மாரடைப்பைத் தடுக்கும் ரத்த தானம்!

மாரடைப்பைத் தடுக்கும் ரத்த தானம்!
Updated on
2 min read

ரத்த தானம் என்கிற வார்த்தைப் பிரயோகம் பரவலாக அறியப்பட்ட ஒன்று. ‘குருதிக் கொடை’ என்கிற தூய தமிழ் சொற்களும் அதற்கு மாற்றாகப் பிரபலமடைந்துவிட்டன. நாம் ‘குருதிக் கொடை’ என்றே இக்கட்டுரையில் உரையாடுவோம். கொடைகளில் எல்லாம் சிறந்தது குருதிக் கொடை என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஏனென்றால், மனித ரத்தம் எந்த தொழிற்சாலையிலும் உற்பத்தி ஆவதில்லை. அதுவொரு விற்பனைப் பொருளும் அல்ல. ஒரு மனிதன், தேவையுள்ள சக மனிதனுக்குத் தானமாக மனமுவந்து கொடுத்தால் அவர் உயிர் காக்கப்படுகிறது. உயிர் காக்கும் உயர்ந்த கொடை என்று தெரிந்தும் நம்மில் பலரும் ஆண்டுக்கு ஒருமுறை கூட ரத்த தானம் செய்ய முன்வருவதில்லை. இந்தியாவில் ரத்தம் கிடைக்காமல் இறப்பவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. நிலைமை இப்படியிருக்க, குருதிக் கொடை கொடுக்கக் கூடாது என்கிற எதிர்மறை எண்ணத்தைக் கொண்டிருப்பவர்கள் சொல்லும் காரணங்கள் வெகு விநோதமானவை. அவை அத்தனையும் அறியாமையால் கற்பித்துக்கொள்ளப்பட்டவை. அவற்றின் பின்னால் இருக்கும் உண்மை என்னவென்பதைப் பார்க்கலாம் வாருங்கள்.

தவறான எண்ணம் 1:

உடலிலிருந்து ரத்தம் எடுக்கும் செயல்முறை மிகுந்த வலி மிகுந்தது.

உண்மை: ரத்தம் எடுக்க 16ஆம் எண் (16-gauge needle) கொண்ட மெல்லிய ஊசியைப் பயன்படுத்துகின்றனர். இதனால் வலி என்பதே இருக்காது. இந்த ஊசி ரத்தம் சேகரிக்கும் பையுடன் சேர்த்து இணைக்கப்பட்டிருக்கும். மிகவும் பாதுகாப்பானது. 15 முதல் 18 நிமிடங்களில் 350 மிலி ரத்தம் பையில் சேமிக்கப்பட்டுவிடும்.

தவறான எண்ணம் 2:

குருதிக் கொடைக்குச் சென்றால் நிறைய ரத்தத்தை எடுத்துவிடுவார்கள்.


உண்மை: ரத்தத்தை சேமிக்கும் பை 350 மிலி மட்டுமே கொள்ளளவு கொண்டது. 350 மிலி ரத்தம் சேகரிக்கப்பட்டதும் கூடுதலாக ஒரு மில்லி கூட சேமிக்க வழியின்றி ரத்தம் சேகரிக்கும் பைக்குச் செல்லும் ரத்தமானது தானாகவே நின்றுவிடும். ரத்தம் சேகரிக்கும் சுகாதார அலுவலர், சென்சார் எழுப்பும் பீப் ஒலியை கவனிப்பதுடன் நேரத்தையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருப்பார்.

தவறான எண்ணம் 3:

குருதிக் கொடை வழங்கினால், அந்த ரத்தம் உடலில் உற்பத்தியாக பல மாதங்கள் பிடிக்கும். அதனால் உடல் பலகீனமாகிவிடும்.

உண்மை: ரத்த தானம் செய்த 48 மணி நேரத்துக்குள் ரத்த அணுக்கள் பெருகி, உடலின் பழைய ரத்த அளவு உற்பத்தியாகிவிடும். 70 கிலோ கிராம் எடையுள்ள ஒரு மனிதரின் உடலில் சுமார் 5 முதல் 6 லிட்டர் ரத்தம் இருக்கும். ரத்த தானம் செய்பவரின் உடல் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டியது அவசியம்.

