

எந்த ஒரு விஷயத்துக்கும் அதன் மிகப்பெரிய பலமே, அதன் பலவீனமாகவும் அமைந்து விடும். ஸ்மார்ட்போன் எனப்படும் திறன்பேசியைப் பொறுத்தவரை, அது நூறு சதவீத உண்மை. அதன் மிகப்பெரிய பலங்கள் இரண்டு.
ஒன்று, அதில் குவிந்திருக்கும் கோடிக்கணக்கான தகவல்கள். இரண்டாவது, அதிகரித்துக்கொண்டே இருக்கும் அதன் வேகம். இந்த இரண்டு பண்புகளுமே அவற்றால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு மிக முக்கியக் காரணங்களாக மாறியும்விடுகின்றன.
மனித மூளை தூண்டுதல்களைத் தேடிச் செல்கிறது. தூண்டுதல்களின் அளவு குறைவாக இருக்கும்வரை நம் கட்டுப்பாட்டில் நம் கவனமும் செயல்களும் இருக்கும். அதுவே அநேகமான தூண்டுதல்கள் கிடைக்கும்போது தூண்டுதல்களின் கட்டுப்பாட்டுக்குள் நாம் சென்றுவிடுகிறோம்.
இதைத்தான் ‘டிஜிட்டல் கவனச்சிதறல்’ (Digital Distraction) என்கிறோம். இது ஒரு போதையைப் போல் நம் மூளையில் உள்ள டோபமின் என்னும் வேதிப்பொருளின் செயல்பாட்டைத் தூண்டுவதால், அடிக்கடி அதைச் செய்துகொண்டே இருக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறோம். இந்தத் தொடரில் இதுவரை நாம் விரிவாகப் பார்த்தவற்றைச் சுருக்கமாகத் திரும்பிப் பார்த்து விடுவோம்.
என்னென்ன மாற்றம்?
திறன்பேசிகளைப் பார்க்காவிட்டால் ஏதோ முக்கியமான ஒன்றை இழந்துவிடுவோமோ என்கிற பதைபதைப்பினால் (Fear of Missing Out) போதைப் பொருளுக்கு அடிமையாவதைப் போல் முன்யோசனை இன்றி அதீத நேரம் திறன்பேசிகளைப் பார்க்கும் செயலுக்கு அடிமையாகிவிடுகிறோம் (Behavioural addiction).
குறிப்பாக, பதின்வயதினர் நாள் தோறும் சுமார் 6 முதல் 8 மணி நேரம்வரை திறன்பேசித் திரையைப் பார்ப்பதாக (Screen time) ஆய்வுகள் சொல்கின்றன. இரண்டா
வது பண்பு அதீத வேகம். அவற்றின் அதீத வேகத்துக்குப் பழகிவிட்டதால் மற்ற செயல்களைச் செய்ய நமக்குப் பொறுமை இருப்பதில்லை.
இணைய தளத்தில் சட்டென்று ஒரு பொருளை வாங்கிப் பழகியபின் நிதானமாகப் பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்று கடைக்குப் போய் ஒரு பொருளை வாங்கு வதற்குப் பொறுமை இருக்காது. இந்தப் பொறுமை இழப்பும் (Impulsivity) மிக முக்கிய மான பாதிப்பு.