

தலையில் அழகிய கிரீடம், கடிக்கத் தூண்டும் பசுமையான தேகம், அனைவருக்கும் விருப்பமான பழம், விலையோ குறைவு என நமது பெருமைக்குரிய கொய்யாப் பழத்துக்கு முன்னுரை எழுதலாம். நூறு ரூபாய் அளவில் விலை கொடுத்து வாங்கும் பழங்களை விட, பத்து ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் கொய்யா தரத்திலும் ஊட்டத்திலும் சிறந்தது. குறிப்பாக நாட்டுக் கொய்யா அத்தனை உசத்தி!
அந்தக் காலத்தில் பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களின் காலை உணவாகப் பள்ளி வாசலில் கிடைக்கும் கொய்யாப் பழமே இருந்தது. பள்ளிகளுக்கு அருகில் கொய்யாப் பழத்தைப் பதமாக வெட்டி, உப்பும் மிளகாய்த் தூளும் திணித்துப் பரிவுடன் மலிவான விலையில் வழங்கக்கூடிய அன்பான பாட்டிகளை இப்போது காண முடிவதில்லை.
கொய்யாவின் வரலாறு
நம்மோடு ஆழமான உறவைக் கொண்டிருக்கும் கொய்யாவின் தாயகம் இந்தியா இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆம் அதன் பிறப்பிடம் அமெரிக்க நாடுகள் என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். இருப்பினும், 17ம் நூற்றாண்டுக்கு முன்பாகவே இந்தியாவிற்குள் தனது மதிப்பைப் பதிவு செய்துவிட்டது கொய்யா. இந்தியாவைப் பொறுத்த வரை அலகாபாத்தில் விளையும் கொய்யாவிற்கு மதிப்பு அதிகம்.
புழக்கத்திலிருக்கும் கொய்யா
ஸ்டிராபெரி கொய்யா, பைன் ஆப்பிள் கொய்யா, சிட்டிடார் கொய்யா, பிரேசில் கொய்யா என மாறுபட்ட சுவையோடும் மருத்துவ குணங்களோடும் கொய்யாவில் பல வகை உண்டு. வெள்ளைச் சதை, சிவப்பு சதை கொண்ட கொய்யாப் பழங்கள் நம்மிடையே அதிக புழக்கத்திலிருக்கின்றன.
மிட்டாயாக, உலர்ந்த பழமாக, பழக் கட்டியாக பல்வேறு ரூபங்களில் வெளிநாடுகளில் கொய்யா பயன்பாட்டிலிருக்கிறது. பிலிப்பைன்ஸ் நாட்டில் கனிந்த கொய்யாப் பழங்கள் குழம்பு வகைகளில் சேர்க்கப்படுகின்றன. கொய்யா இலைகள், பழங்களைச் சேர்த்துத் தயாரிக்கப்படும் மருத்துவ பானமும் சில நாடுகளில் பிரசித்தம்.
மருத்துவ பலன்கள்
மழைக்காலத்தில் மிகுதியாக விளையும் கொய்யாவைக் குளிர்ச்சி என்று ஒதுக்காமல், அந்தப் பருவத்திலேயே சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும். காய்ச்சல் உள்ளிட்ட பருவ கால நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பு கிடைக்கும். சிறிது மிளகுத் தூள் தூவி சாப்பிட்ட பிறகு, மிதமான வெந்நீர் குடித்தால் சளி பிடிக்கவும் வாய்ப்பில்லை.
உடலை வளர்க்கக்கூடிய, நோய் ஏற்படாமல் காக்கக்கூடிய பல சத்துக்கள் கொய்யாப் பழத்தில் நிறைந்திருக்கின்றன. இதன் காய்களைத் துவையல் போலச் செய்து, தொடு உணவாகப் பல உணவுகளுக்குப் பயன்படுத்தலாம். கொய்யாப் பழத்தை இலேசாக வேக வைத்து, தேன், ஏலம், பனைவெல்லம் சேர்ந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
மலக்கட்டை நீக்க, நன்றாகக் கனிந்த கொய்யா கைகொடுத்து உதவும். தவறான உணவு முறையின் காரணமாக ஏற்பட்ட மலக்கட்டை நிவர்த்தி செய்ய, தினம் ஒரு கொய்யாவை நன்றாக மென்று சாப்பிட்டால் போதும். மூல நோயால் அவதிப்படுபவர்கள் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டிய பழமிது.
வைட்டமின் சி
வைட்டமின் – 'சி'யைத் தேடுபவர்கள் கொய்யாப் பழத்தின் ஆதரவை நாடுங்கள். வைட்டமின் – சி சத்து நிறைந்த கொய்யா, உடலுக்கு வலுவைக் கொடுத்து பல்வேறு நோய்கள் ஏற்படாமல் பாதுகாப்பளிக்கும். சுண்ணச் சத்துக்கும் கொய்யாவில் குறைச்சல் இல்லை. திசுக்களில் ஏற்படக்கூடிய காயங்களையும் குணமாக்கும் தன்மை வைட்டமின் – 'சி'க்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்கவும் இதிலிருக்கும் பொட்டாஷியம் உதவுகிறது.
