

நுரையீரலில் ஏற்படும் தொற்றினால் உண்டாகும் நோயே நிமோனியா. உலகில் ஆண்டுதோறும் பல லட்சம் குழந்தைகள், முதியோர்களின் இறப்பிற்குக் காரணமாக இருப்பதும் நிமோனியாதான். அனைத்து வயதினருக்கும் இந்த நுரையீரல் தொற்றுநோய் ஏற்படச் சாத்தியம் இருந்தாலும் குழந்தைகள், முதியோர்களிடம்தான் இது தீவிரத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இரண்டு வகை: பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் ஆகியவற்றாலும் வேறு சில ஒரு செல் உயிரிகளாலும் நிமோனியா தொற்று ஏற்படுகிறது. நிமோனியாவைப் பொதுவாக இரண்டு வகையாகப் பிரிக்கலாம். முதல் வகை, சமூகத்தில் இருந்து தொற்றும் நிமோனியா (Community Acquired Pneumonia). இந்த வகையானது, சமூகத்தில் இருந்து ஒரு நபருக்குப் பரவும் தொற்றாகும். ஸ்ட்ரெப்டோ காக்கஸ் நிமோனியே வகை பாக்டீரியாக்கள் சமூகம்வழி பரவும் நிமோனியாவை அதிகமாக உண்டாக்குகின்றன.