

சமூகத்தில் பரவியிருக்கும் முக்கியமான கட்டுக்கதைகளுள் ஒன்று, வென்டிலேட்டர் சிகிச்சை குறித்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் சிகிச்சையில் ஒருவர்
இருந்தால், அவர் உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை; வென்டிலேட்டர் சிகிச்சை வெறுமனே பணம் பறிப்பதற்கான அவசியமற்ற சிகிச்சை என்றே நினைக்கிறார்கள்.
சில திரைப்படங் களில் வென்டிலேட்டர் சிகிச்சையில் இறந்த வர்களை வைத்துப் போலியாக நாடகமாடுவது போன்ற காட்சிகளால் அந்தச் சிகிச்சை குறித்துப் பல அவநம்பிக்கைகள் சமூகத்தில் நிலவிவருகின்றன.
எப்படிச் செயல்படுகிறது?
பொதுவாக ஓர் அறைக்குள் புதிய காற்று உள்ளே வந்து, பழைய காற்று வெளியே செல்வதை ‘வென்டிலேஷன்’ (காற்றுச் சுழற்சி) என்கிறோம். இதைப் போன்றே உடலிலும் ஆக்சிஜன் நிரம்பிய புதிய காற்று உள்ளே வந்து, கார்பன் டைஆக்சைடு நிரம்பிய பழைய காற்று வெளியே செல்வது, நம் உயிர் வாழ்வுக்குத் தேவையான அவசியக் காற்றுச் சுழற்சி.
காற்றில் உள்ள ஆக்சிஜனை ரத்தத்தில் ஏற்றுவது, ரத்தத்தில் இருக்கும் கார்பன் டைஆக்சைடை வெளியேற்றுவது என ஓய்வறியாச் சலவைக்காரரைப் போலச் செயல்படுபவை நமது நுரையீரல்கள். அவை செவ்வனே அவற்றின் பணியைச் செய்வதற்கு இரண்டு விஷயங்கள் தேவை.
முதல் விஷயம், காற்று உள்ளே சென்று வெளியேறத் தேவையான தங்குதடையற்ற சுவாசப்பாதை. இரண்டாவது விஷயம், காற்றை நுரையீரல் உள்ளே இழுக்கவும் வெளி விடவும் உதரவிதானம், நெஞ்சாங்கூட்டுத் தசைகளின் இயக்கம் இன்றியமை யாத தேவையாகிறது.
பல நேரத்தில், நுரையீரலில் ஏற்பட்ட நிமோனியா போன்ற கொடுந்தொற்றுகளின் காரணமாக, அதன் இயக்கம் பாதிக்கப்படும். இதன் விளைவாக, ரத்தத்தில் ஆக்சிஜன் ஏற்றப்படுவது முறையாக நடக்காமல் போகும்.
நுரையீரலில் நீர் தேங்குதல், தீவிர ஆஸ்துமா நிலை, தசைகளின் செயலிழப்பை ஏற்படுத்தும் மஸ்குலர் டிஸ்ட் ரோபி போன்ற நோய்கள், இதயச் செயல் முடக்கம், சுவாசச் செயல் முடக்கம், அறுவை சிகிச்சைகள், சுவாசப்பாதையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொள்ளுதல், நினைவு மங்கி மூர்ச்சை நிலைக்குச் செல்வது எனப்பல காரணங்களால் சுவாசித்தல் இயற்கை யாக நிகழாமல் போகிறது.
இதுபோன்ற அவசரச் சூழ்நிலையில் உடனடியாக சி.பி.ஆர். (Cardiopulmonary resuscitation - CPR) எனும் இதய சுவாசச் செயல் மீட்பு முதலுதவியைச் செய்து, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவ மனைக்குக் கொண்டுசென்று உடனடியாக ஒருவரது உயிரைக் காக்க முடியும். அந்த மேம்பட்ட சிகிச்சையாகவே வென்டி லேட்டர்கள் பொருத்தப்படுகின்றன.