

இந்தியாவில் தற்போதைய காலக்கட்டத்தில் மூளை பாதிப்பால் ஏற்படும் வாதநோய் வேகமாக அதிகரித்துவருகிறது. ஒருகாலத்தில் முதியவர்களை மட்டுமே பாதித்த இந்நோய், இன்று இளைஞர்களையும் பெருமளவில் தாக்கிவருகிறது. பொதுவாக 'வாதம்' அல்லது 'பக்கவாதம்' (Stroke) என்றழைக்கப்படும் இந்நோய், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் திடீர் தடையால் அல்லது ரத்த நாளங்கள் வெடிப்பதால் ஏற்படுகிறது.
பக்கவாதத்தின் வகைகள்
மூளை செல்கள் சரியாகச் செயல்பட ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துகளும் தேவை. ரத்த ஓட்டம் தடைபடும்போது மூளை செல்கள் சில நிமிடங்களிலேயே இறக்கத் தொடங்குகின்றன. பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உண்டு.
இஸ்கிமிக் பக்கவாதம் (Ischemic Stroke): மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிகளில் கொழுப்புப் படிவங்கள் அல்லது ரத்த உறைவு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் தடைபடுதல். இந்தியாவில் ஏற்படும் பக்கவாதங்களில் 80 சதவீதத்துக்கு இதுவே காரணம்.
ஹெமராஜிக் பக்கவாதம் (Hemorrhagic Stroke): மூளையில் உள்ள பலவீனமான ரத்த நாளம் திடீரென வெடித்து, மூளைக்குள் ரத்தம் கசிவது. இது பெரும்பாலும் கட்டுப்பாடற்ற உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்படுகிறது.