

'கண்களைக் கவரும் நிறம், சாப்பிடத் தூண்டும் சுவை, ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் மருத்துவ குணங்கள்' என அற்புதங்கள் குழைந்த பழம் பப்பாளி. உலகத்தில் விளையும் எந்த ஒரு பழத்துடனும் மருத்துவக் குணங்களுக்காகப் போட்டிப் போட்டு வெல்லக்கூடிய பழமிது.
குறைந்த விலையில் நிறைவான பலன்களைக் கொடுக்கும் என்பதால், 'ஏழைகளின் தோழன்' என இதற்குப் பட்டம் சூட்டலாம். அனைத்துப் பருவங்களிலும் விளைச்சல் தரவல்ல பப்பாளி, செலவு கொடுக்காத 'ஊட்டச்சத்து மருத்துவர்'!
பப்பாளியின் தாயகம்
பப்பாளியின் தாயகம் மெக்சிகோ என்கிறது வரலாறு. பதினாறாம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் இந்தியாவிற்குள் நுழைந்த பப்பாளியை முதலில் அதிக மக்கள் விரும்பவில்லை. ஆனால், இப்போது பப்பாளி உற்பத்தியில் முன்வரிசையில் நிற்கிறது நம் நாடு.
கோவை வகை, பெங்களூரு வகை, சன்ரைஸ் – சோலோ, டிஸ்கோ பப்பாளி, பூசா எனப் பப்பாளியில் வணிக ரீதியாகப் பல்வேறு வகைகள் இருக்கின்றன.
மருத்துவ பலன்கள்
பப்பாளிப் பழத்துண்டுகளைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். உடல் ஊட்டம் பெறத் தேவையான சத்துகளைச் சிந்தாமல் சிதறாமல் அப்படியே வழங்கும் பப்பாளிப் பழம், கண் குறைபாடுகளையும் அகற்றும். செரிமான உறுப்புகளைச் சமநிலையில் இயங்கச் செய்து, மலச்சிக்கலின் சிக்கல்களை அவிழ்க்கும். நினைவாற்றலைப் பெருக்குவதோடு இரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பப்பாளி ஒரு வரப்பிரசாதம். மலத்தின் மூலம் கழிவுகளை வெளியேற்றுவதுடன் சருமத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.
புற்று நோயைத் தடுக்கும்
இரும்புச் சத்து, சுண்ணச் சத்து, பாஸ்பரஸ், சிறிதளவு புரதங்கள், தாது உப்புக்களையும் கொண்டுள்ளது. 'வைட்டமின் – ஏ' பெற விரும்புபவர்கள் சாப்பிட வேண்டிய முக்கியமான பழம் பப்பாளி. இதிலுள்ள 'பபைன்' (Papain) எனும் நொதி, செரிமானம் சார்ந்த பல்வேறு உபாதைகளை நிவர்த்தி செய்யவல்லது. பப்பாளியிலுள்ள 'சியாசாந்தின்' (Zeaxanthin), வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வைக் கோளாறுகளைத் தள்ளிப் போட உதவும். புற்று நோயைத் தடுக்கும் பீட்டா-கரோட்டின்களும் பப்பாளியில் நிலை கொண்டிருப்பது சிறப்பு.
மகிழ்ச்சியை வழங்கும் பழம்
பப்பாளிப் பழச் சதைகளைப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் அடித்து 'ஸ்மூத்தி' போல மாலை வேளைகளில் குடித்து வரலாம். உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியை வழங்குவதுடன் மனதிற்கு மகிழ்ச்சியை வழங்கும். மாதவிடாய் பிரச்சனை உடையவர்கள் பப்பாளிப் பழத்தை தங்களது உணவுப் பட்டியலில் இணைத்துக் கொள்வது நல்லது.
பப்பாளி சர்பத்
எலுமிச்சை, நன்னாரி கொண்டு சர்பத் தயாரிப்பதைப் போல, பப்பாளிப் பழத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் சர்பத் சில நாடுகளில் பிரபலம். பழத்தைக் கொண்டு பச்சடி, ஜாம் போன்ற உணவுப் பொருட்களையும் உருவாக்கலாம். தேங்காய்த் துருவல் மற்றும் பப்பாளியோடு பனைவெல்லம் சேர்ந்த காம்போ, நாவின் எச்சில் சுரப்பை அதிகரிக்கும். பப்பாளிப் பழத்தோடு உருளைக் கிழங்கு சேர்த்தரைத்து 'கட்லட்' போலச் செய்த பின், புதினா சட்னியைத் தொடு உணவாக வழங்க, பசி அதிகரித்து, உடல் ஊட்டம் பெறும்.
செரிமானத்துக்கு உதவும்
மலக்கட்டு, ஆசனவாய் எரிச்சல் போன்ற மூலநோய் குறி குணங்களால் அவதிப்படுபவர்கள், பப்பாளிப் பழத்துண்டுகளைத் தேனில் குழைத்துத் தினமும் சில துண்டுகள் சாப்பிட்டு வரலாம். முதியவர்களின் செரிமானக் கருவிகளுக்கு வலு அளிக்கும் பழம் பப்பாளி. வளரும் இளம் குழந்தைகளின் மதிய உணவுப் பெட்டியில், பப்பாளி எனும் சத்துக் களஞ்சியம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். செரிமானம் பாதிப்படைந்தவர்கள், பப்பாளிப் பழத்தோடு அன்னாசிப் பழத்தையும் துணைக்குச் சேர்த்துக் கொள்ளலாம்.
