

சமூக ஊடகம் என்றவுடன் சமூகத்துக்கும் தனிமனித வாழ்க்கைக்கும் கேடு விளைவிக்கும் ஒன்று என்கிற பிம்பம் மின்னலெனத் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. காரணம், பெரும்பாலான நவீனத் தொழில்நுட்பங்களைப் போல், சமூக ஊடகமும் குறைகளைக் கொண்டுள்ளது.
சமூக ஊடகம் அளிக்கும் மட்டற்ற சுதந்திரம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பொறுப்பற்ற முறையில் பலர் அதைக் கையாளுகின்றனர். இது தனிமனித வாழ்க்கையிலும் சமூகத்திலும் பல்வேறு பின்விளைவுகளை உருவாக்குகிறது.
மனநலப் பாதிப்புகள்
வெறுப்பை விதைக்கும் போலியான தகவல்கள் சமூக ஊடகங்களில் அதிவேகமாகப் பரவுகின்றன. கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத வதந்திகள் வேண்டுமென்றே அதிக அளவில் அதில் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
இப்படிப் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களில் மனிதத்துவம் சார்ந்த அம்சங்கள் இல்லாமல் போவதால், சமூக ஊடகங்கள் எதிர்மறை உணர்வுகளால் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான சமூக ஊடகங்களின் கட்டமைப்பும் இத்தகைய எதிர்மறைக் கருத்துகளைப் பரப்பும் விதமாகவே உள்ளது.
இவை நம்முடைய விருப்பு, வெறுப்பு சார்ந்த சாய்வுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் தொடர்ச்சியாகத் தூக்கச் சீர்குலைவு, திருப்தியற்ற வாழ்க்கை, சுயமரியாதை இழப்பு போன்ற எதிர்மறையான மனநலப் பாதிப்புகள் பயனர்களுக்கு ஏற்படுகின்றன.
மாற்றும் வழிமுறைகள்
சமூக ஊடகத்தின் பாதகங்களை மட்டும் கருத்தில்கொண்டு அதை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளுவது என்பது சரியான அணுகுமுறையல்ல. எனவே, அதை ஆக்கபூர்வமாக மாற்றுவதற்குத் தேவைப்படும் வழிமுறைகள் குறித்த ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன.
அத்தகைய ஆராய்ச்சி ஒன்றில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மனித-கணினி தொடர்புகளில் தேர்ச்சி பெற்ற அமண்டா பாகன் என்பவரும் ஈடுபட்டுவந்தார். சமூக ஊடகப் பயன்பாடுகளை மேம்படுத்துவதன்மூலம், அதை ஆக்கபூர்வமாக மாற்ற முடியும் என்று அவர் கண்டறிந்துள்ளார்.
சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பாகக் கடந்த மே மாதம் அமெரிக்காவில் ஒரு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அமண்டா தனது கண்டறிதலைச் சமர்ப்பித்து உரையாற்றினார். அந்த உரையில் சமூக ஊடகத்தை ஆக்கபூர்வமாக மாற்றும் எளிய வழிமுறைகளை விவரித்தார்.
சமூக ஊடகங்களின் கட்டமைப்பு
மக்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள், அவர்களின் இணைய அனுபவங்கள் எப்படி இருக்கின்றன என்பன போன்றவற்றைச் சமூக ஊடகங்களின் கட்டமைப்பே தீர்மானிக்கிறது. எனவே, சமூக ஊடகத்தின் கட்டமைப்பை மேம் படுத்துவதன் மூலம், இணையவழி மோதல்களைத் தவிர்க்க முடியும்.
இதன் காரணமாகச் சமூக ஊடகத்தில் நிரம்பியிருக்கும் வெறுப்புணர்வைப் பெருமளவில் மட்டுப்படுத்தமுடியும். சமூக ஊடக நிறுவனங்கள் இதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
வெறுப்பு, கோபம், வன்மம் உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்களைப் பரப்பும்விதமாக இயங்கும் சமூக ஊடகங்களின் கட்டமைப்பை மாற்றியமைக்க அந்த நிறுவனங்கள்முன்வர வேண்டும். அன்பு, ஆதரவு உள்ளிட்ட மனித நல்லியல்புகளை அதிக அளவில் பகிர்ந்துகொள்ளும் விதமாகச் சமூக ஊடகங்களை அவை மாற்றியமைக்க வேண்டும்.
உண்மை நிலையை உணர்த்துதல்
போலியான செய்திகளும், துவேஷம் நிறைந்த வதந்திகளும் மக்களை எளிதில் உணர்வுவயப்பட வைக்கின்றன. அத்தகைய சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பார்த்து மக்கள் கோபத்துடன் எதிர்வினை ஆற்றுவது, அந்தப் போலி செய்திகளைக் கூடுதல் வீரியத்துடன் பரப்புகின்றன.
எனவே, ஒருவர் கோபத்துடன் எதிர்வினையாற்றத் தொடங்குவதற்கு முன்னர், அவருக்கு உண்மை நிலையை உணர்த்தும் செய்தியை வழங்கும் வழிமுறையை சமூக ஊடக நிறுவனங்கள் கட்டமைக்க வேண்டும். சமூக ஊடகத்தில் எழும் தேவையற்ற மோதலைத் தவிர்க்க இந்த வழிமுறை உதவும்.
