

ஒரு நாள் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்னைச் சந்திக்க வந்தார். அவருக்கு நல்ல வேலை, அன்பான குடும்பம், பொருளாதாரப் பிரச்சினைகள் இல்லை. ஆனால், பேசியபோதோ இதைத்தான் சொன்னார்: “எனக்கு என்ன பிரச்சி னைன்னு தெரியல. யாராவது என் பெயரைத் திடீர்னு கூப் பிட்டாலே, இதயம் வேகமாகத் துடிக்குது.
இரவில் சிறிய சத்தம் கேட்டால்கூடத் தூக்கம் போய்டுது. எல்லாம் சரியாக நடந்தாலும் ஏதோ கெட்டது நடக்கப் போகுதுன்னு மனசுல தோணுது. ‘தேவையில்லாம பயப்படாதே’ன்னு வீட்டில் எல்லாரும் சொல்றாங்க. நானும் பயப்பட விரும்பல. ஆனா, என் மனம் நான் சொல்றதைக் கேட்கவே மாட்டேங்குது”.
மேற்சொன்ன ஒருவரின் கவலையைப் போலவே, “என்னாச்சு உனக்கு? முன்னெல்லாம் இப்படி இல்லையே!” “ஏன் சின்ன விஷயத்துக்குக் கோபப்படுற?” “ஏன் எப்பவும் பயந்த மாதிரியே இருக்க?” - என்பது போன்ற கேள்விகளை உறவி னர்கள், நண்பர்களிடம் நம்மில் சிலர் எதிர்கொண்டிருக்கலாம்.
உண்மையில், ஒரு மனிதனுக்குள் என்ன நடக்கிறது என்பதை எத்தனை பேர் பார்க்கிறோம், யோசிக்கிறோம்? ஒரு மரம் காற்றில் ஆடுவது நமக்குத் தெரியும்.
ஆனால், மண்ணுக்குள் இருக்கும் அதன் வேர் களில் என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியுமா? மனிதர்களும் அப்படித் தான்! நாம் கோபத்தை, அழுகையை, அமைதியை, பயத்தை வெளியே பார்க்கி றோம். ஆனால், இவற்றை உருவாக்கும் நரம்பு மண்டலத்தின் போராட்டத்தைப் பார்க்கிறோமா? பெரும்பாலான தருணங் களில் இல்லை.
மூளையின் முன்னெச்சரிக்கை
வாழ்க்கையில் சில சம்பவங்கள் மனிதனை மாற்றிவிடுகின்றன. சிறு வயதில் ஏற்பட்ட சில அனுபவங்கள், அவமானங்கள், எதிர்பாராத விபத்து, அன்புக்குரியவரை இழந்த துயரம், நீண்ட காலமாக நடந்துவரும் குடும்பச் சண்டைகள், கண் முன்னே நிகழ்ந்த வன்முறை, அன்புக்குரியவரால் ஏற்பட்ட புறக்கணிப்பு அல்லது யாரிடமும் சொல்ல முடியாமல் மனதில் புதைந்து கிடக்கும் ஓர் அனுபவம். இப்படிப் பல விஷயங்களை மனிதர்கள் சிறுவயதில் எதிர்கொள்கிறார்கள்.
நம் மூளை ஆபத்தை விரைவாகக் கண்டறியும் முக்கியமான பகுதி. ‘இனி இதுபோன்ற ஆபத்து மீண்டும் வந்தால், உடனே காப்பாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று பதிவுசெய்து வைத்துக்கொள்ளும். அதனால்தான், சிலருக்கு ஆபத்து இல்லாத சூழலிலும்கூட அவர்களுடைய மூளையும் நரம்பு மண்டலமும் ஆபத்து இருப்பதுபோல் செயல்படத் தொடங்குகின்றன.