

நீண்ட பயணம் சென்று கொண்டிருக்கிறீர்கள். மதியம் இரண்டு மணி வாக்கில் கார் ஓட்டுநரை ஓர் உணவகத்தில் வண்டியை விடச் சொல்கிறீர்கள். நெடுஞ் சாலையில் வழி நெடுக ஏகப்பட்ட உணவகங்கள். ஆனால், உங்கள் ஓட்டுநர் ஒவ்வொன்றிலும் காரை நுழைத்துவிட்டுப் பின் ‘இது வேண்டாம் சார்.
ஒரு கிலோ மீட்டர் தள்ளி இதைவிட ஒரு நல்ல உணவகம் இருக்கிறது’ என மாற்றி மாற்றிப் போய்க்கொண்டே இருக்கிறார். இப்படியே நான்கு மணி ஆகிவிடுகிறது. பசியில் மயங்கியே விடுகிறீர்கள். அப்போது ஒரு ரோட்டுக் கடையில் நாலு இட்லியாவது கிடைக்காதா என ஏங்கிப் போவீர்கள்.
ஒரு விஷயம் அளவுக்கு அதிகமாகக் கிடைக்கும்போது அந்த எண்ணிக்கையே அதன் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக மாறிவிடும். இதைத்தான் திறன்பேசிகள், குறிப்பாகச் சமூக ஊடகங்களின் பயன்பாடு நமக்குச் செய்கிறது. உருப்படியாக ஒரு விஷ யத்தைச் செய்யாமல் திசை திருப்பல்களாக இருந்துகொண்டே இருக்கும். மனதைக் குவிக்காத, இலக்கில்லாப் பயன்பாடு (Mindless scrolling) என்பது இதுதான்.
அலைபாயுதே
அதற்காகத் திறன்பேசிகளையே பயன்படுத்தாமல் இருக்க முடியாது. இதைத் தவிர்ப்ப தற்குத் திறன்பேசிகளைப் பயன்படுத்தும்போது மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். இதை முழுக்கவனத்துடன் கூடிய பயன்பாடு (Mindful scrolling) என்கிறார்கள். ஒரு செயலைச் செய்யும்போது முழுக்கவனமும் அதில் மட்டும் செலுத்தப்படுவதை குவிமன நிலை (Mindfulness) என்கிறார்கள்.
வாலில்லா குரங்குகளுக்கும் நமக்கும் ஒரே மூதாதையர் தான். இப்படி நாம் பரிணாம வளர்ச்சி அடைந் திருந்தாலும், நமது மனம் இன்னமும் குரங்கு போலவே அமைதியற்று தாவித்தாவி எப்போதும் ஏதோ ஒன்றைப் பற்றி யோசித்துக் கொண்டே இருக்கிறது.
அப்படி அலை பாயாமல் செய்யும் வேலையில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்துவதுதான் இந்தக் குவிமனநிலை. புகழ்பெற்ற ஜென் கருத்தாக்கமும் இது போன்ற ஒரு மனநிலையைத்தான் வலியுறுத்துகிறது.