

நம்மில் நொறுவைகளைச் சாப்பிட விரும்பாதவர்கள் யாராவது உண்டா எண்ணிப் பார்த்தால், மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள். சுமார் 63% இந்தியர்கள் நாள்தோறும் இரண்டு முறை யாவது நொறுவைகளைச் சாப்பிடுவதாக ‘நீல்சென்ஐக்யூ’ (NielsenIQ) என்னும் இந்திய ஆராய்ச்சி நிறுவனம் உணவூட்டம் தொடர்பான ஒரு புள்ளிவிவரத்தை அண்மையில் வெளியிட்டிருக்கிறது.
வளரும் நொறுவை மோகம்
மனிதர்கள் நொறுவை களைச் சாப்பிடும் பழக்கம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால், நவீன கால நொறுவைப் பழக்கம், நம் மரபு உணவுப் பழக்கத்திலிருந்து அதிக தொலைவு விலகிவிட்டது.
நம்மில் பெரும்பாலானோர் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிடும் முறையான உணவிலிருந்து ஆற்றலைப் பெறுவதைவிட நொறுவை களிடமிருந்து பெறுவதுதான் இப்போது அதிகமாகிவிட்டது.
குழந்தைகள், பதின்பருவத்தினர், வயது வந்தவர்கள், முதியோர் என வயது வித்தியாசம் இல்லாமல் நொறுவைகளை விரும்பிச் சாப்பிடுவதற்கு அவரவர் ஆசைகளும் வாழ்க்கை முறையும் நகரமயமாக்க லும் தொழில் விரிவாக்கங்களும் பொருளாதார வளர்ச்சியும் மட்டுமே காரணமல்ல; உணவு உற்பத்தி நிறுவனங்களின் புத்திசாலித் தனமான சந்தைப்படுத்தும் உத்திகளுக்கும் முக்கியப் பங்கு உண்டு.
இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும் நொறுவைகளின் விற்பனை ரூ.50,000 கோடி மதிப்புள்ள ஒரு தொழிலாக உருவாகி யிருக்கிறது என்றால், அந்த நிறுவனங்கள் நம்மிடம் கடத்தியிருக் கும் ‘நொறுவை மோகம்’ குறித்து யோசித்துப் பாருங்கள்.
ஆபத்தாகும் நொறுவைகள்
நாம் மிகவும் விரும்பிச் சாப்பிடும் நொறுவைகள் பெரும்பாலும் பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப் பட்டவை; பதப்படுத்தப்பட்டவை. தேங்காய் மிட்டாய், கொழுக்கட்டை, அதிரசம், முறுக்கு, குழிப்பணியாரம், பருவ காலப் பழங்கள் போன்ற இந்திய மரபு நொறுவைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டவை.
மேற்கத்தியப் பாணியில் தயாரிக்கப்படுபவை. பாப்கார்ன், சிப்ஸ், சாண்ட்விச், மிட்டாய்கள், பிஸ்கட்கள், பீட்சா, பர்கர், சாக்லெட், ரைஸ் கிராக்கர்ஸ், கிரீம் கேக், பாம்பே மிக்சர், பானிபூரி, குக்கீ, சமோசா, கோலா பானங்கள், ஸ்பிரிங் ரோல், ஃபிங்கர் ஃபிரை; இப்படி இனிப்பாகவோ, காரமாகவோ இந்த நவீன நொறுவைகள் மிக அதிக அளவில் கிடைக்கின்றன.
இந்திய நகரங்களில் மட்டுமல்லாமல், நான்கு வழிச்சாலை களிலும் தடுக்கிவிழுந்தால் பேக்கரி கடைகளிலும் இனிப்பகங்களிலும்தான் விழ வேண்டும். அந்தள வுக்கு நவீன நொறுவைகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன.