

கிரிக்கெட்டில் 'MSD’ என்றால், உடனே எம்.எஸ்.தோனி என்று சொல்லிவிடுவோம். நம் உடல் ஆரோக்கியம் தொடர்பான ‘MSK’ (Musculoskeletal) என்றால், அதைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? ‘MSK’ (Musculoskeletal Health) என்கிற மூட்டு – தசை ஆரோக்கியம் என்பது வலியை மட்டும் குறைப்பதற்கான மருத்துவ அணுகுமுறை அல்ல.
அது மனித உடல் எவ்வாறு இயங்குகிறது, நகர்கிறது, வேலை செய்கிறது என்பதை அறிவதோடு, நீண்ட காலம் செயல்திறனுடன் இருப்பதை உறுதிசெய்யும் அறிவியல் புரிதல். உலக மக்கள்தொகையில் மூன்று பேரில் ஒருவர் வாழ்நாளில் ‘MSK’ பிரச்சினையை எதிர்கொள்கிறார்.
வேலை செய்யும் வயதினரில் 40–50% பேர் ஆண்டுக்குக் குறைந்தது ஒரு முறையாவது மஸ்குலோஸ்கெலிட்டல் பிரச்சினையைச் சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இன்றைய வாழ்க்கை முறையில் நீண்ட நேரம் உட்காருதல், திறன்பேசி, கணினிப் பயன்பாடு, குறைந்த உடல் இயக்கம், மன அழுத் தம் ஆகியவை சேர்ந்து, எம்.எஸ்.கே.பிரச்சினையைத் தொடர்ச்சியாக உருவாக்குகின்றன. இதைப் புரிந்து கொள்ளாமல் வலியை மட்டும் போக்க முயல்வது முழுமையான தீர்வாகாது.
வலியைத் தாண்டி...
மூட்டு – தசை அமைப்பு என்பது தசைகள், மூட்டுகள், எலும்புகள், நரம்புகள், இணைப்புத் திசுக்கள் ஒன்றாக இணைந்து உருவாக்கும் உடல் இயக்க அமைப்பு. இந்த அமைப்பு சரியாகச் சமநிலையில் இயங்கும்போது, உடல் இயக்கம் மென்மையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
இந்தச் சமநிலை பாதிக்கப் படும்போதுதான் வலி, மூட்டு இறுக்கம், சோர்வு போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. வலி என்பது நோய் அல்ல; உடல் தரும் ஓர் எச்சரிக்கை. அதைச் சரியான நேரத்தில் புரிந்து கொண்டு திருத்தும் வாய்ப்பே எம்.எஸ்.கே. அறிவின் முக்கியத்துவம்.
எம்.எஸ்.கே. பற்றிய அடிப்படைப் புரிதல் உள்ள ஒருவரிடம், உடல் குறித்து ஒரு பொறுப்புணர்வு உருவாகிறது. அவர் வலியை அலட்சியப் படுத்த மாட்டார். தன்னுடைய உட்காரும் நிலை, நடக்கும் முறை, பொருள் களைத் தூக்கும் - கையாளும் பழக்கம் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவார்.