள் எவ்வளவு பிரபலமாக இருந்தன என்றால், ஜப்பானில் நூறு யென் நாணயத் துக்கே தட்டுப்பாடு வரும் அளவுக்குப் போனதாம். அதன்பின் அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துச் சிறார் வீடியோ கேம்கள் விளையாடுவதைக் குறைக்க வைத்தது.