காபி குடித்தால் கொழுப்பு அதிகரிக்குமா?

காபி குடித்தால் கொழுப்பு அதிகரிக்குமா?
Updated on
2 min read

காலை காபியும் செய்தித்தாளும் இல்லாவிட்டால் பலருக்கும் அன்றைய நாள் தொடங்காது. இன்று இளைஞர்களும் கூட காபி பிரியர்கள் ஆகிவிட்டார்கள். 10, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் காலையிலேயே எழுந்து படிக்கும்போது, அம்மாக்கள் பாசமுடன் காபி போட்டுக்கொடுத்து பிள்ளைகளுக்கு காபி பழக்கத்தைத் தொடங்கி வைத்துவிடுகிறார்கள். இதைப் பார்க்கும் சிறார்களும் ‘அண்ணனுக்கும் அக்காவுக்கும் காபி கொடுத்தீங்க.. எனக்கும் கொடுங்க’ என்று அடம்பிடித்து காபியின் ருசியை சிறு வயதிலேயே பழகிவிடுகிறார்கள்.

படித்து பணியில் இணைந்தபிறகோ, அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி காபி இயந்திரங்கள் தாராளமாக காபியை அருந்த வரும்படி கண் சிமிட்டி அழைக்கின்றன. அலுவலகத்தில் அருந்துவது போதாது என்று, அலுவலகத்தை விட்டு இறங்கி தெருவில் அரட்டை அடித்தபடி நடந்துபோய் நண்பர்களுடன் காபி அருந்திவிட்டு வருவது அன்றாடத் தருணங்களில் ஒன்றாகிவிட்டது.

‘எல்லாம் ஓகே..! காபி குடிப்பதால் உடலில் கொழுப்பு அதிகரிக்கும் என்று எதை வைத்துச் சொல்லுறீங்க’ என்று கேட்றீர்களா? அதைத் தெரிந்துகொள்ளும் முன் காபியால் நம் உடலில் நடக்கும் சில விளைவுகளைப் பற்றித் தெரிந்துகொண்டு அந்த ‘டாபிக்’ பக்கம் போவோம்.

நம்மில் பெரும்பாலானவர்கள், ‘காபி குடித்தால் சுள்ளென்று மூளையில் சுறுசுறுப்பு வந்துவிடுகிறது’ என்று உணரவும் சொல்லவும் செய்கிறோம். இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? காபியில் பல வேதிப்பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று ‘காஃபின்’. இதுதான் நம் மூளையில் உள்ள ’நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி இந்தச் சுறுசுறுப்பைக் கொண்டுவருகிறது. சுறுசுறுப்பைக் கொண்டுவருவதால் ‘காஃபி’னை மன்னிக்க முடியாது. அது உடலில் செய்யும் ஏடாகூடங்கள் ஏராளம்! அதைப் பெரிய பட்டியலே போடலாம்.

உதாரணத்துக்கு இங்கே ஒன்று மட்டும். ஒருநாளைக்கு ஒரு முறைக்கு மேல் 5 முறை வரை காபி அருந்தும் ஆயிரத்தில் இரண்டுபேருக்கு காஃபின் பித்தப்பையில் சேர்ந்து கல்லாக மாறுகிறது என்று அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழகம் தனது ஆய்வில் கண்டறிந்திருக்கிறது. காபியில் உள்ள வேறுசில வேதிப்பொருட்கள், உடல் இயக்கத்துக்குத் தேவையான ஜிங்க், கால்சியம், ஐயன் போன்ற தாது உப்புக்களை நாம் உண்ணும் உணவிலிருந்து உடலை கிரகிக்க விடாமல் தடுக்கின்றன என்பதையும் கண்டறிந்திருக்கிறார்கள். இதுவும் அதிகம் முறை காபி அருந்துபவர்களுக்கு வரக்கூடிய சிக்கல் என்கிறார்கள். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சாப்பிட்டவுடன் காபி குடிக்கும் வழக்கத்தை உருவாக்கிக்கொண்டிருப்பவர்களுக்கு நெஞ்செரிச்சல், உணவுக்குழாய் அல்சர் ஆகியவை ஏற்படும் என்கிறார்கள் குடல்நோய் மருத்துவ நிபுணர்கள். இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தியாவின் ‘பில்டர்’ காபி

