

‘டாக்டர், என் வாழ்நாளில் ஒரு துளி மதுகூட அருந்தியதில்லை. எனக்கு எப்படிக் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது?’. இப்போது பல மருத்துவமனைகளில் அடிக்கடி கேட்கப்படுகிற கேள்வியாக இது இருக்கிறது.
காரணம், இந்தியாவில் கல்லீரல் நோய் என்பது மது குடித்தவர்களுக்கே வரும் என்பதாக ஒரு தவறான நம்பிக்கை பொதுவெளியில் உலாவருகிறது.
கெடுவாய்ப்பாக, தற்போது பலருக்கும் ஒருவகைக் கல்லீரல் பாதிப்பு சந்தடியில்லாமல் ஏற்பட்டுவருகிறது. அதற்குப் பெயர் ‘மாஷ்’ (MASH - Metabolic Dysfunction-Associated Steatohepatitis).
‘மாஷ்’ என்பது கொழுப்புக் கல்லீரல் (Fatty Liver) தீவிரமாகிவிட்ட ஒரு நிலை; கல்லீரல் சுருக்கம், கல்லீரல் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்துகளுக்கு வழிசொல்வது.
இப்போதைய புள்ளிவிவரப்படி பார்த்தால், இது முழுக்க முழுக்க சைவ உணவு சாப்பிடுபவர்களிடமும் மது குடிக்காதவர்களிடமும் அதிகம் காணப்படுகிறது. முன்பும் இந்த நிலைமை இருந்திருக்கலாம்.
அது வெளியில் தெரிந் திருக்காது. இப்போது நோய் அறியும் நவீனத் தொழில்நுட்ப வசதிகளும், முழு உடல் பரிசோதனைகளும் அதிகரித்துவிட்டதால் உடலில் மறைந்திருக்கும் ‘மாஷ்’ போன்ற நோய்கள் வெளியில் தெரிந்துவிடுவது அதிக எண்ணிக்கைக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
வெள்ளை உணவு வகைகளில் கவனம்
இன்று நாம் சாப்பிடும் சைவ உணவு வகைகளில் வெள்ளை அரிசி, வெள்ளை மைதா, வெள்ளைச் சர்க்கரை போன்ற ‘வெள்ளை உணவு வகைகள்’தான் அதிகம். அரிசி, கோதுமை, கரும்பு ஆகியவற்றை இயந்திரங்களில் கொடுத்து, சுத்திகரித்து வெளியில் கொண்டுவரும் கார்போஹைட்ரேட்டுகள் இவை.
கொழுப்பு உணவு வகைகளின்மீது நமக்கு இருக்கிற ஒருவித பயம், இந்த வெள்ளை உணவு வகைகளின் மீது இருப்பதில்லை. அதனால், அளவுக்கு அதிகமாக இவற்றை நாம் சாப்பிட்டுவிடுகிறோம். உடலால் எரிக்கப்படாத அளவுக்கு கார்போ ஹைட்ரேட்டுகளை நாம் சாப்பிட்டால், அவற்றைக் கொழுப்பாக மாற்றி, கல்லீரல் சேமித்துக்கொள்ளும்.