

யாருக்காவது பூச்செண்டு பரிசளிக்க விரும்பினால், ஞெகிழிப் பூச்செண்டிற்குப் பதிலாக, அன்னாசியைப் பரிசளியுங்கள். நம்முடைய ஆரோக்கியத்தை பல மடங்கு மேம்படுத்தும் இயற்கையின் அழகிய பூச்செண்டு அது.
பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவிற்குள் நுழைந்த அன்னாசியின் தாயகம் பிரேசில். அமெரிக்க நாடுகளில் பல நூற்றாண்டுகளாகச் செரிமானத்தைத் தூண்டும் கருவியாக அன்னாசி பயன்பட்டிருக்கிறது. நிறைந்த மகசூலைக் கொடுப்பதோடு பல்வேறு சூழலுக்கும் தன்னை எளிதாகத் தகவமைத்துக் கொள்ளும் பழம் என்பதால் பல நாடுகளில் இது விளைகிறது.
சித்த மருத்துவத்தில் அன்னாசி
நேரடியாகப் பழமாக மட்டுமல்லாமல்; ஜாம், ஜெல்லி எனப் பல வகைகளில் அன்னாசி பிரபலமாக இருக்கிறது. புளிப்பு இனிப்புச் சுவைகளை விறுவிறுப்புடன் நா மொட்டுக்களுக்கு விருந்தளிக்கும் தன்மையுடையது. புழுக்கொல்லியாகவும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதீத குருதிப்பெருக்கைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாகவும் அன்னாசிப் பழம் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறது சித்த மருத்துவம்.
‘மேகவெட்டை வாந்திபித்த மீறாவாம்’ எனும் அன்னாசிப் பழம் பற்றிய அகத்தியர் குணவாகட பாடல், அன்னாசிப் பழத்தை வாந்தி, நீர்வேட்கை, தலைவலி போன்ற குறி குணங்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது.
மருத்துவ பலன்கள்
வைட்டமின் – சி, மாங்கனீஸ், தையாமின், ஃபோலேட் என ஊட்டங்களைத் தன்னுள் எக்கச்சக்கமாய் கொண்டிருக்கிறது அன்னாசி. அன்னாசியைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு மூப்பின் காரணமாக உண்டாகும் கண்பார்வைக் குறைபாடு (Macular degeneration) தள்ளிப்போகும்.
இதிலிருக்கும் நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் மலத்தை எளிதாய்க் கடத்த உதவுகின்றன. அதிகரித்த கொழுப்புச் சத்து உடையவர்கள், தங்கள் உணவு முறையில் அடிக்கடி சேர்க்க வேண்டிய பழம் அன்னாசி.
இதிலிருக்கும் ப்ரோமெலைன் (Bromelain) எனும் நொதி, புரதங்களை எளிதாகச் செரிமானமாக்க உதவுகிறது. வலியைக் குறைக்கக்கூடிய காரணிகளைத் தூண்டும் செய்கை ப்ரோமெலைனுக்கு உண்டு. கணையம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்காலிகமாகச் செரிமானத்தைத் தூண்ட இந்த நொதியைப் பயன்படுத்தும் வகையிலான ஆய்வுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. புற்று செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு.
வாந்தி, வயிற்றுக்கடுப்பு, செரிமான தொந்தரவுகளுக்கு இதன் பழரசத்தை லேசாகச் சூடாக்கிக் கொடுக்க சிறந்த நிவாரணம் கிடைக்கும். பழத்தின் சாறோடு தேன் சேர்த்து மணப்பாகு ரகத்தில் தயாரித்துக் குடித்தால், வாந்தியும் அழல் சார்ந்த நோய்களும் பறந்து போகும்.
அன்னாசி ஊறுகாய்
இனிப்பும் புளிப்பும் சேர்ந்த தனிச்சுவையை நாவில் தவழவிட்டு, நலக்கூறுகளையும் உடலில் சேர்க்கும். அன்னாசியுடன் சிறிது உப்பு, மிளகாய்த் தூளை தொடுபொருள் ஆக்கினால், அபாரமான கலப்புச்சுவையை உணரமுடியும். குறைந்த கலோரிகள் கொண்ட பழம், ஆனால் நிறைய ஆற்றலைக் கொடுக்கும். பழத்தைத் தேனோடு குழைத்தும் சுவைக்கலாம்.
பிரியாணி சாப்பிட்ட பிறகு ஏற்படும் மந்தத்தைப் போக்க, அரைமணி நேரம் கழித்து அன்னாசித் துண்டுகளைச் சாப்பிட, செரிமானத்தை மீட்டெடுக்க முடியும்.
காய்கறி சாலட், பழங்களின் சாலட் என அனைத்திலும் அன்னாசி நீக்கமற இடம்பெறுகிறது. அன்னாசியோடு இலவங்கப்பட்டை, கடுகு உள்ளிட்டவற்றைச் சேர்த்து ஊறுகாய் போலத் தயாரித்துக் கொண்டு அவ்வப்போது சுவைக்கலாம்.
குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்க வேண்டாம்
பழத்தை வெட்டியதும் சாப்பிடுவது நல்லது. குளிர்சாதனப் பெட்டியில் நாள் கணக்காகச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு உகந்ததல்ல! சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் டின்களில் அடைக்கப்பட்ட அன்னாசி சாறு/சிரப்பிற்கு பதிலாக நேரடியாகப் பழங்களைச் சாப்பிடுவதே நல்லது. டின்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளில் அதிக சர்க்கரையும் பதப்படுத்திகளும் சேர்க்கப்பட்டிருக்கும். அன்னாசிப் பழத்தின் நடுப்பாகத்தில் உள்ள தண்டிற்கும் மருத்துவ குணங்கள் இருப்பதால், தண்டையும் தாராளமாகச் சுவைக்கலாம்!
தரத்தை உறுதி செய்யும் வழிகள்
இப்படியும் சாப்பிடலாம்:
அன்னாசி மென்சகாய்
மிளகாய், எள், தேங்காய்த் துருவலோடு அன்னாசிப் பழத் துண்டுகளையும் சேர்த்துச் சமைக்கப்படும் புளிப்பு, இனிப்பு, கார்ப்பு சுவைகள் கலந்த கிரேவி ரகம் இது. கர்நாடகாவின் காரவள்ளி பகுதியில் இவ்வுணவு மிகப்பிரபலம்.
அன்னாசி தேங்காய் சாலட்
அன்னாசித் துண்டுகள், திராட்சை, முந்திரி, உலர்ந்த திராட்சை, சில கொட்டை வகைகள் இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மேலே தேங்காய்த் துருவல் தூவி சாப்பிடுவது தனித்துவமாக இருக்கும். சுவையோடு நிறைய ஊட்டங்களையும் அள்ளிக்கொடுக்கும்.
அன்னாசி சாஸ்
அன்னாசி, மாம்பழம், மிளகுத் தூள் மற்றும் குடை மிளகாயை ஒன்றாகச் சேர்த்து அடித்து, சாஸ் போலச் சிற்றுண்டி ரகங்களுக்குப் பயன்படுத்தலாம்.
பழ வற்றல்
பழத்தை உலரச் செய்து, மோரில் ஊறவைத்த வற்றலாகப் பயன்படுத்தும் வழக்கம் நம்மிடையே இருந்தது. சுவையின்மை மற்றும் செரிமானப் பிரச்சனைகளைப் போக்க, இந்த பழ வற்றலைப் பயன்படுத்தலாம்.
அன்னாசி சிற்றுண்டி
தண்ணீரில் உப்பு சேர்த்து, அதில் வட்டமாகச் சீவிய அன்னாசிப் பழத் துண்டுகளைப் போட்டு சிற்றுண்டியாகச் சாப்பிடலாம். வேகவைத்த அவலுடன், அன்னாசிப் பழத் துண்டுகள், இலவங்கப்பட்டை, புதினா, பனைவெல்லம் சேர்த்து பாலில் ஊறவைத்துச் சாப்பிடலாம்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com