

என் வயது 67. 'சியாட்டிகா' என்கிற பிரச்சினை உள்ளது. இடுப்பின் இடப் பக்கத்தில் தொடர்ந்து ஒரே பகுதியில் வலி இருக்கிறது. வலி நிவாரண மாத்திரைகள் எடுப்பதில்லை. இதற்கு நிரந்தரத் தீர்வு என்ன? - அஹமது, மதுரை.
‘சியாட்டிகா’ சில மாதங் களாக இருப்பதாகக் குறிப் பிட்டுள்ளீர்கள். அதற்குத் தீர்வுகாண சியாட்டிக் நரம்பு குறித்து முழுமையாக அறிய வேண்டும். ஏனெனில், சியாட்டிக் நரம்பு அழுத்தப்படும்போதும் பாதிக்கப்படும்போதும் ஏற்படும் வலிதான் சியாட்டிகா. சியாட்டிக் நரம்பு (Sciatic nerve) என்பது இடுப்பு முள்ளந்தண்டு வடத்தின் (lumbar), ‘திரிகம் முள்ளந்தண்டு' வடத்தின் (sacral) நரம்பு வேர்கள் ஒன்றி ணைந்து உருவாகிறது.
இந்த நரம்பு வேர்கள் இடுப்புப் பகுதியிலுள்ள சாக்ரல் பிளெக்ஸஸ் (sacral plexus) எனப்படும் நரம்புப் பின்னலில் இணைந்து சியாட்டிக் நரம்பாக உருவெடுக்கிறது.
சியாடிக் நரம்பு இடுப்புப் பகுதியில் தொடங்கி, பிட்டத்திலிருந்து தொடையின் பின்புறமாக, இடுப்பு எலும்புப் புடைப்புக்கும் (ischial tuberosity) பெரிய தொடை எலும்புப் புடைப்புக்கும் (greater trochanter) இடையே கீழிறங்குகிறது. தொடையின் பின்பகுதியில் நடுவில் கீழிறங்கிக் காலின் பின்புறமாகக் கீழிறங்கிப் பாதம் வரை செல்லும் உடலின் மிக நீளமான, தடிமனான நரம்பு!