

சமீப ஆண்டுகளாக மாரடைப்பினால் ஏற்படும் உயிரிழப்பு இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 20 – 35 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் இதய நோய் பாதிப்பு கூடுதலாக இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
இதய நோயால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒரே மாதிரியான அன்றாடத்தைக் கொண்டிருக்கின்றனர். 12 மணி நேரம் வேலை, இரவுப் பணி, வேலை அழுத்தம், முறையற்ற உறக்கம், உடற்பயிற்சிகள் இல்லாமை போன்றவை இதயம் தொடர்பான நோய்களுக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
காரணம்: மன அழுத்தம், பதற்றத்தின்போது நமது உடலில் அட்ரினலின், கார்டிசோல் போன்ற ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். இதன் காரணமாக இதயத் துடிப்பின் வேகம் இயல்பைவிட அதிகமாகும்; ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். நாளடைவில் இந்தச் செயல்பாடுகள் இதயத்தைச் சேதப்படுத்தும்.
ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அதிகரித்து இதயத்தின் ரத்த ஓட்டத்தைப் பாதித்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது. உடற்பயிற்சி இல்லாத நிலையில் உடல் பருமன் அதிகரித்து இதய நோய்கள் ஏற்படுகின்றன.
மேலும், நாள்பட்ட மன அழுத்தமானது இதயத் துடிப்பில் பாதிப்பை ஏற்படுத்தி ரத்த உறைவை உண்டாக்குகிறது. இந்த ரத்த உறைவு, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தைப் பாதித்துப் பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.
வாழ்க்கை முறையில் மாற்றம்: வாரத்திற்கு 55 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்பவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து 13% அதிகமாக உள்ளதாக மருத்துவ இதழான ‘லான்செட்’ ஆய்வு சுட்டிக் காட்டுகிறது.
இதிலிருந்து விடுபட முறையான உணவு, தூக்கத்தைக் கடைப்பிடித்துத் தினசரி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புகைபிடித்தல், மதுப் பழக்கம் ஆகியவற்றிலிருந்து முற்றிலுமாக விடுபடுவது அவசியம்.