

“எதற்காக என் பிள்ளைக்கு இப்படியொரு நோய் வந்தது? இனி வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி செலுத்திக்கொள்ள வேண்டுமா?” என்று ஒரு ஆறு வயதுச் சிறுவனின் பெற்றோர் என்னிடம் கேட்டபோது, அவர்களுடைய கவலையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
அந்தக் குழந்தைக்கு அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக தாகத்தால் தண்ணீர்க் குடித்துக்கொண்டே இருப்பது, எளிதில் சோர்ந்துபோவது போன்ற அறிகுறிகள் சில நாள்களாக இருந்தன. மருத்துவமனைக்கு வந்தபோதுதான் முதல் வகை நீரிழிவு அந்தக் குழந்தையிடம் கண்டறியப்பட்டது.
நீரிழிவு ஒப்பீடு
குழந்தைகளிடம் காணப்படும் முதல் வகை நீரிழிவு, பெரியவர்களிடம் பொதுவாகக் காணப்படும் இரண்டாம் வகை நீரிழிவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இரண்டாம் வகையில் இன்சுலின் சுரப்பு ஓரளவுக்கு இருந்தாலும், அது உடலில் சரியாகச் செயல்படாமல் போகிறது.
ஆனால், முதல் வகையில் கணையத்தில் இன்சுலின் சுரக்கும் பீட்டா செல்கள் பெருமளவில் அழிக்கப்படுவதால், உடலுக்குத் தேவையான இன்சுலின் பெரிதும் குறைந்துவிடுகிறது. இன்சுலின் என்பது உடலுக்குத் தேவையான புரதத்தன்மை கொண்ட ஒரு ஹார்மோன்.
உணவை உட்கொள்ளும்போது அதிகம் தேவைப்படுகிறது. முதல் வகை நீரிழிவில் இந்த இன்சுலினை ஊசி மூலம் உடலுக்குத் தொடர்ந்து வழங்க வேண்டியது அவசியம். இன்சுலின் இல்லாமல் உணவுக் கட்டுப்பாட்டை மட்டும் வைத்து நோயைக் கட்டுப்படுத்த முடியாது.
இன்சுலினை நிறுத்திவிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வேகமாக உயர்ந்து கொழுப்பு, தசைச் சிதைவால் கீட்டோன்கள் உருவாகும். இதனால், நீரிழிவு கீட்டோ அமிலத்தன்மை ஏற்பட்டு நீரிழப்பு, மயக்கம், மூளை பாதிப்பு, உயிரிழப்புவரை செல்லக்கூடும். எனவே, முதல் வகை நீரிழிவுக்கு இன்சுலின்தான் உயிர்காக்கும் அடிப்படை சிகிச்சை.