தவறான எண்ணம் 4

சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் கொண்டவர்கள் ரத்தம் கொடுப்பது ஆபத்தானது.

உண்மை: இது மிகவும் தவறான கருத்து. இவைபோன்ற துணை நோய்கள் எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருப்பவை. இவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யாரும் தாராளமாக ரத்த தானம் செய்யலாம். யாரெல்லாம் ரத்த தானம் செய்யக் கூடாது என்பதை ரத்த தானம் பெறும் முன்னர் மருத்துவ நல ஊழியரும் அங்கிருக்கும் மருத்துவரும் உங்களுக்குச் சொல்லுவார். அவர்கள் தரும் படிவத்தில் கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கு நீங்கள் விடையளித்த பிறகு, அதை சோதித்த பிறகே உங்களை குருதிக் கொடைக்கு அனுமதி அளிப்பார்கள். அதாவது, மஞ்சள் காமாலை, டைபாய்டு, மலேரியா போன்ற காய்ச்சல் வந்தவர்கள், சிகிச்சை பெற்று ஆறு மாதங்கள் வரை ரத்தத் தானம் செய்யக் கூடாது. மது அருந்தியவர்கள் அடுத்த 24 மணி நேரம் வரை ரத்தம் அளிப்பது தவறு. மாதவிடாய் தொடங்கி 5 நாட்கள் வரை ரத்தம் தரக் கூடாது, கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் ஓராண்டு வரை ரத்த தானம் செய்யக் கூடாது. ரத்தசோகை உள்ளவர்களும் ரத்த தானத்தைத் தவிர்க்க வேண்டும்.

தவறான எண்ணம்: 4

ரத்தம் கொடுப்பவர் தன்னுடைய உடலில் நோய்க் கிருமிகள் ஏதேனும் இருந்தால் அது மற்றவர்களுக்குப் போய்விடலாம் என்று அஞ்சுகிறார்கள்.

உண்மை: இதுவொரு நல்ல எண்ணம்தான். ஆனால், உங்களுக்கு நோய் இருப்பதாக நீங்களே ஏன் கற்பனை செய்துகொள்ள வேண்டும்?. அந்தக் கவலையே வேண்டாம். குருதிக் கொடை மூலம் பெறப்படும் ரத்தம், அதை கொடை பெறுபவருக்கு செலுத்தும் முன்னர், ஹெச்.ஐ.வி., ஹெச்.பி.எஸ், ஹெச்.சி.வி உள்ளிட்ட 5 முக்கிய வைரஸ்கள் இருக்கிறதா என்பதைக் கட்டாயமாக ஆய்வு செய்த பின்பே ரத்தத்தை தேவைப்படுகிறவர்களுக்குப் பயன்படுத்துவார்கள்.

தவறான எண்ணம்: 6

ரத்த தானம் செய்வதால் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடுகிறது.

உண்மை: ரத்ததானம் செய்வதால், உடலில் இரும்புச் சத்து தேவைக்கு அதிகமாக மிகுந்திருப்பவர்களுக்கு அதனால் ஏற்படும் ஆபத்துகள் அடுத்த ஒரு ஆண்டுக்கு குறைந்துவிடுவதாக ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர். அளவுக்கு அதிகமாக இரும்புச் சத்து அதிகரிக்கும்போது ஹீமோகுளோபின் அளவு சராசரியை விட அதிகரிக்கிறது. இதனால் பல சிக்கல்கள் ஏற்படலாம். ரத்த தானம் செய்பவர்களுக்கு, அதீத இரும்புச் சத்து அதிகரிப்பால் ஏற்படும் ‘மாரடைப்பு’ , ‘குடல்வால் புற்றுநோய்’ போன்றவற்றிலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை செய்யும் ரத்த தானம் பாதுகாப்பு கொடுக்கிறது என்பதையும் ஆய்வு மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்குமேலும் ரத்த தானம் செய்ய நாம் தயங்கலமா?

தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in