

இளைஞர்களிடம் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலகளவில் அதிகரித்துவரும் நுரையீரல் புற்றுநோய் இறப்புகளைத் தவிர்க்க முடியும் எனப் பிரபல மருத்துவ இதழான லான்செட் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.
உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் நுரையீரல் புற்றுநோய் முக்கியமானது. உலகளவில் அதிகமானவர்கள் பாதிக்கப்படும் புற்றுநோய்களில் நுரையீரல் புற்றுநோய் மூன்றாவது இடத்தில் உள்ளது.
85% பேருக்கு இப்புற்றுநோய் புகைபிடிப்பதனால் மட்டுமே ஏற்படுகிறது. நீண்டகாலமாகப் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள 10 சதவீதம் பேருக்கு நுரையீரல் புற்றுநோய் உறுதியாக வரும் எனத் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் லான்செட் மருத்துவ இதழ் சமீபத்தில் ஆய்வு ஒன்றை நடத்தியது.
அந்த ஆய்வில், ‘40% நுரையீரல் புற்றுநோய் மரணங்கள், ஜனவரி 1, 2006 முதல் டிசம்பர் 31, 2010க்குஇடையில் பிறந்த இளைய தலைமுறையினருக்கு ஏற்பட்டுள்ளன. புகைபிடிக்கும் பழக்கத்தைக் கட்டுப் படுத்துவதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் இறப்பைக் குறைக்க முடியும் என ஆராய்ச்சிகள் உறுதிசெய்கின்றன. குறிப்பிட்ட வருடத்தில் பிறந்தவர்களுக்குப் புகையிலை விநியோகத்தைத் தடை செய்வதை உலக நாடுகள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும். இதன் மூலம் இளை ஞர்கள் படிப்படியாகப் புகைபிடிக்கும் பழக்கத்திலிருந்து வெளியேற நேரிடும். புகையிலை பயன்படுத்தாத தலைமுறையை உருவாக்குவதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினரை நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசு, ஆரோக்கியமற்ற உணவு, வாழ்க்கை முறை போன்றவை நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான பிற காரணங்களாக உள்ளன. சுகாதாரமான வாழ்க்கை முறை, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் நுரையீரல் புற்றுநோயிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.