

நெஞ்சில் வலி வந்தாலே ‘மாரடைப்பாக இருக்குமோ?’ என்று பயந்து, மருத்துவரைத் தேடி ஓடுகிறவர்கள் ஒரு ரகம். நடுநெஞ்சில் வலி தொடங்கி, அது இடது கைக்குப் பாய்ந்தாலும், ‘வாயுவாகத்தான் இருக்கும்’ என்று அலட்சியப்படுத்தி, பூண்டு மாத்திரை சாப்பிட்டு, நாள்களைக் கடத்துகிறவர்கள் இன்னொரு ரகம். முதல் ரகத்தில் பயனாளிக்குப் பயம்தான் பிரச்சினை. இரண்டாவதில் மாரடைப்பே பிரச்சினை. இப்படி இல்லாமல், மாரடைப்பின் முகாந்திரத்தைத் தெளிவாகத் தெரிந்துகொண்டால், ‘அச்சமும் இல்லை, ஆபத்தும் இல்லை!’ என்னும் தனி ரகத்தில் சேர்ந்து கொள்ளலாம். அதற்கு நீங்கள் தயாரா?
மக்களைப் பாதிக்கும் தொற்றா நோய்க் கூட்டத்தின் தலைவன் மாரடைப்பு. ஒரு புள்ளிவிவரப்படி சொன்னால், முதல்முறையாக மாரடைப்பு வந்தவர்களில் கால்வாசிப் பேர் சிகிச்சை பெறுவதற்கு முன்பே உயிரிழக்கின்றனர். அப்படியே எல்லா மருத்துவ வசதிகளும் இருக்கிற மருத்துவமனைகளில் இவர்கள் சிகிச்சை பெற்றால்கூட 5% முதல் 7% பேர் வரை சிகிச்சை பலனளிக்கா மல் உயிரிழக்கின்றனர். மாரடைப்பி லிருந்து மீண்டவர்கள்கூடக் காலமெல்லாம் மருந்துப் பொட்டலத்தோடு தான் அலைய வேண்டியிருக்கிறது. அதனாலேயே ‘மாரடைப்பு’ எனக் கேட்ட மாத்திரத்தில் எல்லாருக்கும் அடிவயிறு கலங்கிவிடுகிறது.