தாய்ப்பாலைப் பெருக்கும்
சிறுநீரை முறையாக வெளியேற்றும் ஆயுதமாகவும் பப்பாளிப் பழத்தைப் பயன்படுத்தலாம். மனம் மயக்கும் இனிப்புச் சுவையுடன், உடலுக்கு மெல்லிய வெப்பத்தை மட்டும் பப்பாளிப் பழம் கொடுக்கும். அனைவரும் நினைப்பதைப் போல, அதிவெப்பத் தன்மை கொண்ட உணவுப் பொருள் அல்ல. பப்பாளிக் காயைக் கொண்டு ஊறுகாய் தயாரிக்கும் வழக்கம் பெரும்பாலான நாடுகளில் உண்டு. இதன் பிஞ்சுக் காயிலிருந்து வடியும் பாலுக்கு அதிக மருத்துவக் குணங்கள் உண்டு. கூடவே தாய்ப்பாலைப் பெருக்கவும் பப்பாளிக் காய், பழங்கள் உதவுகின்றன.
இரத்தத் தட்டணுக்களை அதிகரிக்கும்
இறைச்சி ரகங்களைச் சமைக்கும்போது, சிறு துண்டு பப்பாளிக் காயைச் சேர்த்துச் சமைக்க, இறைச்சி மிருதுவாகும். பப்பாளிக் காயை உலர்த்திச் சமையல் வகைகளில் சேர்த்துச் சாப்பிட்டு வர, கல்லீரலும் மண்ணீரலும் பலமடையும் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு.
கத்திரிக்காயைச் சமைப்பதைப் போலப் பப்பாளிக் காய்களையும் அவ்வப்போது சமைக்கலாம். தோல் நோய்களில் பப்பாளி இலைகளை அரைத்துப் பூச விரைவில் குணம் கிடைக்கும். டெங்கு சுரத்தில் பப்பாளி இலைகளின் பங்கு பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. இரத்தத் தட்டணுக்களை அதிகரிக்கும் தன்மை பப்பாளி இலைகளுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
முகப்பொலிவு அளிக்கும்
பப்பாளிப் பழத் துண்டுகளுடன் தேன் சேர்த்துக் குழைத்து, முகத்தில் மென்மையாக மசாஜ் செய்து முகம் கழுவி வர முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் படிப்படியாகக் குறைவதுடன், எண்ணெய்ப் பிசுபிசுப்பும் நீங்கும். பெரும்பாலான முகப்பொலிவு கிரீம்களில் பப்பாளிச் சத்து (Papaya extract) சேர்ந்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.
சிங்சு (Singzu)
கொஞ்சம் கருவாடை, மூன்று சிவப்பு மிளகாயோடு சேர்த்து வதக்கி, அரைத்துப் பசை போலச் செய்து கொள்ளவும். பின்னர் தனியாக இரண்டு தேக்கரண்டி எள் விதைகளை வறுத்துச் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தோல் நீக்கிய பப்பாளிக் காயைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மேற்சொன்ன பசையையும், எள்ளுப் பொடியையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொத்தமல்லி இலைகளை மேற்தூவி பரிமாறலாம். 'மணிப்பூர் ஸ்பெஷல்' இந்த ரெசிப்பி!
தயிர்ப் பழம்
பப்பாளித் துண்டுகள், அன்னாசித் துண்டுகள், வாழைப்பழம் இவற்றோடு தயிர் சேர்த்துக் குழப்பிப் பரிமாறச் சுவையில் மதிமயக்கும். இப்பழக் கலவையில் ஊட்டத்திற்கும் பஞ்சமிருக்காது.
பப்பாளி சல்ஸா
பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், மாம்பழம், குடை மிளகாய், கொஞ்சம் மிளகுத் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இவற்றில் அரை தேக்கரண்டி பனைவெல்லம், கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து கலக்கிச் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
சாண்டுலா (Santula)
பப்பாளிப் பழங்கள், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றோடு மிளகு, சீரகம், இலவங்கப்பட்டை போன்ற நறுமணமூட்டிகளைச் சேர்த்து, பாலில் கலந்து கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் குழம்பு வகை இது. ஒரிசா பகுதியின் பிரபலமான உணவு வகை.
பப்பாளி அல்வா
பப்பாளித் துண்டுகள், வாதுமைப் பருப்பு, ஏலக்காயோடு நெய் சேர்த்து அல்வா தயாரித்து, மணம் கமழ ருசித்துச் சாப்பிட, மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும்.
வீட்டிலேயே வளர்க்கலாம்
எத்திலின் வாயுவைப் பயன்படுத்தி பப்பாளி காய்களை விரைவாகப் பழுக்கவைக்க முடியும் என்பதால் கவனம் தேவை. நமக்கு மிக அருகில், நமது வீட்டிலேயே எவ்வித வேதி உரக்கலப்பும் இல்லாமல் பப்பாளியை நாமே சுலபமாக வளர்த்து, அதன் பலன்களை நுகரலாம்.
கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com