

சொரியாசிஸ் எனும் சருமம் சார்ந்த தன்னுடல் தாக்கு நோய்க்குத் தோல் நோய் மருத்துவரிடம் செல்லாமல் இணையதளம் மூலமாக மருந்து, மாத்திரைகள் வாங்கி உட்கொண்டுவந்த சகோதரி ஒருவரைக் கண்டேன்.
அவரிடம் பேசியபோது, “இன்ஸ்டாகிராமில் சரும டீடாக்ஸ் செய்யும் சிகிச்சையைப் பார்த்தேன். இதன்மூலம் சொரியாசிஸைக் குணப்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது. அதனால், இந்த மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறேன்” என்றார்.
அவருக்கு சொரியாசிஸ் குறித்து விளக்கமளித்து, தோல் நோய் மருத்துவரைப் பார்க்கப் பரிந்துரைத்தேன். தற்போது இணையதளத்தில் மிகப் பிரபலமான சொல்லாக ‘டீடாக்ஸ்’ விளங்கிவருகிறது. யாரைப் பார்த்தாலும் டீடாக்ஸ் டிரிங்க், டீடாக்ஸ் டயட் என்று இருப்பதையும் பிறருக்கும் அவற்றைப் பரிந்துரைப்பதையும் காண முடிகிறது.
அதென்ன டீடாக்ஸ்?
இந்த டீடாக்ஸ் என்கிற சொல் எங்கிருந்து வந்தது? யாரேனும் விஷம் குடித்துவிட்டாலோ மருந்துகள் அல்லது நச்சுத்தன்மை வாய்ந்த உலோகங்களை உட்கொண்டுவிட்டாலோ அவர்களது உடலிலிருந்து விஷத்தை வெளியேற்றுவதற்கு ‘நஞ்சை வெளியேற்றல்’ அல்லது ‘டீடாக்சிஃபிகேசன்’ என்கிற சொல் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், உடலில் நாள்தோறும் உயிருக்கு ஆபத்தான பல்வேறு நச்சுகள் உருவாவது போலவும், அவற்றைப் பல சிகிச்சை முறைகள் மூலம் வெளியேற்றியே தீர வேண்டும் என்பதும் மருத்துவ, அறிவியல்ரீதியாக நிரூபணம் செய்யப்படாத கற்பிதமே. பொதுவாக உடலுக்குள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும் வளர்சிதை மாற்றத்தால் பல்வேறு வளர்சிதை மாற்றக் கழிவு தோன்றும்.
இது இயற்கையானது. எப்படி வீடுகளில் அன்றடம் மக்கும், மக்காத குப்பைகள் உருவா கின்றனவோ அதுபோலத்தான் இதுவும். உடலில் நிகழும் இயற்கையான நிகழ்வு. உடலுக்குள் உருவாகும் வளர்சிதை மாற்றம் சார்ந்த கழிவு எண்டோடாக்சின்ஸ் (Endotoxins).
யூரியா, மலம், லாக்டிக் அமிலம், சுவாசத்தில் வெளிவிடும் கரியமில வாயு போன்றவை இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள். தவிர, வெளிப்புறத்திலிருந்து உடலுக்குள் வரும் காற்று மாசு, நீர் மாசு, உணவில் சேர்க்கப்படும் கலப்படங்கள் போன்றவை எக்சோடாக்சின்கள் (Exotoxins).
உடலுக்குள் உருவாவதோ அல்லது வெளியிலிருந்து வருவதோ, இரண்டையுமே திறம்படக் கையாண்டு, உடலுக்கு ஊறு செய்யாதவாறு அவற்றை மாற்றி வெளியேற்றும் உத்தியை உடலே அறிந்து வைத்திருக்கிறது. இதற்கெனப் பிரத்யேகமாகக் கல்லீரல், சிறுநீரகங்களைக் கொண்டு உடல் இயங்குகிறது.
என்ன செய்யலாம்?
சமச்சீரான, ஆரோக்கியமான உணவு முறை தேவை. உணவில் மாவுச்சத்தின் அளவைக் குறைத்து, தேவையான அளவு புரதம், ஆரோக்கியமான கொழுப்பு உணவு வகை களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். எண் ணெய்யில் பொரித்தவை, அதிக உப்பு, துரித உணவு வகைகள், பேக்கரி நொறுவைகள் உள்ளிட்டவற்றைத் தவிர்க்க வேண்டும்.