

இந்தியாவில் குறிப்பிட்ட சில மாநிலங்களில் உள்ள குழந்தைகள், பலதரப்பட்ட சத்துகளை உள்ளடக்கிய உணவை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாகப் புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. இந்த ஆய்வு முடிவை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் இந்திய தேசிய மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது.
‘பலதரப்பட்ட சத்துகளை உள்ளடக் கிய உணவு, போதுமான அளவு புரதங்களைக் கொண்டது என்பதால் அதைக் குழந்தைகளுக்கு அளிப்பது சிறந்தது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் உத்தரப் பிரதேசம் (86.1%), ராஜஸ்தான் (85.1%), குஜராத் (84%), மகாராஷ்டிரம் (81.9%), மத்தியப் பிரதேசம் (81.6%) ஆகிய மாநிலங்களில் உள்ள குழந்தை களுக்குப் பலதரப்பட்ட சத்துகளை உள்ளடக்கிய உணவு கிடைப்பதில்லை. இதனால், குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறை பாட்டினால் பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது’ என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
தாய்ப்பால், பால், விட்டமின் கே நிறைந்த உணவு (காய்கறிகள், கீரைகள்), பழங்கள், இறைச்சி, மீன், முட்டை, தானியங்கள் உள்ளிட்டவை அடங்கிய உணவே பலதரப்பட்ட சத்துகளைக் கொண்ட உணவு என அழைக்கப்படுகிறது. பிறந்து 6 மாதம் முதல் 23 மாதங்கள் வரையுள்ள குழந்தைகளுக்கு மேற்கூறிய உணவை அளிக்க வேண்டும் என மருத்துவர்களும் பரிந்துரைக் கின்றனர்.