

டாக்டர் சு. முத்துச் செல்லக் குமார்
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தப் புதிய வைரஸின் பரவல் வேகத்தைவிடப் பல்வேறு தவறான கருத்துகள் மக்களிடம் பரவிக்கொண்டிருக்கின்றன. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், முதலில் அது குறித்த வதந்திகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், ஐஸ் கிரீம், குளிர்பானங்களைத் தவிர்த்தால், குளோரினைப் பயன்படுத்தி இந்த வைரஸை அழித்துவிடலாம், கைகளை உலர்த்தும் இயந்திரங்களால் வைரஸை அழித்துவிடலாம், புற ஊதாக் கதிர்களால் வைரஸை அழித்துவிடலாம், வெந்நீரில் குளிப்பதால் கரோனா பரவாது, விமான நிலையத்திலேயே கோவிட்-19 வைரஸை கண்டுபிடித்துவிடுவார்கள் என இந்த வதந்திகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே உள்ளது. இது போன்ற வதந்திகளை நம்பாமல், முறையான மருத்துவ ஆலோசனை பெறுவதே, கரோனாவை எதிர்கொள்ளும் வழிகளில் முதன்மையானது.
ஃபுளூ வைரஸும் கரோனா வைரஸும் ஒன்றே
தவறான கருத்து
ஃபுளு வேறு. கரோனா வேறு. சார்ஸ், மெர்ஸ் என வந்து மனிதர்களைப் பாதித்த இந்த பீட்டா வகை கரோனா வைரஸ் இப்போது கோவிட் என்ற பெயரில் புதிய வைரஸாக மாறி உலக மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கிறது.
அசைவ உணவை உட் கொண்டால் கரோனா வந்துவிடும்:
தவறான கருத்து.
அசைவ உணவைப் பச்சையாகவோ அரைகுறையாக வேக வைத்தோ சாப்பிட்டால் பிரச்சினை ஏற்படலாம். நன்கு வேக வைத்த அசைவ உணவால் நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை.
நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பயன் படுத்தி கோவிட்-19 வைரஸ் பாதிப்பைத் தடுக்க முடியும்
தவறான கருத்து
கரோனா வைரஸ் பாதிப்புடன், பிற பாக்டீரியா தொற்றுகளும் ஏற்பட்டால் மட்டுமே, அதைச் சரிசெய்ய நுண்ணுயிர்க்கொல்லி
மருந்துகள் தரப்படும்.
குழந்தைகள், சிறுவர்களை இந்த வைரஸ் பாதிக்காது!
தவறான கருத்து
சிறுவர்களுக்கும் குழந்தைகளுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆல்கஹால் குடித்தால் கரோனா வைரஸ் பரவாது
தவறான கருத்து
ஈரானில், இப்படி ஒரு வதந்தியால், எரி சாராயம் குடித்த 27 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர்.
கோவிட்-19 வைரஸைச் சில மருந்துகளால் குணப்படுத் தலாம்:
தவறான கருத்து.
நவீன மருத்துவத்தில், எபோலாவுக்குப் பயன்படுத்திய மருந்து, (Remdesivir) எய்ட்ஸ் நோய்க்குப் பயன் படுத்தப்படும் சில மருந்துகள் (lopinavir/Ritonavir) ஆகியவற்றைக் கொண்டு இதன் சிகிச்சைக்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை இந்த வைரஸுக்கான மருந்து
என எதுவும் உறுதி செய்யப்படவில்லை.
வெப்பம் மிகுதியாக இருப்ப தால் இந்தியாவில்/தமிழ கத்தில் கரோனா பரவாது.
தவறான கருத்து.
நமது நாட்டில் வெப்பம் அதிகமாக இருப்பதால், கரோனாவால் நீண்ட நேரம் தாக்குப் பிடித்து இருக்க முடியாது. இருந்தாலும், நமது நாடு மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடாக இருப்பதுடன், மக்கள் நெருக்கமாக வாழ்வதாலும் வைரஸ் பரவும் வேகம் குறையாது.
வெள்ளைப்பூண்டு சாப்பிட்டால் கரோனா வைரஸ் பாதிப்பு வராது
தவறான கருத்து.
பூண்டு உட்கொள்வதால் கரோனா தொற்று ஏற்படாது என்பது தவறான செய்தி என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாசியை அடிக்கடி உப்பிட்ட நீரினால் கழுவினால் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படாது.
தவறான கருத்து
இது ஜலதோஷத்துக்கு ஓரளவு நிவாரணம் அளித்தாலும், கரோனா வைரஸ் பாதிப்புக்கு நிவாரணம் அளிப்பதில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
கட்டுரையாளர், மருத்துவப் பேராசிரியர்
தொடர்புக்கு: muthuchellakumar@gmail.com