

தீட்டப்பட்ட, பொலிவுபடுத்தப்பட்ட அரிசியையும் (Polished Rice), கலப்பின அரிசியையும் (Hybrid Rice) சாப்பிடுவது இன்று வாடிக்கையாகி விட்டது. நவநாகரீக வளர்ச்சியின் விளைவாக, தமிழ்நாட்டில் பாரம்பரியமாகப் பயிரிட்டு வேளாண்மை செய்யப்பட்டு வந்த பல அரிசி வகைகள் நம்மில் பலருக்கும் மறந்தே போய்விட்டன. இந்தச் சூழலில், பல விவசாயிகள் அந்த அரிசி வகைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
அண்மைக் காலத்தில் பல விவசாயிகள் பலவிதங்களில் பரிசோதனை செய்து பாரம்பரிய விதைகளைத் தேடியும், தரமான விதைகளை இனம்கண்டும், தேவையான விதைகளைப் பாது காத்தும் வருகின்றனர். பல்வேறு வகையான பாரம்பரிய நெல் வகை களை வெற்றிகரமாகப் பயிரிட்டு வேளாண்மை செய்து வெற்றியும் கண்டுள்ளனர்.
பாரம்பரிய நெல் வகைகள்: பண்டைக் காலத்தில் எண்ணற்ற பாரம்பரிய நெல் வகைகள் பயன்படுத்தப்பட்டுவந்தன. பாரம்பரிய நெல் ரகங்களுக்கு எண்ணற்ற சிறப்புகள் உண்டு. மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய தன்மை கொண்டவை அவை. மருத்துவக் குணம் கொண்டவையும்கூட. அனைத்துமே எளிதில் செரிமானமாகக் கூடியவை. முக்கிய மாக, பாரம்பரிய அரிசிகளில் பெண்களுக்கு அதிக நன்மைகள் தரக்கூடிய நெல் வகைகள் ஏராளம் இருந்தன. அவற்றுள் ‘பூங்கார்’ என்னும் செந்நிற அரிசி முதன்மையாக விளங்குகிறது.
பூங்கார்: நெல் ரகங்களில் குறுகிய காலப் பயிர் இது. எல்லாப் பருவங்களுக்கும் ஏற்ற பயிர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மண் வகைகளுக்கும் ஏற்ற ரகம். ஆண்டுக்கு மூன்று முறை சாகுபடி செய்ய ஏற்ற ரகமும்கூட. சிவந்து காணப்படும் இதன் அரிசியும் சிவப்பாகவே உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களில் இவ்வகை மழை வெள்ளத்தைத் தாங்கி வளரக்கூடியது. நெற்பயிர் தண்ணீரிலேயே இருந்தாலும் நாற்பது நாட்களுக்கு விதை உறக்கத்திலிருந்து அதற்குப் பிறகே முளைக்கக்கூடிய திறன் கொண்ட மாறுபட்ட ரகம் பூங்கார். பெண்களுக்கான அரிசி இது.
பூங்கார் அரிசி பயன்கள்:
l உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது .
l கர்ப்பிணிப் பெண்கள் ஆறு மாத காலத்தில் பூங்கார் அரிசியைக் கஞ்சி வைத்துக் குடித்து வந்தால் சுகப்பிரசவம் நடக்க அதிக வாய்ப்புள்ளது.
l இந்த அரிசியில் நார்ச்சத்து, கார்போ ஹைட்ரேட், ஆந்தோசயனின் நிறமிகள் (ஆன்டிஆக்ஸிடன்டுகள்), தையமின் போன்ற சத்துக்கள் உள்ளன.
lவயிறு உபாதைகள், குடல்புண் (அல்சர்) போன்றவற்றிற்கும் ஏற்ற உணவு இது.
l ரத்த சிவப் பணுக் களில் ஹீமோ குளோபினை அதிகரிக்க உதவும்.
l குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப் பால் நன்கு சுரக் கும். தாய்-சேயின் ஆரோக்கியம் நீடிக்கும்.
l பெண்களுக்கான ஹார்மோன்-சுரப்பியைத் தூண்டவல்லது, உடலுறுதி, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும்.
l ரத்தநாளங்களில் உள்ள கொழுப்பு களை நீக்க வல்லது. மாரடைப்பு வராமல் பாதுகாக்கும்.
l பெண்களுக்கான அனைத்துவித மாத விடாய் பிரச்சினைகளைப் போக்கக் கூடியது.
l பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்று நோயைக் குணமாக்குவதற்கும் வரவிடாமல் தடுப்பதற்கும் பூங்கார் அரிசி பயன்படுகிறது.
