

வாட்டியெடுக்கிற சித்திரை மாத வெயிலின் மகிமையால் வேலூர் மாவட்டத்தில் 106 டிகிரி ஃப்ரான்ஹீட்டுக்கு மேல் வெப்பநிலை நிலவுகிறது. தமிழகத்தில் மேலும் ஒன்பது இடங்களில் வெப்பநிலை 100 டிகிரியைத் தாண்டிவிட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெயிலால் குழந்தைகளும் வயதானவர்களும் அதிகமாகப் பாதிக்கப்படுவார்கள் என்கிறபோதும் ஹீட் ஸ்ட்ரோக் / சன் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப மயக்கம் அனைவரையும் பாதிக்கக்கூடும். சில நேரம் இது உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.
சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப நம் உடல் தன் வெப்பநிலையைத் தானாகவே சமன்செய்துகொள்ளும். சில நேரம் அதிக வெப்பத்துக்கு நாம் ஆட்படும்போது வெப்பச் சமநிலை தடைப்படும். அப்போது நாம் வெப்ப மயக்கத்துக்கு ஆளாகலாம். அதிக வெப்பநிலையால் மூளை, இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழக்கக்கூடும். வெப்பம் அதிகமான இடத்தில் அதிக நேரம் வேலை செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றுடன் உடலின் நீர்ச்சத்து குறையும்போது ஒருவரை வெப்ப மயக்கம் மிக எளிதாகத் தாக்கும்.
யாருக்கு வரலாம்?
வெப்ப மயக்கம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்றாலும் குழந்தைகள், வயதானவர்கள், நீரிழிவால் பாதிப்புக்குள்ளானவர்கள், விளையாட்டு வீரர்கள், மது அருந்துவோர் போன்றோர் அதிக வெயிலில் வெளியே செல்லாமல் தவிர்ப்பது நல்லது. வெப்ப மயக்கத்தால் பாதிக்கப்பட்டால் மனக் குழப்பம், தடுமாற்றம் போன்றவை தொடங்கி கோமா நிலை வரைக்கும்கூடச் செல்லலாம். அதனால் கவனத்துடன் இருக்க வேண்டும். சிலருக்கு அதிக வியர்வை வெளியேற்றத்தால் வெப்ப மயக்கம் ஏற்பட்டிருக்கும். அவர்களது சருமம் சில்லென்று இருக்கும். இவை தவிர மேலும் சில அறிகுறிகளை வைத்தும் ஒருவர் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை அறியலாம்.
அறிகுறிகள்
பெரும்பாலும் பெரியவர்களுக்கு மயக்கம் வருவதுதான் முதல் அறிகுறி. இந்த அறிகுறிகளை நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் உடல் நலம் தீவிரமடையக் கூடும். மனக் குழப்பம், அதிவேக மூச்சிரைப்பு, உடலில் தசைப் பிடிப்பு, வலிப்பு, கோமா போன்றவை அதி தீவிர அறிகுறிகள்.
இதைச் செய்யுங்கள் முதலில்
வெப்ப மயக்கத்தால் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி அவசியம். அவரை நிழலில் காற்றோட்டமான இடத்தில் அமரவைக்க வேண்டும். இறுக்கமான ஆடை அணிந்திருந்தால் அதைத் தளர்த்த வேண்டும். தண்ணீர் அல்லது மென்மையான பானத்தை அருந்தத் தர வேண்டும். உடலின் வெப்ப நிலையைக் குறைக்க அவர் மீது தண்ணீர் தெளிக்கலாம் அல்லது ஈரத் துணியால் ஒற்றியெடுக்கலாம். அப்போதும் உடல்நிலை 102 டிகிரிக்கு மேல் இருந்தாலோ மயக்கம், வலிப்பு, நினைவிழப்பு போன்றவை ஏற்பட்டாலோ அவரை அவசர சிகிச்சையில் அனுமதிக்க வேண்டும்.
தவிர்ப்பது எளிது
வெயில் அதிகமாக இருக்கும்போது வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் போதுமான அளவுக்குத் தண்ணீரைக் குடித்து உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ளுங்கள். அடிக்கடி காபி குடிப்பதை நிறுத்துங்கள். மது அருந்துவதையும் தவிருங்கள். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தக்கூடும். வெளிர் நிற தளர்வான ஆடைகளையே அணியுங்கள்.