பலா - முள்ளுக்குள் தங்கப் புதையல்

பலா - முள்ளுக்குள் தங்கப் புதையல்
Updated on
3 min read

பலாவிற்கு பலவு, பலாசம், சக்கை, வருக்கை, ஏகாரவல்லி எனப் பல பெயர்கள் உண்டு. அது பழங்களில் மிகப் பெரியது; முக்கனிகளில் மிகவும் இனியது. சில நாடுகளின் பஞ்ச காலப் பசியைப் போக்கிய மகிமை பலாவிற்கு உண்டு. 'வீடுதோறும் ஒரு பலாமரம் இருக்க, பசியைக் கண்டு கலங்குவதேன்…' என்கிற மலைப்பகுதி முதுமொழியும் பிரபலமானது!

பலா மரங்கள் மலைகளின் அதிசயம். பெரும்பாறைகள் பிரமாண்டமாக நிற்பதைப் போல, பெரிய பெரிய பலா மரங்கள் சூழ்ந்த மலைகள் ரசனையானவை, வாசனைமிக்கவை. பலா மரங்களில் அடி முதல் உச்சி வரை காய்த்துத் தொங்கும் பலாக்கள், ஒரு தாய் தனது குழந்தைகளை ஒரு சேர ஆனந்தமாய் அரவணைத்திருப்பதைப் போன்ற உணர்வை நமக்குக் கொடுக்கக் கூடியவை.

பலாப்பழத்தின் தாயகம்

பலாவின் தேகத்தைப் பிளந்து சுளைகளைத் தாங்கியிருக்கும் தண்டைப் பிரித்து, கைகளில் எண்ணெய்த் தேய்த்து பசைப்போல ஒட்டக்கூடிய சுளைகளை எடுத்து, தேன் தடவிப் பசி போக்கும் கவித்துவமான நிகழ்வினை இன்றும் பல மலைக்கிராமங்களில் ரசிக்கலாம். கேரளப் பகுதி தான் பலாப்பழத்தின் தாயகமாகக் கருதப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் பலா மரங்கள், அப்பகுதியின் ஒவ்வொரு வீடு தோறும் இனிமை சேர்ப்பதை ரசிக்க முடியும்.

பலாவைக் கொண்டு பலாப்பழ பாயசம், அவியல், ரொட்டி, சிப்ஸ் என பல்வேறு ரெசிப்பிக்களை தயாரிக்கலாம். சதைப் பற்றுள்ள பலா, நார்ச்சத்து அதிகமிருக்கும் பலா என சில வித்தியாசங்களைப் பலாவில் உணரலாம். பண்டைய இலக்கியங்களில் பலாப் பழத்தின் வெளித்தோற்றத்தை வைத்தே உள்ளே எத்தனை சுளைகள் இருக்கக்கூடும் என்பதைக் கணக்கிடும் குறிப்பு பாடலாக வடிவம் பெற்றிருக்கிறது. பல்வேறு நாடுகளில் பலா சார்ந்த பல புராணக் கதைகள் உலா வருகின்றன.

பலன்கள் கணக்கிலடங்காதவை

பலாப்பழத்தால் கிடைக்கும் பலன்கள் கணக்கிலடங்காதவை. கூர்மையான பார்வையைக் கொடுத்து, இளமையை நீட்டிக்கச் செய்யும். எலும்புகளுக்கு வலுக்கொடுத்து, இரத்த சோகையைப் போக்கும். உடனடியாக ஆற்றலைக் கொடுத்து உடல் சோர்வையும் உளச் சோர்வையும் நீக்கும். மலத்தை இளக்கி உடலுக்கு உரத்தைக் கொடுக்கும் பலாப் பழம், உடல் செயல்படுவதற்கான வெப்பத்தையும் தரவல்லது.

வைட்டமின் – ஏ, பி, இரும்புச் சத்து, நார்ச்சத்து, சுண்ணச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டங்களையும் பலா கொண்டிருக்கிறது. எதிர்-ஆக்ஸிகரணி தன்மை நிறைந்த பலா, உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து ஆரோக்கியத்தை நிலைக்கச் செய்யும். இரத்த அழுத்த நோயாளிகள் பலாச் சுளைகளை அவ்வப்போது சுவைத்து வரலாம். வாத நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் பலாவின் சுவைக்கு மயங்காமல் பலாவைத் தவிர்த்து விடுவது நல்லது.

பலாச் சுளைகளைத் தேனில் ஊறவைத்து அல்லது தேனில் குழைத்துச் சாப்பிட, வயிறு உபாதைகள் ஏற்படாது. அதுவும் இயற்கை வழங்கிய பலாவும் தேனும் இணையும் போது கிடைக்கும் சுவைக்கு ஈடு இணையில்லை என்றே சொல்லலாம். தேன் தவிர, பனங்கற்கண்டு, வெல்லம் ஆகியவற்றின் துணையோடும் பலாப்பழத்தைச் சாப்பிடலாம்.

பலாக் கொட்டைகளை மாங்காய், கத்திரிக்காயோடு சேர்த்துக் குழம்பு வைத்து நிறைவாகச் சாப்பிடலாம். நெருப்பில் சுட்டும் ஊட்டமிக்க சிற்றுண்டியாகச் சுவைக்கலாம். ஆனால் அளவுக்கு அதிகமாகப் பலாக்கொட்டைகளைச் சாப்பிட்டால் வயிறு உபாதைகளை ஏற்படும்.