நேரம் குறித்த விழிப்புணர்வு
சமூக ஊடகங்களில் செலவிடும் நேரத்தைப் பயனர்கள் பெரும்பாலும் உணர்வதில்லை. எனவே, சமூக ஊடகங்களில் செலவிடும் நேரம் குறித்த விழிப்புணர்வுடன் நாம் இருக்க வேண்டும். சமூக ஊடகத்தில் நாம் செலவிடும் நேரத்தை உணர்த்தும் வகையில் நவீனத் திறன்பேசிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், சமூக ஊடகத்தில் விரயமாகும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளலாம். விரயமாகும் நேரத்தைக் குறைப்பது நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்; சமூகப் பிணைப்பை வலுப்படுத்தும்; குடும்ப உறவையும் மேம்படுத்தும்.
விலகல் மனநிலை
விலகல் மனநிலை என்பது ஒருவித உளவியல் பாதிப்பு. இந்த நிலையில், உங்கள் மனம் அந்நியப்படும்; மேற்கொள்ளும் செயல்களிலிருந்து நீங்கள் துண்டிக்கப்படுவீர்கள். உதாரணத்துக்குச் சமையல் செய்துகொண்டிருக்கும்போதே பகல் கனவு காணத் தொடங்குவீர்கள்.
அதாவது, உங்கள் செயலும் எண்ணமும் வெவ்வேறானவையாக இருக்கும். சூதாட்டத்தில் ஏற்படுவதுபோல், சமூக ஊடகத்தில் தொடர்ந்து ‘ஸ்கிராலிங்’ செய்வதும் நம்மை விலகல் மனநிலைக்கு இட்டுச்செல்லும்.
இதன் காரணமாக, மனம் எப்போதும் ஒருவித கனவு நிலையில் சஞ்சரிக்கும். சமூக ஊடகப் பயன்பாட்டை மேம்படுத்திக்கொள்வதன் மூலம், இந்த உளவியல் பாதிப்பை வெகுவாகத் தவிர்க்கலாம்.
தனிப்பயன் பட்டியல்
சமூக ஊடகத்தில் நுழைவதற்கு முன்னர், அதில் நாம் என்ன செய்யப் போகிறோம், என்ன பார்க்கப் போகிறோம் போன்றவை குறித்துத் திட்டமிட்டுக் கொள்வது நல்லது. இந்தத் திட்டமிடல் சமூக ஊடகப் பயன்பாட்டை மேம்படுத்தும். தனிப்பயன் பட்டியல், வாசிப்புப் பட்டியல் போன்றவற்றை உருவாக்கிக் கொள்வது திட்டமிடலை எளிதாக்கும்.
பின்தொடர விரும்பும் செய்திகள், விளையாட்டுகள், நண்பர்கள் உள்ளிட்டவை தனிப்பயன் பட்டியலில் அடங்கும். தனிப்பயன் பட்டியலில் மட்டும் கவனம் செலுத்துவது, சமூக ஊடகம் அளிக்கும் தேவையற்ற அம்சங்களில் நம் கவனம் சிதறுவதைத் தவிர்க்கும்; நேரத்தை மிச்சப்படுத்தும்; முக்கியமாக, விலகல் மனநிலை ஏற்படும் சாத்தியத்தை வெகுவாகக் குறைக்கும்.
சமூக ஊடகம் நம் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது. நாம் விரும்பா விட்டாலும் அதனுடன் இணைந்து பயணித்தே ஆக வேண்டும்.
அந்த அளவுக்கு, தற்போதைய வாழ்க்கைச் சூழலின் பெரும்பாலான நிகழ்வுகள் சமூக ஊடகத்தைச் சார்ந்திருக்கின்றன. எனவே, சமூக ஊடக பயன்பாட்டில் நேர மேலாண்மை இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வதன் மூலம், சமூக ஊடகத்தை ஆரோக்கியமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றிக்கொள்வது நம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்.
நிறுவனங்களின் பொறுப்பு
சமூக ஊடகத்தில் பயனர்கள் என்ன செய்கிறார்கள், என்ன வாசிக்கிறார்கள், யாரைப் பின்தொடர்கிறார்கள் என்பன போன்றவற்றைக் கண்காணிப்பதற்கு லட்சக்கணக்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்தக் கண்காணிப்பின் நோக்கம், சமூக ஊடக நிறுவனங்களின் வருமானத்தை அதிகரிக்கும் வழிமுறையைக் கண்டறிவதற்கானதாகவே உள்ளது.
வணிகரீதியிலான லாபம் மட்டுமல்லாமல்; மோதலற்ற சமூகத்தை உருவாக்குவதும் சமூக ஊடக நிறுவனங்களின் கடமையாக இருக்க வேண்டும். பயனர்களுக்குப் பாதுகாப்பான, நிறைவான அனுபவங்களை அளிக்கும் விதமாக சமூக ஊடகத்தை வடிவமைக்கும் பொறுப்பை சமூக ஊடக நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
குறுகிய கால லாபத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஒட்டுமொத்த சமூக மேன்மையைக் கருத்தில் கொள்வதில்தானே உண்மையான மாற்றம் அடங்கியுள்ளது.
கட்டுரையாளர், தொடர்புக்கு: mohamed.hushain@hindutamil.co.in