புற்றுநோயைத் தடுக்கும்
நார்ச்சத்து, எதிர்-ஆக்ஸிகரணி பொருட்கள் ஆகியவை கொய்யாப் பழங்களில் நிறைந்திருக்கின்றன. இவை இதய ஆரோக்கியத்திற்குச் சிறந்த காவலனாக அமையும். இரத்தத்தில் கொழுப்புச் சத்தின் அளவு அதிகரிக்காமல் கொய்யா பார்த்துக் கொள்ளும். கொய்யாவில் இருக்கும் லைகோபீன்கள் புரஸ்தகோள புற்று நோயின் தாக்கத்தைத் தடுப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
செரிமானத்துக்கு நல்லது
கொய்யாப் பழங்களைத் தோல் நீக்கி வெட்டி துண்டு துண்டாகச் சாப்பிடுவதை விட, நன்றாகக் கழுவி அப்படியே தோலோடு கடித்துச் சாப்பிடுவதால் பற்களுக்கும் ஈறுகளுக்கும் கூடுதல் பலம் கிடைக்கும். கூடவே தோலில் உள்ள நுண் சத்துக்களும் நமக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கடித்துச் சாப்பிடும் போது, உமிழ்நீர் சுரப்பை அதிகரித்து செரிமானத்திற்கு அடித்தளம் அமைக்கும்.
செயற்கை பானங்கள் வேண்டாமே
கொய்யாப் பழத்தின் மகிமையை உணர்ந்தே பல பன்னாட்டு நிறுவனங்களும் கொய்யாவின் சாறு சேர்ந்த குளிர்பானங்களைச் சந்தைக்குக் கொண்டுவர முயல்கின்றன. அந்தச் செயற்கை பானத்தில் கொய்யாவின் சத்தை சேர்ப்பதாகச் சொன்னாலும், அதில் செயற்கையின் தாக்கம் அதிகமிருக்கும் என்பதை மறவாதீர்கள்.
எப்போது சாப்பிடலாம்?
காலை 11 மணி அல்லது மதியம் மூன்று மணி கொய்யாவைச் சாப்பிடுவதற்கான உகந்த நேரம். சாப்பிட்டு முடிந்த உடன் உடனடியாக பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். நன்றாகக் கனிந்த கொய்யாப் பழங்கள், செரிமானத்தில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும்.
சர்க்கரை நோயாளிகள் ஒன்று அல்லது இரு துண்டு கொய்யாக் காய் சாப்பிடுவதில் தவறில்லை. காயாக இருக்கும் போது, கொய்யாவில் உள்ள துவர்ப்பு சுவை, இரத்தத்தைத் தூய்மையாக்கும். கொய்யாப் பழங்களைக் கடித்துச் சாப்பிடும் போது, பற்களில் சிக்கிக் கொள்ளும் அதன் சிறிய விதைகளுக்கும் மருத்துவ குணங்கள் ஏராளம் உண்டு. விதையுள்ள பழங்களுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லது. இதன் விதைகளுக்குக் குடல் இயக்கத்தைத் துரிதப்படுத்தும் ஆற்றல் உண்டு.
இப்படியும் சாப்பிடலாம்:
கொய்யா சாறு:
கொய்யாப் பழத்தை இடித்து சாறு பிழியவும். கொத்துமல்லி, புதினா, ஏலம் கொஞ்சம் மிளகுத் தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை சாறுடன் மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். செரிமானத்தை அதிகரிக்க, மருத்துவ குணமிக்க இந்த சாறினைப் பருகலாம். சுவையோடு சேர்த்து செரிமானக் கருவிகளைச் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.
கொய்யாப் பழ ஜாம்
கொய்யாப் பழங்களைப் பிசைந்து, வெல்லம் சேர்ந்து 'ஜாம்' போலச் செய்து கொண்டு, ரொட்டி வகைகள் சிற்றுண்டி ரகங்களுக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். எவ்வித செயற்கை சர்க்கரையின் தாக்கமும் இல்லாமல் ஆரோக்கியமான இயற்கை ஜாமாக அமையும்.
பழக்கலவை பானம்
கொய்யா, திராட்சை, மாம்பழம், பப்பாளி, புளி, மாதுளை ஆகிய பழங்கள், பூசனி விதை, முருங்கை விதை, வெள்ளரி விதை, ரோஜா இதழ்கள், செம்பருத்தி இதழ்கள் ஆகிய அனைத்தையும் தண்ணீரோடு சேர்த்து மிக்சியில் நன்றாக அடித்து, சுவைக்குப் பனைவெல்லம் கலந்து பருக, அற்புதமான சுவையைக் கொடுக்கும். மெக்சிகோ, அமெரிக்காவில் இந்த பானம் பிரபலம்.
கொய்யா சட்னி
200 கிராம் நறுக்கிய கொய்யாப் பழங்கள், ஒரு கப் கொத்துமல்லி இலைகள், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு, நான்கு மிளகாய்கள், கொஞ்சம் இஞ்சி, புதினா இலை, சுவைக்காக உப்பு ஆகியவற்றை அம்மியில் அல்லது மிக்சியில் அடித்து சட்னியாகத் தயார் செய்து சுவைக்கலாம். ஆரோக்கியத்தை விரும்புபவர்கள், அவ்வப்போது இந்து கொய்யா சட்னியை முயலலாம்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com