இனி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்தியர்கள் பெரும்பாலும் வீட்டில் பில்டர் காபி குடிக்கப் பழகியிருக்கிறார்கள். ஆனால், அது கொதிக்கும் நீரில் காபித் தூளைக் கொட்டி, அதிலிருந்து காபி கஷாயத்தை வடிகட்டி எடுக்கும் முயற்சியில் உருவானதாக இருக்கிறது. இந்த முறையில் காபியில் உள்ள ‘கேஃப்ஸ்டால்’(cafestol) என்கிற வேதிப்போருள் வடிகட்டப்படுவதில்லை. ஆனால், இன்று பல ஐரோப்பிய நாடுகளில் இந்த கேஃப்ஸ்டாலை ‘காகிதம்’ கொண்டு அட்டகாசமாக வடிகட்டுகிறார்கள். ரஷ்யர்களும் இந்த முறையைக் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காபி கஷாயத்தை மெல்லிய காகிதம் கொண்டு வடிகட்டும்போது அதிலுள்ள கேஃப்ஸ்டால் காகிதத்தில் ஒட்டிக்கொள்கிறது. எதற்காக இந்தமுறை பரவலாகி வருகிறது என்றால், நெதர்லாந்தின் வேகனிகன் பல்கலைக்கழக (Wageningen University) ஆய்வாளர்கள் பில்டர் செய்யப்படாத காபியை குடிப்பதால் உடலில் கெட்ட கொழுப்பு அதிகமாகும் என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அதாவது, காபியில் உள்ள கேஃப்ஸ்டால் (cafestol) என்கிற வேதிப்பொருள், கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. நாம் பில்டர் காபி என்கிற பெயரில் காபித் தூளின்மீது கொதிக்கும் நீரை ஊற்றும்போது. அல்லது காபி தூளைத் தண்ணீரில் கொட்டி நன்கு கொதிக்க வைத்து அதை பில்டரில் ஊற்றும்போது, கேஃப்ஸ்டால் பிரிந்து வந்தாலும் அது காபியில் மிதந்துகொண்டேதான் இருக்கிறது. அதாவது நாம் கேஃப்ஸ்டால் உடன்தான் இத்தனை காலமும் காபி சாப்பிட்டு வருகிறோம். கேஃப்ஸ்டாலை கழித்துக்கட்ட ‘பேப்பர் பில்ட’ரைப் பயன்படுத்தச் சொல்கிறது வேகனிகன் பல்கலைக்கழகம்.

காகிதம் வழியாக பில்டர் செய்யப்படாத ஒரு கோப்பை காபியில் நான்கு மில்லிகிராம் வரை கேஃப்ஸ்டால் இருக்கும்; இது நம் கொலஸ்ட்ரால் அளவை ஒரு சதவீதம் வரை அதிகரித்துவிடும் என்று அப்பல்கலைக்கழக ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இந்தியா உட்பட உலகில் பல நாடுகளில் தானியங்கி எஸ்பிரஸோ இயந்திரங்களிலும் கூட காபியை வடிகட்ட காகித வடிகட்டி பயன்படுத்தப்படுவதில்லை. காபியிலிருந்து ‘கேஃப்ஸ்டால்’ முறையாக வடிக்கட்டப்படாத நிலையில் அடிக்கடி காபி அருந்துவதைத் தவிர்த்துவிடுவதே நல்லது என்பதைத்தான் இதன்மூலம் நாம் கற்றுகொள்ள வேண்டியது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in