தொப்பைக்கு குட்-பை சொல்லும் உணவுகள்!

தொப்பைக்கு குட்-பை சொல்லும் உணவுகள்!
Updated on
2 min read

இரத்தக் கொழுப்பு குறித்த கவலை, ஏழை, பணக்காரர் என எல்லோருக்கும் இருக்கிறது. ஒரு தலைமுறைக்கு முன்புவரை, வாழ்வியல் நோய்கள் என்பவை 60 வயதுக்குப் பிறகே மிக அரிதாக வந்தன. ஆனால், இன்று 40 வயதுக்கு முன்னரே பலர் சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்குள் விழுந்துவிடுகிறார்கள். பலர் உடனடியாக விழித்துக்கொண்டு உடல்நலனின் உரிய அக்கறை செலுத்தத் தொடங்கிவிடுகிறார்கள். இதில் பலரும் முதலில் நம்புவது உணவுமுறையில் செய்துகொள்ளும் மாற்றம்தான். ஏனென்றால் உணவுமுறையில் கொண்டுவரும் மாற்றங்கள் வழியாக ரத்தக் கொழுப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

நல்ல கொலஸ்ட்ரால் அதாவது ‘ஹைடென்சிட்டி லிப்போ புரோட்டின்’ (High-density lipoprotein) என்பது ரத்தக் குழாய்களிலோ, உடலின் வேறு எந்தப் பகுதிகளிலுமோ படிவதில்லை. இது உடல் இயற்குவதற்கு மிகவும் அவசியமான ஒன்று. இது சராசரியாக நம்முடைய ரத்தத்தில் 40 முதல் 45 மில்லிகிராம் வரை ஒரு டெஸி லிட்டர் ரத்தத்தில் இருக்க வேண்டும். அதேபோல், கெட்டக் கொழுப்பு அதாவது ‘லோ- டென்சிட்டி லிப்போ புரோட்டின்’ (low-density lipoprotein) என்பது ரத்தத்தில் 100 மில்லிகிராமுக்குள் இருந்தால் நல்லது. அது 200 மில்லிகிராம் என்கிற அளவைத் தாண்டும்போதுதான் பிரச்சினைகள் தலைகாட்டத் தொடங்குகின்றன. இந்தக் கெட்டக் கொழுப்பைதான் ‘டிரான்ஸ் ஃபேட்’ என்கிறது மருத்துவ உலகம்.

கெட்டக் கொழுப்பை ஒரு புரிதலுக்காக `மஞ்சள் நிறக் கொழுப்பு’ என்று அழைக்கிறார்கள். இந்த மஞ்சள் கொழுப்பானது பெண்களுக்கு பெரும்பாலும் இடை, முன்வயிறு, முதுகின் விலாப்பகுதி ஆகிய இடங்களில் படியத் தொடங்குகிறது. ஆண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அதிகமும் படிகிறது. இதனால் இருபாலாருக்கும் வயிறு மெல்ல மெல்ல ஊதிப் பெருத்து பலூன் வடிவமாகிவிடுகிறது. சிலருக்கு சுரைக்காயைப் பாதியாக வெட்டி வைத்ததுபோல் தொப்பை காட்சி தரும். ஆக மஞ்சள் கொழுப்பு, தான் குடியிருக்க தொப்பைப் பகுதியைக் குத்தகைக்கு எடுத்துவிடுகிறது. தொப்பையில் குடியிருக்கும் இந்தக் கொழுப்புத்தான் இதய நோய் ஆபாயத்தையும் அதிகரிக்கிறது.

சமைக்கும் முறையில் மாற்றம்

வயிற்றுப் பகுதியைத் தேர்ந்தெடுத்து படிய விரும்பும் மஞ்சள் கொழுப்புகு நாம் நினைத்தால் குட் பை சொல்லலாம். இதற்கு இரண்டு இரண்டுவிதமான உறுதியான முடிவுகளை நாம் எடுத்தாக வேண்டும். முதலாவது மஞ்சள் கொழுப்பாக மாறும் அல்லது அதன் உற்பத்தியை ஊக்குவிக்கும் நாம் உண்ணும் சில உணவுகளையும் பல தீனிகளையும் அடியோடு தவிர்ப்பது. அவற்றை முற்றிலும் தவிர்க்க முடியாது. குடும்பத்தில் எனக்கு மட்டும் தனியாக சமையல் செய்ய முடியாது என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள் என்றால், இரண்டாவதாக உங்களுக்கு வேறொரு தீர்வு உள்ளது. அது, உணவைச் சமைக்கும் முறையை நீங்கள் மாற்றுவதேயாகும். அதன் மூலமும் உணவின் வழியாக உடல் பெற்றுக்கொள்ளும் கெட்டக் கொழுப்பின் அளவைக் குறைக்க முடியும்.

