

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம்
நம் நாட்டில் பலரும் நமக்கு எங்கே புற்றுநோய் வரப் போகிறது என்ற அலட்சியத்தின் காரணமாகவும், மருத்துவரிடம் போய் பரிசோதனை மேற்கொள்ளக் கூச்சப்பட்டும் பாதிப்பு முற்றிய நிலையிலேயே மருத்துவமனைக்கு வருகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள்.
அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டுவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் இந்த மாதத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நிகழ்ச்சிகளும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. இது குறித்துக் கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன் பகிர்ந்துகொண்டது:
விழிப்புணர்வு குறைவு
இந்தியாவில் நகர்ப்புறப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் விகிதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த விகிதாச்சாரம் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவருகிறது. நம் மக்களிடையே விழிப்புணர்வு குறைவாக இருப்பதே காரணம்.
சிறு வயதில் பூப்படைதல், மாதவிடாய் தள்ளிப்போவது, கர்ப்பத்தடை மாத்திரைகளை உட்கொள்வது, 30 வயதுக்கு மேல் திருமணம் அல்லது குழந்தை பெற்றுக்கொள்வது, மது குடிப்பது, புகைபிடித்தல், கொழுப்பு உணவு சாப்பிடுவது, ஒழுங்கற்ற வாழ்க்கை முறை போன்றவை மார்பகப் புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நோய் 50 முதல் 60 சதவீதம் தீவிரமடைந்த பிறகே (அதாவது மார்பில் ஐந்து செ.மீ. அளவு கட்டி) மருத்துவர்களிடம் வருகிறார்கள். அதுதான் பெரும் ஆபத்துக்குக் காரணமாகிறது. ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால் குணமடைவது எளிது. இப்படிக் கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய்க்குக் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை தேவையில்லை.
ஆரம்பக் கட்டச் சிகிச்சைகள்
மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையில் மார்பில் சிறு கட்டியாகத் தென்படும். பிறகு ‘நிப்பிள்’ மெல்லச் சுருங்கி உள்வாங்கும். பிறகுதான் புண்ணாகும், வலிக்க ஆரம்பிக்கும். இந்த வலி வருவதற்கு ஓர் ஆண்டுகூட ஆகலாம். பெரும்பாலானவர்கள் வலி வந்த பிறகே மருத்துவரிடம் வருகிறார்கள். இது மிகவும் தவறு.
பெண்கள் 20 வயதுக்கு மேல் மார்பகச் சுயபரிசோதனை செய்துகொள்வது அவசியம். 30 வயதுக்கு மேல் மருத்துவர்களைச் சந்தித்து ஆலோசனை பெறலாம். 40 வயதுக்குப் பின்பு மாமோகிராம் பரிசோதனையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்துகொள்வது நல்லது.
மார்பகத்தில் கட்டி ஒரு செ.மீ.க்கு குறைவாக இருக்கும் நிலையில் மாமோகிராம் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து விடலாம். இப்படிப்பட்டவர்களுக்கு கீமோதெரபி, ரேடியோதெரபி சிகிச்சைகள் தேவைப்படாது. முன்பெல்லாம் சிறியதாகக் கட்டியைக் கண்டாலே, மார்பகத்தை அகற்றும் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இப்போதெல்லாம் கட்டியை மட்டும் அகற்றும் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.
அஞ்சத் தேவையில்லை
அதேநேரம் எல்லாக் கட்டிகளுமே புற்றுநோய் என்று கருதிப் பயந்துவிடவும் தேவையில்லை. ஃபைப்ரோ அடிநோமா (FIBRE ADENOMA) போன்ற கொழுப்புக்கட்டிகளும் வரலாம். எது வந்தாலும் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம். கட்டி வந்தால் மட்டுமே சிகிச்சைக்கு வரவேண்டுமா என்று கேட்டால், அதையும் தாண்டிய நவீன பரிசோதனைகள் தற்போது வந்துவிட்டன. அதில் ஒன்றுதான் ‘ஜெனிடிக் ஸ்கிரீனிங்’. இதற்கான செலவு அதிகமாகும். மரபணு மாற்றம் காரணமாகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு பற்றி முன்கூட்டியே கண்டறியும் சோதனை இது. மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெறுவது ஒன்றே, சந்தேகத்தைத் தீர்ப்பதற்குச் சிறந்த வழி.