சிறிய இளசான பலாக்காய்களைச் சமைப்பதில் மலைவாழ் மக்களுக்குக் கொள்ளைப் பிரியம். பலாக் காய் குழம்பு, பொரியல், கூட்டு என விதவிதமாக பலாவின் பலன்களை மலைக் கிராமங்களில் அனுபவிக்கலாம்.

மருத்துவ பலன்கள்

பலாச் சுளைகளோடு, உருளைக் கிழங்கைச் சேர்த்து வேகவைத்து வெங்காயம், இஞ்சி, மிளகாய், உப்பு கூட்டி வாணலியில் லேசாக வதக்கி சிற்றுண்டியாகப் பயன்படுத்தலாம். பலாப் பிஞ்சுகளோடு பருப்பு சேர்த்து வேகவைத்து, 'பலா-பருப்பு கடையலாக' சமைத்துச் சாப்பிட, வயிற்றுப்புண் விரைவாகக் குணமாகும்.

'தாகம்போம் வந்தபித்தஞ் சாந்தமாம் ஆடவர்க்குப் போகம் மிகப்பொழியும்…' எனும் பலாப் பிஞ்சு பற்றிய அகத்தியர் குணவாகடப் பாடல், பலா பிஞ்சுக்குச் சமையலில் இடம் கொடுக்க, நீர்வேட்கையைப் போக்கி பித்தம் தணியும் என்றும் ஆண்மை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடுகின்றது. பலாப் பழத்தை ஆரம்ப நிலை மனநோய்க்கான மருந்தாகப் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவக் குறிப்பு.

பழங்களை விரைவாகப் பழுக்க வைக்கவோ, அதிகமாக மகசூல் கிடைக்கவோ செய்யப்படும் அறமற்ற செயற்கை வேதி பயன்பாடு, பலாப் பழத்தில் நடக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே! ஆகவே அச்சப்படாமல் பலாப்பழ சீசனில் ஆனந்தமாகச் சுளைகளைச் சுவைக்கலாம்!

ஒரு உறைக்குள் அழிவைத் தரக்கூடிய ஒரே ஒரு கத்தி தான் இருக்க முடியும். ஆனால், ஒரு முள் கூட்டிற்குள் நூற்றுக்கணக்கான சுவைமிக்க சுளைகளைச் சுமந்து மற்றவர்களுக்கு நன்மை செய்யும் பலா ஆக்கத்திற்குச் சிறந்த உதாரணம். பண்ருட்டி பலா, கேரள பலா எனப் பலாப்பழங்கள் பல்வேறு இடங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அளவோடு சாப்பிடப் பலாச் சுளைகள் கொடுக்கும் பலன்கள், அதன் சுவையைப் போலவே இனிமையானதாக இருக்கும்.

பலாப்பழ பாயசம்

பலாச் சுளைகள், பேரீச்சை, ஊற வைத்த அவல், தேங்காய்ப் பால், ஏலம், முந்திரி, உலர்ந்த திராட்சை, பூசனி விதை, பாதாம் மற்றும் பால் சேர்த்துத் தயாரிக்கப்படும் சுவையூறும் பலாப்பழ பாயசத்தைத் திகட்டத் திகட்ட ருசிக்கலாம்.

பலாப்பழ ரொட்டி

கனிந்த பலாச்சுளைகளோடு, ஏலம், சீரகம், பனைவெல்லம், தேவையான அளவு கோதுமை மாவு சேர்த்து நீர்விட்டுக் குழைத்து சட்டியில் ரொட்டி சுடுவதைப் போலச் சமைத்துச் சாப்பிடலாம். இனிப்புப் பிரியர்களுக்கான விருப்பமான சிற்றுண்டி ரகமாக இது இருக்கும்.

பலாப்பழ சிப்ஸ்

சிறுவர்களுக்கான மாலை நேரச் சிற்றுண்டியாகப் பலாச் சுளை சீவல்களை உலரவைத்து, நல்லெண்ணெய்யில் லேசாகப் பொரித்து மிளகுத் தூள் தூவி சாப்பிடக் கொடுக்கலாம். நன்மை தரும் இந்த சிற்றுண்டியை பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ் ரகங்களுக்கு மாற்றாகச் சிறுவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கலாம்.

பலாப் பால்

பலாச் சுளைகளை ஒன்றிரண்டாக நறுக்கி, பாலில் வேகவைத்து, அடுப்பிலிருந்து இறக்கி, பனங்கற்கண்டு, சிறிது மிளகுத் தூள் கலந்து பருகலாம். சுவையோடு கூடவே உடனடி ஆற்றலையும் வழங்கும் பலாப் பால்!

கவனம்… அளவோடு சாப்பிட வேண்டிய பழ ரகங்களில், பலா முக்கியமான ஒன்று. அதன் சுவைக்கு அடிமையாகி அளவை அதிகரித்தால், செரிமானத்தில் தாமதம், உணவு எதுக்களித்தல், குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்
தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in