விலங்கு எண்ணெய்களுக்குப் பதிலாக தாவர எண்ணெய் பயன்படுத்துவது, சிக்கன், மட்டன், பீப், போர்க் என எவ்வகை இறைச்சியாக இருந்தாலும் கொழுப்பு பகுதியை அகற்றிவிட்டுக் குழம்பு வைத்துச் சாப்பிடுவது, இறைச்சியை எண்ணெயில் பொரித்து அல்லது வறுத்துச் சாப்பிடுவதை அடியோடு தவிர்ப்பது, மீனையும் பொறித்து அல்லது வறுத்துச் சாப்பிடுவதற்கு பதிலாக குழம்பு வைத்து சாப்பிடுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் உணவின் வழியாக உடலில் குறிப்பிட்ட இடங்களில் மஞ்சள் கொழுப்பு சேமிக்கப்படுவதை படிப்படியாகக் குறைக்கும் முயற்சியாக அமையும்.

தொப்பைக் கொழுப்புக்கு செக்!

சில உணவுகளை அடியோடு தவிர்த்தால் தொப்பைப் பகுதியைத் தேடும் மஞ்சள் கொழுப்புக்கு செக் வைத்துவிடலாம். தொப்பையைக் குறைக்கவும் இதய நோயிலிருந்து தப்பிக்கவும் ‘ட்ரான்ஸ் ஃபேட்’ என்கிற மஞ்சள் கொழுப்பு அதிகம் காணப்படும் உணவுகளின் பட்டியலை தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமான பால பாடம். வாருங்கள் அந்த உணவுப் பட்டியலைப் பார்ப்போம்.

கேக்குகள், 2. குக்கீஸ், 3. மைக்ரோவேவ் உணவுகள், 4. பீட்ஸா, 5. பிஸ்கட்டுகள், 6. இனிப்பு வகைகள், 7 ரோல்ஸ், 8.பிரெஞ்ச் பிரைஸ், 9. பேஸ்ட்ரிகள், 10. டோனெட்ஸ், 11. ஐஸ்கிரீம் 12. நெய், இனிப்பு சேர்க்கப்பட்ட தயிர் மற்றும் லஸ்ஸி உள்ளிட்ட பால் உணவுகள், 13. விளையாட்டு பானங்கள், குளிர்பானங்கள் மற்றும் எனர்ஜி பானங்கள், 14. எண்ணெயில் பொரித்த இறைச்சி வகைகள், 15. பொறித்த மீன், 16. மாவுசத்து அதிகம் கொண்ட உணவுகள், நார்சத்து குறைவாக உள்ள உணவுகள், 17. கிழங்கு வகைகள், 18. சாஸ் மற்றும் மயோனிஸ் சாஸ், 19. மோனோ சோடியம் குளூட்டாமேட் உள்ளிட்ட சுவையூட்டிகள், 20. ஆல்கஹால்.

ஆல்கஹாலைத் தொடர்ச்சியாக எடுத்துகொள்வதன் மூலம் கிடைக்கும் கலோரிகள் உடலில் கெட்டக் கொழுப்பாகச் சேமிக்கப்படுகின்றன. தொப்பைக் கொழுப்பை குறைப்பதில் புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. புரதம் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் எடையை மீண்டும் பெறுவதைத் தவிர்க்கவும் உதவும். அப்படிப்பட்ட புரதம் அதிகமுள்ள உணவுகள் இவைதான்: கோழி, மீன் (குழம்பு), முட்டையின் வெள்ளை கரு, முந்திரி, பாதாம், அவித்த வேர்க்கடலை, அக்ரூட் பருப்பு, பால், சீஸ், வெண்ணெய் நீக்கப்பட்ட மோர், டோஃபு, பன்னீர், சோயா பீன்ஸ், ராஜ்மா, பீன்ஸ், பட்டானி.

தினமும் நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது தொப்பையைக் குறைக்க உதவும். பீட்டா குளுக்கன், குளுக்கோமன்னன் ஆகிய கரையக்கூடிய நார்ச்சத்துப் பொருட்களை கொண்ட உணவுகளை சாப்பிடுவது தொப்பைக் கொழுப்பு சேராமல் தடுக்கின்றது. இந்த இரண்டு பொருட்களும் அதிகமுள்ள சில பொருட்கள்: சர்க்கரைவள்ளிக் கிழங்கு ( சர்க்கரை இருப்பவர்கள் இக்கிழங்கைத் தவிர்க்கவும்), ப்ராக்கோலி, கேரட், ஆப்பிள், ஆளிவிதை, ஓட்ஸ், பார்லி, கருப்பு பீன்ஸ், பச்சைப் பட்டாணி, வெண்ணெய் பழம், ப்ளாக் பெரிஸ் போன்றவை.

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in