

எந்த ஒரு கலையாக இருந்தாலும் அதை விருப்பத்துடன் கற்றுக்கொண்டு, ரசிகர்களுக்கு முன்பாக அவர்கள் கற்ற கலையை நிகழ்த்திப் பாராட்டு மழையில் நனைவதற்குக் காரணமாக இருப்பது அரங்கேற்றம். கலைகளுக்கு இது சரி. நம்முடைய அஜாக்கிரதையால் ரத்தசோகை, ரத்த அழுத்தம், மூட்டுவலி என்று பல நோய்களும் தங்குவதற்கு நம்முடைய உடலையே மேடையாக்குவது சரியா?
புறத்தூய்மையும் அகத்தூய்மையும்தானே நமது உடலாகிய மெய்யின் சாராம்சம். இதை எப்படிக் கைவசப்படுத்துவது? நமது அன்றாடச் செயல்களிலேயே நமக்கு வரக்கூடிய நோய்களைத் தவிர்க்கும் உபாயம் என்ன என்பன போன்ற காலத்துக்கு ஏற்ற சிந்தனைகளை நமது எண்ணத்தில் ஏற்றுகிறது டாக்டர் கு. கணேசன் எழுதி சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘நோய் அரங்கம்’.
தொடக்கத்தில் நோய் நமக்கு விடுக்கும் எச்சரிக்கை பற்றிய புரிதலை உணர்ந்து அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டால், நம் உடலே ஆரோக்கியம் தங்கும் இடமாக மாறும் என்பதையும் இந்நூல் விளக்குகிறது.
எபோலா வைரஸ் தாக்கம், ஜிகா வைரஸ் தாக்கம் தொடங்கி எலிக்காய்ச்சல் வரை 51 நோய்கள் வருவதற்கான காரணம், நோய் அறிகுறிகள், அதிலிருந்து விடுபட எந்த வகையான சிகிச்சையைத் தேர்ந்தெடுப்பது என்பன போன்ற பல விஷயங்களையும் இந்நூலில் விரிவாக எழுதியிருப்பதற்கு டாக்டர் கு.கணேசனுக்கு இருக்கும் பழுத்த அனுபவம் கைகொடுக்கிறது.
நூலிலிருந்து ஒரு பகுதி…
ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்டால், அக்னி நட்சத்திர வெயில் ஆரம்பித்துவிட்டதுபோல் வெப்பம் நம்மைச் சுட்டெரிக்கிறது. வெயிலின் கொடுமை தாங்காமல் வேனற்கட்டியில் தொடங்கி வெப்பப் புண்வரை பல நோய்கள் சருமத்தைப் பாதிக்கின்றன. நம் உணவிலும் உடையிலும் வாழ்க்கை முறைகளிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால், வெப்ப நோய்களைத் தடுப்பதும் எளிது.
வியர்க்குரு
கோடைக் காலத்தில் நம் உடலின் வெப்பத்தைக் குறைப்பதற்கு இயற்கையிலேயே அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. அப்போது உடலைச் சுத்தமாகப் பராமரிக்காவிட்டால், சருமத்தில் உள்ள வியர்வைச் சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக்கொள்ளும். வியர்வை நாளங்கள் பாதிக்கப்பட்டு வியர்க்குரு வரும். வெயில் காலத்தில் தினமும் இரு வேளை குளித்தால் வியர்க்குரு வராது.
குளித்து முடித்தபின் வியர்க்குரு பவுடர், காலமைன் லோஷன் அல்லது சந்தனத்தைப் பூசலாம். இதனால் அரிப்பு குறையும். கோடையில் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது நல்லது. வைட்டமின் சி மிகுந்த ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால், வியர்வை நாளங்கள் சரியாகி வியர்க்குருவிலிருந்து விடுதலை பெறலாம்.
நீர்க்கடுப்பு
கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிகத் தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது ஆகியவை இதற்குக் காரணங்கள். அருந்தும் தண்ணீரின் அளவு குறைந்தால் சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமான படிகங்களாக மாறி சிறுநீர்ப்பாதையில் படிந்து நீர்க்கடுப்பு ஏற்படும். நிறையத் தண்ணீர் குடித்தால் இந்தப் பிரச்சினை சரியாகும். அடிக்கடி நீர்க்கடுப்பு வந்தால் சிறுநீர்ப்பாதையில் நோய்த் தொற்றோ சிறுநீரகக்கல்லோ இருக்க சாத்தியமுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுக்க வேண்டும்.
வெப்ப மயக்கத்துக்கு முதலுதவி
வெப்ப மயக்கம், வெப்பத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி தர வேண்டியது அவசியம். மயக்கம் அடைந்தவரைக் குளிர்ச்சியான இடத்துக்கு அப்புறப்படுத்துங்கள். மின் விசிறிக்குக் கீழே படுக்கவைத்து, ஆடைகளைத் தளர்த்தி, காற்று உடல் முழுவதும் படும்படிச் செய்யுங்கள்.
அவரைச் சுற்றிக் கூட்டம் சேருவதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீரில் நனைத்த துணியால் உடலைத் துடைக்க வேண்டும். அவருக்கு குளுக்கோஸ், தாதுக்கள் அடங்கிய சிரைவழி நீர்மங்களைச் (Intra Venous Fluids) செலுத்த வேண்டும். அதனால், உடனடியாக மருத்துவ உதவி கிடைப்பதற்கும் வழி செய்யுங்கள்.
நோய் அரங்கம்
டாக்டர் கு. கணேசன்
சூரியன் பதிப்பகம், சென்னை.
தொடர்புக்கு: 72990 27361