

அண்மைக் காலமாக நாய், பூனைகள் குறித்துச் சமூகத்தில் ஒரு மூடநம்பிக்கை நிலவுகிறது. தான் வளர்க்கும் வளர்ப்பு நாய், பூனையிடமிருந்து ரேபிஸ் தொற்றுத் தங்களுக்கு ஏற்படாது என்பதே அந்த ஆபத்தான மூடநம்பிக்கை.
வீட்டில் வளர்ப்பு நாய், பூனை வளர்ப்பதில் பலருக்கும் நாட்டம் இருக்கும். ஆனால், அவை மூலம் உயிரைக் கொல்லும் ரேபிஸ் நோய் மனிதர்களுக்குப் பரவலாம்.
அந்நோயின் அறிகுறிகள் தோன்றிவிட்டால் அதற்குச் சிகிச்சை இல்லை, மரணம் மட்டுமே நிகழும். இதுவரை உலகில் இருபதுக்கும் குறைவானவர்களே அக்கொடிய நோய் வந்து சிகிச்சைக்குப் பின் உயிர்பிழைத்திருக்கின்றனர்.
வளர்ப்பு நாய் / பூனை வளர்க்கலாமா?
தாராளமாக வளர்க்கலாம். ஆனால், அவற்றை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்பதை அறிந்து வளர்க்க வேண்டும். அவற்றுக்கு வழங்கவேண்டிய தொற்றுநோய்த் தடுப்பூசிகளை முறையாக வழங்க வேண்டும்.
விலங்கு நல சிறப்பு நிபுணரிடம் அவ்வப்போது சிகிச்சை அளிக்க வேண்டும். முக்கியமாக, வருடாந்திர தடுப்பூசிகளை அட்டவணைப்படி முறையாக வழங்க வேண்டும்.
வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் நோய் வராமல் காக்கும் தடுப்பூசிகள்இருக்கின்றனவா?
இருக்கின்றன. ஒரு நாய்க்குட்டி பிறந்ததிலிருந்து மூன்றாவது மாதம், அந்த நாய்க்கு ரேபிஸ் நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பூசியை வழங்க வேண்டும். பின்னர் ஆண்டுக்கு ஒருமுறை ரேபிஸ் நோய்க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி வழங்க வேண்டும்.
தடுப்பூசி முறையாக வழங்கப்படாத வளர்ப்பு நாய்கள், வளர்ப்பவர்களைக் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
தமிழக அரசின் மேற்கோள்படி நாய் கடித்துவிட்டால், அந்த நாய்க்குத் தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதையெல்லாம் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. வளர்ப்பு நாய் கடித்தாலும், பிராண்டினாலும் உடனே ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
வளர்ப்பு நாய்கள்/பூனைகள் வழியே எப்படி ரேபிஸ் பரவுகிறது?
நாய்கள், பூனைகள் வளர்க்கும் சிலர் முறையாக அவற்றைப் பராமரித்து, அவற்றுக்கு ஏற்ற உணவு, இடம் கொடுத்து, தடுப்பூசிகள் போட்டு வளர்க்கிறார்கள். தங்களது வீடுகளுக்குள் மட்டும் வைத்து வெளிப்புற நாய்களுடன் தொடர்பு கொள்ளாதவாறு வளர்க்கிறார்கள்.