

ஒருவருக்கு ஏற்படும் நெஞ்சுவலி, மாரடைப்பு (Myocar dial infarction) வலியாகத் தெரிந்தால் அருகில் இருப்பவர்கள் ஆம்புலன்ஸ் வேகத்தில் இயங்க வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டவருக்கு முதல் ஒரு மணி நேரம்தான் உயிர் காக்கும் ‘பொன்னான நேரம்’. அதற்குள் அவருக்குத் தேவையான எல்லாச் சிகிச்சைகளும் கிடைத்துவிட்டால், மாரடைப்பு ஆபத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
முதல் மூன்று: முதலில், இந்த மூன்று வகை மாத்திரைகளை (Loading Dose) அவருக்குக் கொடுக்க வேண்டும். ஆஸ்பிரின் 325 மி.கி., அட்டார்வாஸ் டேடின் 80 மி.கி., குளோபிடோகிரில் 300 மி.கி. ஆகிய மாத்திரைகளைத் தர வேண்டும். இவை இதயத் தமனியில் அடுத்தடுத்து ரத்தம் உறைவதைத் தடுத்து, பயனாளிக்கு மாரடைப்பு தீவிரமாகாமல் பார்த்துக்கொள்ளும் பாதுகாப்புப் படை வீரர்கள்.