

இது இணைய உலகம். குறிப்பாகத் திறன்பேசி காலம். பிறந்த குழந்தைக்கு தாய் முகம் தெரிகிறதோ இல்லையோ, திறன்பேசி பிம்பம் நன்றாகப் பதிந்துவிடுகிறது. உணவு ஊட்ட, அழுகையை நிறுத்த, தொந்தரவு இல்லாமல் பெற்றோர் வேலை செய்ய எனத் திறன்பேசி குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு அறிமுகமாகிவிடுகிறது.
நாளடைவில் குழந்தைகள் அடிமையாவதற்கு இது வழிவகுக்கிறது. சிறிது விபரம் தெரிந்தவுடன், திறன்பேசியை நாம் கொடுக்கவில்லை என்றால், அதிகம் கோபப்படுகிறார்கள், சண்டைபோடுகிறார்கள். அந்தக் காலக் குழந்தைகளுக்கு விளை யாட்டு என்பது வீட்டுக்கு வெளியேதான் இருந்தது.
இந்தக் காலக் குழந்தைகளின் முக்கியப் பொழுதுபோக்கே திறன்பேசிதான். அது ஒரு தகவல்தொடர்புக் கருவி என்பதை பெரியவர்கள், அவர்களுக்கு சொல்வது இல்லை. இதனால் வீட்டிலேயே அடைந்துக் கிடக்கிறார்கள்.
அவரவர் திறன்பேசியில் மூழ்கிவிடுகிறார்கள். தொடர்ந்து நீண்டநேரம் திறன்பேசி திரையைப் பார்ப்பதால் நாளடை வில் கிட்டப்பார்வை பிரச்சினை ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தீவிரமடையும் பிரச்சினை
குழந்தைகளிடையே அதிகரித்துவரும் கிட்டப்பார்வை குறைபாடு, உலகளாவிய பொதுசுகாதார பிரச்சினையாக இன்று உருவெடுத்துள்ளது. கரோனா பெருந்தொற் றுக்குப் பிறகு இந்நிலை அதிகரித்துவருவது குறித்து உலக சுகாதார நிறுவனமும், பார்வையிழப்புக்கான உலகளாவிய அமைப்பும் (International Agency for Prevention of Blindness) எச்சரித்துள்ளன. உடனடியாக இதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், 2050இல் கிட்டப்பார்வை குறைபாடு தீவிரமாக அதிகரித்துவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.