குளிர்காலத்தில் நிமோனியாவைத் தடுப்பது எப்படி?

குளிர்காலத்தில் நிமோனியாவைத் தடுப்பது எப்படி?

Published on

நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் ஒரு தொற்று. இது பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். குளிர் காலத்தில் நிமோனியா அதிகமாகக் காணப்படுகிறது.

குளிர்காலத்தில் நிமோனியா அதிகம் பரவுவதற்குக் காரணம் குளிர் அல்ல; மக்கள் வீட்டிற்குள்ளேயே இருப்பதாலும், அதிக எண்ணிக்கையிலான மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாலும் நிமோனியா அதிகம் பரவுகிறது. குளிர் மாதங்களில் நிமோனியா தொற்றுவதைத் தவிர்க்க சில முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் உதவும்.

சுகாதாரப் பழக்கங்கள்: நல்ல சுகாதாரப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது நிமோனியாவைத் தடுக்க உதவும் முதல் வழி. நிமோனியாவை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா, வைரஸ் போன்றவை பலருடன் நேரடித் தொடர்பு கொள்வதன் மூலமே பரவுகின்றன. எனவே, அடிக்கடி கை கழுவுவது அவற்றின் பரவலைத் தடுக்க உதவும். சோப்பு போட்டு கை கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல் இருமும்போது, கைகளை மடக்கி, அந்தப் பகுதியில் இருமுவது நல்ல பழக்கம். உங்கள் கண்கள், மூக்கு, வாயை கைகளால் தொடுவதைத் தவிர்ப்பது நல்லது.

ஃபுளூவுக்கான தடுப்பூசி: ஃபுளூ காய்ச்சல் நிமோனியாவுக்குக் காரணமாக அமையலாம் என்பதால், ஃபுளூவுக்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்வது நல்லது. ஃபுளூ காய்ச்சலைத் தடுப்பதற்கான நல்லதொரு வழி இது. ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் அனைவரும் போட்டுக்கொள்ளலாம். குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள், நோயெதிர்ப்பு அமைப்பு பலவீனமாக உள்ளவர்கள், அவர்களுக்கு உதவியாக இருப்பவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் போன்றோர் ஃபுளூ தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது.

நிமோகாக்கல் தடுப்பூசி: நிமோனியாவின் மிகவும் பொதுவான, ஆபத்தான வகைகளில் ஒன்று நிமோகாக்கல். எனவே, நிமோகாக்கல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது குறித்தும் பரிசீலிப்பது நல்லது. அனைத்து நிமோனியா வகைகளையும் இந்தத் தடுப்பூசி தடுக்காது என்றாலும், இந்தத் தடுப்பூசி நிமோனியாவின் பொதுவான வகைகளைத் தடுப்பதில் பலனளிக்கிறது. 65 வயது, அதற்கு மேற்பட்ட பெரியவர்கள், 2 வயது முதல் 64 வயது வரை நீண்டகால உடல்நலப் பிரச்சினை கொண்டவர்கள், எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகச் சாத்தியம் உள்ளவர்கள் போன்றோர் நிமோனியாவுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.

நிமோகாக்கல் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாலேயே, நிமோனியா தாக்காது என்று அர்த்தமல்ல. சில நோயாளிகள் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும், நிமோனியா தாக்கி இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடையே தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்படுவதும், உயிரிழப்பு ஏற்படும் சாத்தியமும் மிகக் குறைவு. இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது, இறப்பிலிருந்தும் தீவிர நோய்ப் பாதிப்பிலிருந்தும் நோயாளியைக் காக்கும்.

என்ன செய்ய வேண்டும்? - உங்கள் நுரையீரலின் சுவாசிக்கும் திறனை அதிகரிக்க உதவும் சுவாசப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். தூசி, பூசணம், ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் இல்லாமல் உங்கள் வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள். உங்கள் படுக்கை, தரைவிரிப்புகள், சோஃபாக்களை தவறாமல் சுத்தம் செய்யுங்கள். இருமல், மஞ்சள் அல்லது பச்சை சளி, அதிகக் காய்ச்சல் போன்ற நிமோனியாவின் அறிகுறிகளை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உடனடியாக உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள்.

புகைபிடிப்பதை முற்றிலும் தவிருங்கள். நெரிசலான இடங்களையும் தவிருங்கள். வீடு நல்ல காற்றோட்டத்துடன் இருக்க வேண்டும். காற்று சுத்திகரிப்புக் கருவி அல்லது காற்றை ஈரப்பதமூட்டும் கருவியைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரையின்படி ஆவி பிடியுங்கள். பிரச்சினையை மேலும் மோசமாக்கும் வீட்டு வைத்திய முறைகளை முயன்று பார்க்காதீர்கள்.

நிறையப் பழங்கள், காய்கறிகள், குறைந்த புரதம் கொண்ட சத்தான உணவை உட்கொள்ளுங்கள். சிட்ரஸ் பழங்கள், மஞ்சள், இஞ்சி போன்றவை நோய் எதிர்ப்பு ஆற்றலை உருவாக்க உதவும். தொண்டை எரிச்சலை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பதப் படுத்தப்பட்ட, சக்கை, வறுத்த, எண்ணெய், பெட்டிகளில் அடைக்கப்பட்ட உணவையும், பதப்படுத்தும் பொருட்கள், செயற்கை சேர்ப்பு பொருட்கள், செயற்கை சுவையூட்டிகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். நிமோனியா தாக்காமல் இருக்கவும் இவை உதவும். - கட்டுரையாளர், பொது மருத்துவர்

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in