மருத்துவ பலன்கள்: பூங்கார் அரிசியில் உள்ள டெட்ராடெக் கனல் (Tetradecanal) என்கிற வேதிப் பொருளில் ஆன்டி ஆஞ்சியோஜெனிக் தன்மை உள்ளது. ஆஞ்சியோ ஜெனிக் என்பது புற்றுநோய் சிகிச்சையில், கட்டிகள் வளர்வதற்குத் தேவையான புதிய ரத்த நாளங்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன். இந்த அரிசியில் உள்ள ஹெக்ஸா டெகனாயிக் அமிலம் (Hexadecanoic acid) எனும் வேதிப்பொருள் வைரஸ் எதிர்ப்பு, ரத்த சோகை வராமல் தடுக்க, அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் ஆகிய செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. மார்பகப் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் ஆகியவற்றைத் தடுக்கும் எதிர்ப்பு வேதிப்பொருளும் இதில் உள்ளது.
மார்பகப் புற்றுநோய்: பெண்களிடம் ஏற்படும் புற்றுநோய்களில் 27 சதவீதம் மார்பகப் புற்றுநோயாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் 87,090 பெண்களுக்கு இது ஏற்படுகிறது. உலக அளவில் ஆண்டுக்கு 21 லட்சம் பெண்களுக்கு இது ஏற்படுகிறது. சராசரியாக 50 - 64 வயதிற்கு உட்பட்ட பெண்களையே மார்பகப் புற்றுநோய் அதிகம் பாதிக்கிறது. இந்நிலையில், மார்பகப் புற்றுநோய் குறித்த சமீபத்திய ஆய்வு பூங்கார் அரிசியின் ஊட்டச்சத்து பண்புகளை மதிப்பீடு செய்வதற்கும், மார்பகப் புற்றுநோய்க்கான புற்றுநோய் எதிர்ப்பு நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கும் நோக்கமாகக் கொண்டது. அந்த ஆராய்ச்சியின் மூலம், பெண் களுக்கு ஏற்படும் புற்றுநோய் எதிர்ப்பு, புற்றுநோய்க் கட்டி எதிர்ப்பு போன்ற தன்மைகளைப் பாரம்பரிய நிறமி அரிசிகள் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நமது பாரம்பரிய நிறமி அரிசிகளில் உள்ள என்-ஹெக்ஸாடெகனாயிக் அமிலம் புற்றுக்கட்டி எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண் டுள்ளது. அது இயற்கையாக அழிக்கும் செல்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது; ஆரோக்கிய செல்லின் உயிரிழப்பைத் தூண்டும் காரணி யைத் தடுக்கும், தசைநரம்பு தூண்டுத லாகவும் (Myo Neurostimulant) செயல்படும்.
உணவுதானா? - அந்நிய உணவுகளால் ஆபத்து இருக்கிறது என்பதை நாம் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். நமது சோறுக்கும், இட்லிக்கும் இல்லாத ஊட்டச்சத்தை ஒரு கோப்பையில் அல்லது பெட்டியில் அடைத்துத் தரும் பொருளுக்கு உண்டு என்று நம்புவது தவறு. பாரம்பரிய நெல் வகைகளுக்கு எதிரான வணிக அரசியலைத் தெளிவுபடுத்தி, இன்று நாம் சாப்பிடும் உணவு உணவுதானா? அது உண்ணப்படுவதற்கு உகந்ததுதானா என்று உணரவைக்க வேண்டும். வேளாண்மையைப் போற்றாது எந்த சமூகமும் வாழாது என்ற கோட்பாட்டை முன்னெடுக்க வேண்டும். பூங்கார் போன்ற நெல் ரகங்கள் தமிழ்நாட்டின் அடையாளம், பண்பாட்டின் உயிர்ச் சின்னம்என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. - கட்டுரையாளர், உயிரித் தொழில்நுட்பவியல் பேராசிரியர் சே.வா.பாக்கியலெட்சுமி; bakiyalakshmi.sv@gmail.com