

நீரிழிவு நோயைப் பொறுத்தவரைப் பலரும் ‘சீனி கெட்டது’ என்று கூறிவிடுவோம். ஆனால், அதற்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவை இயற்கையானவை.
ஆகவே, அவற்றை உண்டால் நீரிழிவிற்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிற கற்பிதம் சமூகத்தில் நிலவுகிறது. சீனி என்பது நாட்டுச் சர்க்கரையின் பாலிஷ், பவுடர் பூசப்பட்ட ஒரு வடிவமே.
சீனி போட்டு தேநீர் குடிக்காத பல நீரிழிவு நோயாளர்களும் வெல்லம், நாட்டுச் சர்க்கரை, பிரவுன் சுகர் (மொலாசஸ் சேர்க்கப்பட்ட சீனி), பனங்கற்கண்டு ஆகியவற்றைப் போட்டு தேநீர்/ காபி குடிக்கின்றனர். இது முற்றிலும் தவறு.
ஏன் தவறு?
சீனி, பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவை பார்ப்பதற்கு வேறுவேறாக இருந்தாலும், அவற்றில் அடிப் படையாக இருப்பது சுக்ரோஸ் (Sucrose) எனும் மாவுச்சத்து. சுக்ரோஸ் என்பது குளூக்கோஸும் ஃபிரக்டோஸூம் கலந்த கலவை.
இந்த சுக்ரோஸை அளவின்றி உட்கொள்ளும்போது, அது நமது கணையத்தின் (Pancreas) பீட்டா செல்களை அளவுக்கு மீறிப் பிழிந்து இன்சுலினைச் சுரக்க வைப்பதற்குச் சமமாகும். இப்படி நாள்தோறும் சுக்ரோஸை உட்கொள்ளும்போது, கணையத்தில் இன்சுலின் சுரப்பதில் சுணக்கம் ஏற்படுகிறது.
சரி, நாட்டுச் சர்க்கரை இயற்கைதானே, அது ஏன் நீரிழிவு நோயாளர்களுக்குக் கூடாது என்கிற கேள்வி எழுகிறதா? இங்குதான் இயற்கையின் வரையறையைப் புரிந்துகொள்ள வேண்டும்.
கரும்பை அப்படியே கரும்பாக உண்பது இயற்கை. ஆனால், அதைப்பதனிட்டுச் சர்க்கரையாக மாற்றி உண்பது இயற்கை அல்ல. ஒருவரால் ஒரு நேரத்தில் எத்தனை முழுக் கரும்புகளை உண்ண முடியும்? அதிக பட்சமாக ஒரு முழு நீளக் கரும்பைக்கூட முழுமையாக உட்கொள்ள முடியாது.