

பள்ளிமாணவிகள் தேர்வு முடிந்ததைக் கொண்டாடும் விதமாக ஒன்றுசேர்ந்து மது அருந்துவது போன்ற சில படங்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அதேநேரம், தனிமையில் போதை சுகத்துக்காக மட்டும் போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது ஆண்களின் வழக்கம். நல்லவேளையாகப் பெண்களிடையே அந்த வழக்கம் இன்னமும் அதிகம் தொற்றிக்கொள்ளவில்லை. வளர்இளம் பெண்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாடு தென்படத் தொடங்கியிருந்தாலும், ஆண்களிடமிருந்து அவர்களை வித்தியாசப்படுத்துவது இந்த ஒரு விஷயம்தான்.
வளர்இளம் பெண்கள் என்றைக்காவது கூட்டமாகவோ, கொண்டாட்டங்களின்போதோ மட்டும் போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்கள். சமூகரீதியான கட்டுப்பாடுகள் இருப்பதுதான், இதற்கு முக்கியக் காரணம். வளர்இளம் பெண்களின் போதைப்பழக்கத்துக்கும் இளவயது கர்ப்பம் மற்றும் பால்வினை நோய்களுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். பெண்கள் 100 மில்லி லிட்டர் குடிப்பது, ஆண்கள் 300 மில்லி லிட்டர் குடிப்பதற்குச் சமம். அத்தனை எளிதில் ஆண்களைவிட போதைக்கு அடிமையாகும் தன்மையுடன் பெண்களுடைய நரம்பு மண்டலம் அமைந்துள்ளது.
ஆபத்தான தனிமை
இதுபோன்ற பழக்கங்களிலிருந்து பள்ளிப் பருவத்தில் தப்பிவரும் பெரும்பாலான ஆண்-பெண் வளர்இளம் பருவத்தினர் கல்லூரிக்குள் நுழையும்போதுதான், அடுத்தகட்ட ஆபத்தான சூழ்நிலைக்குள் நுழைகின்றனர். அதுவரைக்கும் உள்ளூரிலேயே பள்ளிப் படிப்பை முடித்திருப்பார்கள், பெற்றோரின் நேரடிக் கண்காணிப்பில் இருந்திருப்பார்கள். ஆனால், கல்லூரிப் படிப்பை வெளியூரில் தொடரவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
அப்போது பெற்றோரின் நேரடி கண்காணிப்பு இல்லாமல் இருப்பது, கட்டற்ற சுதந்திரம் மற்றும் அனானிமிட்டி (Anonymity) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் யாரும் நம்மை அறிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியம் போன்றவை காரணமாகப் போதைப்பழக்கத்துக்கு அடிமையாக வாய்ப்பு அதிகம்.
எனவே, வாரிசுகள் வேறு ஊரில் உள்ள கல்லூரிக்குச் சென்றுவிட்டாலும் அவர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு வீட்டிலிருக்கிற உணர்வைப் பெற்றோர் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் மீது தாங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதை வெளிப்படுத்த வேண்டும். அவர்களுடைய ஆசிரியர்களை அடிக்கடி தொடர்புகொண்டு அவர்களுடைய கல்வி, மற்ற விஷயங்கள் குறித்து அறிந்துகொள்ள வேண்டும்.
தூரமாக இருந்தால் குழந்தைகள் படிக்கும் கல்லூரி இருக்கும் ஊரில் வசிக்கும் குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களை அவ்வப்போது சென்று பார்த்துவருமாறு பொறுப்பாக ஒருவரை நியமிக்கலாம். வாரிசுகளுடைய நலனில் அக்கறை உள்ள, அவர்களுடைய நெருங்கிய நண்பர்களோடு பெற்றோரும் நல்ல உறவை வளர்த்துக்கொள்வது, பல நேரம் உதவியாக இருக்கும். தேவைக்கு மீறிய பணப்புழக்கம் அவர்கள் கையில் இருப்பதைத் தவிர்க்கலாம். எப்போதாவது ஒருமுறை மட்டுமே அவர்களால் ஊருக்கு வர வாய்ப்பிருக்கிறது என்றால், வங்கிகளில் பணத்தைப் போட்டுக் கொடுத்து ஏ.டி.எம். பரிமாற்றங்களைக் கண்காணித்துக் கொள்ளலாம்.
மனநோயும் போதைப்பழக்கமும்
வளர்இளம் பருவத்தினரைப் பொறுத்தவரையில் மனநோய்க்கும் போதைப்பழக்கத்துக்கும் உள்ள சம்பந்தம் ‘முட்டையிலிருந்து கோழி வந்ததா அல்லது கோழியிலிருந்து முட்டை வந்ததா’ என்ற குழப்பத்தைப் போலத்தான். சில வேளைகளில் வளர்இளம் பருவத்தினர் மனநோயால் பாதிக்கப்பட்டதன் முதல் அறிகுறியே போதைப்பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பிப்பதாக இருக்கக்கூடும்.
அதிலும் குறிப்பாக மன அழுத்த நோய் இவர்களைப் பாதிக்கும்போது, அவர்களுடைய மன அழுத்தத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும் ஒரு வழியாகப் போதைப்பழக்கம் ஆரம்பமாகும். ஆனால் மன அழுத்த நோய் என்பது மனநல மருத்துவத்தால் முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒன்று. பல நேரங்களில் மனநல மருத்துவரை அணுகக் காலம் தாழ்த்துவதால், வளர்இளம் பருவத்தினர் சீர்கெட்டுப் போகும் வாய்ப்பு அதிகமாகிறது. மன அழுத்தத்தைப் பற்றி தனியாகப் பார்ப்போம்.
இதுபோலப் பல மனப் பதற்ற நோய்கள், மனச் சிதைவு நோய்களின் முதல் அறிகுறியாகவும் போதைப்பழக்கம் இருக்கலாம். இவை எல்லாம் வளர்இளம் பருவத்தினருக்கு மட்டுமே பொருந்தும். சில நேரம் மனநோய் ஆரம்பித்துப் பல அறிகுறிகள் தெரிந்த பிறகு, போதைப்பொருட்களுக்கு அடிமையாவதும் உண்டு. இதுபோன்ற மனநோய்களால் ஏற்படும் குடி மற்றும் போதைப்பழக்கங்களை மனநோய்க்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டாலே சரிசெய்துவிட முடியும். எனவே, ஆரம்ப அறிகுறிகள் தெரியும்போதே மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுச் சிகிச்சை எடுப்பதுதான் சிறந்த தடுப்புவழி.
(அடுத்த வாரம்: பழக்கமும் அடிமைத்தனமும்)
கட்டுரையாளர், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின்
உதவிப் பேராசிரியர் மற்றும் மனநல மருத்துவர்
தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com